திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பதவியிலிருந்து மருத்துவர் அனுரத்னா நீக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. `விளிம்பு நிலை மக்களுக்காக உழைத்தால் தி.மு.க அரசில் பதவி நீக்கம்தான் பரிசா?’ என்று சமூகவலைத்தளங்களில் பலரும் மருத்துவர் அனுரத்னாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகின்றனர்.

மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியை உடைத்து மக்களில் ஒருவராக அவர்களின் சூழல் அறிந்து அற உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாதவர் மருத்துவர் அனுரத்னா. கிராமங்களில் வீடுகளுக்கே சென்று சிகிச்சை கொடுப்பது, சிகிச்சையைத் தாண்டிய பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுப்பது என முன்மாதிரி மருத்துவராகத் திகழ்பவர். அவரது சேவையைப் பாராட்டி அவள் விகடன் `சேவை தேவதை’ விருது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Doctor (Representational Image)

Also Read: “ஆட்டோலயேதான் என் பிள்ளைங்களப் போட்டு வளர்த்தேன்!” – பெண் ஆட்டோ ஓட்டுநர் சித்ரா

திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்ததாலும், திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தியை எதிர்த்துக் கேள்வி எழுப்பியதாலும் தற்போது மருத்துவர் அனுரத்னாவின் பதவி பறிக்கப்பட்டதாகச் சர்ச்சை வெடித்திருக்கிறது.

இது குறித்து மருத்துவர் அனுரத்னாவிடம் பேசினோம். “2021-ம் ஆண்டு ஜூன் மாதமே திருவள்ளூர் மாவட்டத்தின் மருத்துவத்துறை இணை இயக்குநராகப் பொறுப்பேற்றுவிட்டார் மருத்துவர் சாந்தி. ஆனால் இன்றுவரை திருவள்ளூர் மாவட்டத்தின் மருத்துவர்கள் நலனுக்குரிய (GPF, Increment, Promotion, Arears, Medical leave regularisation, மற்றும் EL sanction ) எந்தக் கோப்புகளிலும் கையெழுத்திடவே இல்லை. இதனால் பல மருத்துவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். சில மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்துக்காக நகைகளையெல்லாம் அடகு வைத்தார்கள். அதையெல்லாம், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

டாக்டர் அனுரத்னா

பலமுறை தனிப்பட்ட முறையிலும், சங்கத்தின் சார்பாகவும் கேட்டுப் பார்த்தேன். ஆனால், அவரிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. எல்லா கோப்புகளும் சரியாக இருந்தாலும் அது சரியில்லை, இது சரி இல்லை என்று ஏதாவதொரு மழுப்பலான காரணத்தைச் சொல்லி வந்தார். இந்தநிலையில், அக்டோபர் 25-ம் தேதி, அன்று இணை இயக்குநரிடம் இதுகுறித்துப் பேசியபோது `நீங்கள் கோப்புகளில் கையெழுத்திடவில்லை என்றால் உங்கள் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபடுவோம்’ என்று சொன்னேன். நான் அப்படிப் பேசியதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து நான் பயிற்சிக்காகச் சென்றுவிட்டேன். பயிற்சி முடித்துவிட்டு நவம்பர் 13-ம் தேதி, திரும்ப வந்தபோது எனது தலைமை மருத்துவர் பொறுப்பினை மீண்டும் எனக்கு வழங்கவில்லை. எனது பயிற்சிக் காலத்தில் எனது பொறுப்பினைப் பார்த்து வந்த மயக்கவியல் மருத்துவர் விஜயபாபுவே அந்தப் பொறுப்பில் தொடரட்டும் என்று இணை இயக்குநர் சொல்லிவிட்டார். நான் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் என்னைப் பழிவாங்குவதாக நினைத்து அப்படிச் செய்திருக்கிறார். என்னைவிட விஜயபாபு 5 ஆண்டுகள் ஜூனியர். ஆனாலும், நான் இந்தப் பிரச்னையை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மருத்துவராக என் வேலையைச் செய்துகொண்டிருந்தேன். ஆனால், இந்தத் தகவல் வெளியில் தெரிந்ததும் மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து முகநூலில் எனக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். எனக்காக இத்தனை பேர் குரல்கொடுப்பார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

அனுரத்னாவுக்கு ஆதரவாகவும், தி.மு.க அரசைக் கண்டித்தும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன். மருத்துவர் அனுரத்னா மீண்டும் இதே மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பொறுப்பில் தொடர்வார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

இந்த விசாரணை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம், “கோப்புகள் ஏன் கையெழுத்தாகவில்லை என்று விசாரித்தபோது, `திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிளர்க் விடுப்பில் சென்றுவிட்டார். அதனால்தான் கையெழுத்தாகவில்லை’ என்று இணை இயக்குநர் பதிலளித்தார். கிளர்க் விடுப்பில் சென்றால் அந்தத் துறையே முடிந்துவிடுமா? அவரவர்களுக்குச் சேர வேண்டிய பணிப்பலன்கள் உரிய நேரத்தில் போய்ச் சேர வேண்டாமா? இனிமேல் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது” என்று அவரை எச்சரித்துள்ளேன்.

மா.சுப்பிரமணியன்

Also Read: `பொதுப் பிரச்னைகளில் பெண்களை இழுக்காதீர்கள்!’ – சந்திரபாபுவுக்கு ஆதரவாக ஜூனியர் என்டிஆர் வீடியோ

அதேபோல, மருத்துவர் அனுரத்னாவிடமும், `ஏதாவது பிரச்னை என்றால், உடனடியாக மேல் அதிகாரிகளிடம் முறையிடுங்கள். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை எனில் என்னிடம் முறையிடுங்கள். ஆரம்ப நிலையிலேயே சமூக வலைதளத்தில் சர்ச்சையை உருவாக்குவது சரியானது கிடையாது’ என்று அறிவுரை கூறினேன். மருத்துவர் அனுரத்னா தலைமை மருத்துவராக அதே மருத்துவமனையில் தொடர்வார். இணை இயக்குநர் சாந்தி இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறப்போகிறார். கடைசி நேரத்தில், அவர் மீது துறை நடவடிக்கை எடுத்தால் அவருடைய ஓய்வுக்கால பலன்கள் பாதிக்கப்படும். அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஈகோவை விடுத்து எல்லோரும் இணைந்து மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று அறிவுரை தெரிவித்துள்ளேன். இனிமேல் பிரச்னை இருக்காது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.