சிவா தன்னிடம் காதல் சொல்வதற்குள் காயத்ரியினால் ஏதாவது குழப்பம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மாயா இருக்கிறாள். அதனால் தானாக முன்வந்து காயத்ரியிடம் சிவாவின் மாற்றத்திற்காக நன்றி சொல்கிறாள். புனிதா காயத்ரியிடம் மாயாவை நம்பவேண்டாம் என்று எடுத்துச் சொல்கிறாள். சிவா காயத்ரியைத்தான் காதலிக்கிறான் என்பதை காயத்ரிக்கு நம்ப வைப்பதற்காக புனிதா சிவாவுக்கு கால் செய்து ஸ்பீக்கரில் பேசுகிறாள். சிவா மாயா நல்ல பெண் என்றும் தன்னால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்றும் தான் யோசிப்பதாகr; சொல்கிறான். காயத்ரி அதைக் கேட்டு அழுகிறாள்.

AKS

சிவா மாயாவை விட்டு மனதளவில் வெகுதூரம் வந்துவிட்டது அவனுக்கு நன்றாக தெரியும். அதேபோல் அவன் காயத்ரியை முழுமையாக நேசிக்கிறான் என்பதும் அவனுக்குத் தெரியும். காயத்ரிக்கு ஏற்கெனவே நிச்சயம் ஆகிவிட்ட காரணத்தினால் தன்னுடைய காதலை காயத்ரி ஏற்றுக்கொள்ள மறுப்பதால், சிவா அவளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான்.

AKS

அதேபோல் காயத்ரி மாயாவை ஏற்றுக்கொள்ளச் சொல்லி கூறியதால் மாயாவிடம் மீண்டும் இணைவதற்கான முயற்சியை சிவா மேற் கொள்கிறான்.

ஒருவர் கூறியதற்காக இன்னொருவரை ஏற்றுக்கொள்வது என்பது எப்படி காதல் ஆகும்? அப்படியே காயத்ரி சொன்னதற்காக சிவா இன்று மாயாவை ஏற்றுக் கொண்டாலும் மாயாவிற்கும் அந்த உண்மை தெரிகிறது என்கிற சூழ்நிலையில் வருங்காலத்தில் பிரச்னைகள் வரும்போது ஒவ்வொரு முறையும் மாயாவிற்கு காயத்ரி – சிவாவின் காதல் நினைவில் வரும். அது மாயா மற்றும் சிவாவின் இடையில் பிரிவை உண்டாக்கும். ஒருவேளை சிவா மாயாவுடன் மீண்டும் இணைவது என முடிவு செய்தால், ஏற்கனவே கவிதா செய்த தவறை சிவாவும் தற்போது செய்ய இருக்கிறான்.

கவிதாவும் ராஜேஷிடம் அவன் காதலை ஏற்றுக் கொள்வதாக சொன்னதன் பின்னணியில் பொற்கொடி மற்றும் பாண்டியனின் காதல் ஒரு காரணமாக இருந்தது. சிவா மாயாவைக் காயப்படுத்தக்கூடாது என்று நினைப்பதாகச் சொல்கிறான்.ராஜேஷ் கூறியதைப்போல அனுதாபத்தில் அல்லது பரிதாபத்தில் ஏற்படும் உறவில் இருவருக்கும் சமமான இடமும் சுதந்திரமும் இருக்காது. ஒருவர் இன்னொருவருக்கு தானம் இடுவது போன்று காதலை நினைத்துக் கொள்வது மற்றவரை எப்போதும் தாழ்வுணர்ச்சியிலேயே வைத்திருக்கும்.

புனிதா ஏர்போர்ட்டில் இருந்து நேராக அலுவலகம் சென்றுவிட்டதைப் பற்றி இரவு புனிதா வீட்டுக்கு வந்ததும் பரத் கேட்கிறான். தொடர்ந்து கிஷோரும் புனிதாவும் ஒரே அறையில் தங்கி இருந்ததைப் பற்றியும் கேட்கிறான். புனிதா பரத் மீது கோபப்பட்டு, ”ஆமாம் கிஷோர் என்னுடன் தங்கி இருந்தான்” என்று சொல்கிறாள்.

AKS

பரத் புனிதாவிடம் நீ எவ்வளவு கோபப்பட்டு பேசினாலும் என்னிடம் பொய் சொல்ல மாட்டாய் என்று நம்பிக் கொண்டிருந்தேன் என்கிறான். பரத் மனம் வருத்தப்படக்கூடாது என பயந்து பொய் சொன்னதாக புனிதா சொல்கிறாள்.

பரத்தின் சந்தேகம் ஒரு சராசரி ஆணுக்கு ஏற்படக்கூடியது. அதேபோல் தொடர்ந்து பரத் புனிதாவை சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதால் ஒரு கட்டத்தில் பிரச்னையை தவிர்ப்பதற்காகவும் பரத்தின் மனம் வருத்தப்படக்கூடாது என்பதற்காகவும் புனிதா பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள். திடீரென்று அறிமுகமாகும் மூன்றாவது ஆளான கிஷோரின் பேச்சை கேட்டுக் கொண்டு பரத் புனிதாவை சந்தேகப்படுவதும் பரத் சொல்வதை நம்பாமல் கிஷோரின் நடிப்பை புனிதா நம்புவதும் பரத் மற்றும் புனிதாவின் இடையில் இந்த சண்டைகளுக்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.

புனிதாவிடம் கோபித்துக் கொண்டு பரத் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.

அவனைத் தடுக்காமல் அவன் போகும்போது புனிதா கோபத்தில் இப்போதே வெளியே போகுமாறு சொல்கிறாள். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்திருப்பார்கள். லிவ் -இன் டுகெதர் உறவில் இருக்கிறார்கள். புனிதாவைத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று குடும்பமாக வாழ ஆசைப்படுகிறான். இவ்வளவு தூரம் காதலில் பயணம் செய்திருக்கும் இருவர் சாதாரணமாக யாரோ ஒருவன் ஈகோவினால் தூண்டிவிட்ட பிரச்னையை பேசிப் பேசிப் பெரிதாக்கி அதற்காக பிரிந்து செல்கிறார்கள்.

AKS

இதுநாள் வரை இருவருக்கும் இடையில் அன்பும் ஈர்ப்பும் இருந்த அளவு புரிதல் மற்றும் சகிப்புத்தன்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

காயத்ரியின் வீட்டில் சமையல் வேலை செய்பவர் வராத காரணத்தினால் சுந்தர் தானே சமைக்கிறான். சுந்தர் சமைத்து இருக்கும் பாகற்காயை காயத்ரியால் சாப்பிட முடியவில்லை. சுந்தர் அவளை கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறான். வாரம் ஒருமுறை பாகற்காய் எடுத்துக்கொள்ள வேண்டும், சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும், சாப்பிட்டு முடிக்கும் வரை தண்ணீர் குடிக்கக் கூடாது என்று தொடர்ந்து அவளுக்கு சாப்பிடுவதைப் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் பேசுவதை கேட்பதைவிட பாகற்காய் சாப்பிடுவதே எளிது என்று நினைத்து காயத்ரி சாப்பிட முயற்சி செய்கிறாள். சுவையும் ரசனையும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஒருவருக்கு பிடித்த எல்லாமும் மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைத்தான் சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்று யாரும் யாரையும் கட்டளையிடுவது சர்வாதிகாரம்.

அதை அன்பின் பெயரால் வீட்டில் இருப்பவர்களே செய்வதால் அக்கறை என்று எடுத்துக் கொள்ள முடியாது. சுந்தர் தன் அம்மாவிடம் கேட்டு இவற்றை சமைத்ததாகவும் காயத்ரி திருமணத்திற்கு பிறகு தன் அம்மாவிடம் சமையல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான்.

வீட்டுக்கு மருமகளாக வரவிருக்கும் பெண்ணிற்காக மகன் வீடியோ காலில் தன்னிடம் கேட்க சமைப்பதை ஊக்குவிக்கும் சுந்தரின் அம்மாவை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

AKS

தங்கள் மகன் தனக்காக சமைத்துக் கொள்வதையே மிகவும் சிரமமான வேலை என்பது போலவும் சமைப்பது பெண்களின் கடமை எனவும் சொல்லிக் கொண்டிருக்கும் மாமியார்கள் மத்தியில் சுந்தருக்கு அவன் அம்மா ரெசிபி சொல்லி சமைக்க உதவுவது கவனிக்கப்பட வேண்டியது. அதேபோல் சுந்தரின் அக்காவும் கூட காயத்ரியின் மேல் பிரியமாக இருக்கிறாள். ஏற்பாட்டு திருமணம் அல்லது காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் திருமணம் முடித்து வீட்டுக்கு வரும் பெண் மீது ஏற்கனவே வீட்டில் இருக்கும் பெண்கள் அன்பாகவும், அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையுடன் இருப்பது அவசியம். காயத்ரிக்கு சுந்தரின் வீட்டில் அது இயல்பாக வாய்த்திருக்கிறது.

சிவா மாயாவிடம் என்ன சொல்லப் போகிறான்?

பரத்தின் பிரிவை புனிதா எப்படி ஏற்றுக் கொள்ளப்போகிறாள்?

காத்திருப்போம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.