“ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும்” என்ற அப்போலோவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களையெல்லாம் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. ‘இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது’ என அப்போலோ குற்றச்சாட்டு முன்வைத்தது.

அதற்கு “நாங்கள் இன்னும் வாதங்களை முழுதாக மேற்கொள்ளவில்லை, எனவே அப்போலோ குறுக்கிடுவதை தடுக்க வேண்டும்” என ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

image

மேலும் ஆணையம் தகவல்களை கசியவிடுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த ஆணையம், “வெளியாட்கள் யாரும் ஆணைய விசாரணையின்போது அனுமதிக்கப்படுவதில்லை. சாட்சியங்களுக்கான ஒரு இருக்கை, ஒரே ஒரு வழக்கறிஞர், ஒரே ஒரு பிடிஐ செய்தியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அலுவகலமும் 200 சதுர அடி அளவே ஆன சிறிய இடம். எனவே அப்போலோவின் ‘வெளியாட்களுக்கு தகவல்கள் கசியவிடப்படுகிறது. வீடியோ ரெக்கார்டிங் செய்து அது கசியவிடப்படுகிறது’ போன்ற குற்றச்சாட்டுகளெல்லாம் உண்மைக்கு புறம்பானவை” என ஆறுமுகசாமி ஆணையம் வாதங்களை முன்வைத்தது.

மேலும், “அரசுக்கும் இந்த ஆணையத்திற்கும் சம்மதம் இல்லை. அரசு சார்பில் சாட்சியங்கள் தான் விசாரிக்கப்படுகிறார்களே தவிர, அரசு ஆணைய விசாரணையில் மனுதாரரோ அல்லது எதிர்மனுதாரரோ கிடையாது” எனவும் ஆறுமுகசாமி ஆணையம் வாதம் முன்வைத்தது.

அப்போது “ஆணையத்திற்கு என்று எதற்காக தனியாக வழக்கறிஞர்? அவர் ஏன் ஆணையத்திடம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்கிறார்?” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, “சாட்சியங்களின் தகவல்கள் முரண்பாடாக இருக்கும் பட்சத்தில் அதனை தான் பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்கிறார். உதாரணமாக அன்றைய சுகாதார செயலாளர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதற்கும், ஆணையத்தில் சாட்சியமாக கூறியதற்கும் வித்தியாசம் இருந்தது. இதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இது அவர் வேலையின் பகுதி” என ஆறுமுகசாமி ஆணையம் பதிலளித்தது.

image

ஆணையத்தில் மருத்துவர்கள் இல்லாததை அப்போலோ சுட்டிக்காட்டியது தொடர்பாக வாதிட்ட ஆணைய வழக்கறிஞர், “ஆணையத்தின் தலைவர்களாக நீதிபதிகளை நியமிக்கும்போது, ‘அவர்கள் மருத்துவ ஆதாரங்களை, நீதித்துறை சார்ந்து ஆராய திறமையானவர்கள் கிடையாது’ என்பதை இந்த நீதிமன்றம் சொல்லிவிட்டு தாராளமாக ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்துங்கள். அப்போது மருத்துவர்கள் உள்ளிட்டோரை ஆணையத்தில் சேருங்கள்” என திட்டவட்டமாக கூறியது. எனினும் “ஆணையத்திற்கு உதவ மருத்துவ போர்டு தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி தமிழக அரசு அதனை செய்யலாம். இந்த போர்டு ஆணையத்திற்கு வேண்டிய உதவிகளை செய்யலாம்: மருத்துவ போர்ட் அமைக்கப்பட்டால் அதற்கான செலவையும் அரசே ஏற்கும்” என வாதிடப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், “மருத்துவ போர்ட் அமைப்பது தொடர்பாகவும், சாட்சியங்களை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த அனைத்து தரப்பையும் அனுமதிக்க வேண்டும் என்ற யோசனைகள் ஆணையம் சார்பில்  முன்வைக்கப்படுகிறது. இதற்கு சம்மதமா என்பதை அப்போலோ சொல்ல வேண்டும். சம்மதமெனில், மருத்துவ போர்டில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்” எனக் கூறினர்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என அப்போலோ கோரியபோது, “தற்போதைய சூழலில் ஆணையத்தில் வேறு நீதிபதிகளை நினைத்தால் அது தற்போதைய ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிப்பதாக இருக்கும்” எனக் கூறினர்.

– நிரஞ்சன் குமார்

தொடர்புடைய செய்தி: “ஆறுமுகசாமி ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்க அப்பல்லோ முயற்சி”- நீதிமன்றத்தில் தமிழக அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.