தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் வடிகால்கள் நிரம்பி, ரோட்டில் மழைநீருடன் கலந்தும் ஓடியும், தாழ்வான பகுதியில் மழைநீர், குளம் போல் தேங்கியும் காணப்படுகிறது.

இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்

இதற்கிடையே நேற்று மாலை பெய்த தொடர் கனமழையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கிழக்கு கிரி பிராகார பகுதியில் கடலரிப்பு தடுப்பு சுவர் திடீரென பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடலோரத்தில் கான்கிரிட் மற்றும் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக சுமார் 20 மீட்டர் நீளமுள்ள தடுப்பு சுவர் கடல் பகுதியில் சரிந்து விழுந்தது.

நல்ல வேளையாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. பின்னர் திருக்கோயில் பாதுகாவலர்கள் அப்பகுதியில் பக்தர்கள் செல்லாதவாறு தற்காலிக தடுப்பு வேலிகள் அமைத்தனர். இந்தப் பகுதியில் பெரும்பாலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த சுவரின் மீது ஏறி நின்று செல்பி எடுப்பதுடன், போட்டோ எடுப்பதும் வழக்கம். ஆனால், பலத்த மழையின் காரணமாக அந்த பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்

பக்தர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதே போல அந்தப் பகுதியில் உள்ள தடுப்புச்சுவர்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2017, டிசம்பர் 14-ம் தேதி கிரிப்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் 4 தூண்களுடன் திடீரென மேற்கூரைக் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில், பிராகாரத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பிராகாரம் முற்றிலும் இடிக்கப்பட்டது. இதையடுத்து புதிய மண்டபம் கட்டிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கான்கிரீட் மண்டபத்திற்குப் பதிலாக கல் மண்டபம் கட்டத் திட்டமிட்டிருப்பதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கல் மண்டபத்திற்கான முழுச்செலவை வெளிநாடுகளில் உள்ள சில பக்தர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தகவல் வெளியானது.

இடிந்து விழுந்த தடுப்புச்சுவர்

ஆனால், அதில் கமிஷன் பிரச்னையால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தற்காலிகத் தகரக் கொட்டகையே அமைக்கப்பட்டது. ஆனால், கல் மண்டபம் கட்ட வேண்டும் என்றால் ஆண்டுக்கணக்கில் வேலை பிடிக்கும். அதற்கு பதில் பழையபடி கான்கிரீட் மேற்கூரையாகவே கட்டி முடித்துவிடலாம் எனவும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.