சனி, ஞாயிற்றுக்கிழமை களுக்காக ஏங்கிக் கொண்டிருந்த காலம் அது. வார நாட்களில் விளையாடுவதைக் காட்டிலும் கூடுதல் நேரம் விளையாட கிட்டும் பொன்னான நாட்கள் அதுவே. செல்போன்களின் வருகைக்கு முன்னரான நாட்கள் இவ்வாறே இருந்தது 90களில் பிறந்தவர்களுக்கு.

ஒவ்வொரு காலப்பொழுதுக்கு ஏற்றவாறும், அன்றைய நிதிநிலை கொண்டும், நபர்களைக் கணக்கில் வைத்துமே விளையாடும் விளையாட்டு தீர்மானிக்கப்படும். அவ்வாறு 6 முதல் 8 நபர்கள் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே ‘செவன் ஸ்டோன்ஸ்’ (Seven Stones). விளையாட்டுப் போக்கில் இவ்விளையாட்டு செவன் ஷாட்ஸ் என்றே அழைக்கப்படும்.

Children Playing

பெரும்பாலும் ரப்பர் பந்து வாங்க முடியாத வேளைகளில், கிரிக்கெட் மட்டை இல்லாத வேளைகளில் விளையாடப்படும் விளையாட்டு இதுவே. இங்கு ஒரு பிளாஸ்டிக் பந்து போதும். இரு அணியாக பிரிந்து விளையாடும் விளையாட்டு இது. ஏழு கற்கள் அடுக்கப்பட்டிருக்கும். அதனை குறிவைத்து களைத்த பின் பந்தை எறிந்த அணி எதிரணியிடம் இருந்து பந்து படாதவாறு லாவகமாய் தப்பித்து கற்களை மறுபடியும் அடுக்கி ‘செவன் ஸ்டோன்ஸ்’ என கூறி 3 முறை வட்டமிடுவதே வெற்றிக்கான குறியீடு. அதற்குள் எதிரணியினர் கற்களை அடுக்க முயலும் அணியில் எவரேனும் ஒருவர் மீது பந்து எறிந்து பட்டுவிட்டது எனில் அவ்வணியினர் வெற்றியாளர்களாக கருதப்படுவர்.

குறுக்கு நெடுக்கான வீதிகளிலும், சமயங்களில் ஆள்நடமாற்ற மற்ற சாலைகளிலும் விளையாடும் விளையாட்டானது வீதியையே அதகளமாக்கிவிடும். கற்கள் கலைந்ததும், நபர்கள் ஆளொருப்பக்கம் சிதறுவதும், அதில் சில நபர்களைச் சந்தின் முடுக்கில் சென்று மடக்க முயற்சிப்பது, அதற்குள் எதிரணி கற்கள் அடுக்க முயற்சிப்பது போன்ற நிகழ்வுகள் அரங்கேறும். அவ்வேளையில் சைக்கிளில் அவ்வீதியின் வழி செல்லும் நபர் பின்னே செல்வது, ஆட்டோ செல்லும் வாக்கில் ஒளிந்து கொண்டு செல்வது, எதிரணியை பந்து எறியத் தூண்டி, பந்து வரும் போது லாவகமாய் தப்பிப்பது என்பதாக சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும்.

அமளியில் தொடங்கி அதகளமாக நடைபெறும் ஆட்டம் இது. பல வீடுகளையும், வழியே செல்பவர்களின் உடலையும் மண்டையையும் பதம் பாராது இவ்விளையாட்டு முடியாது! ஒரு பிளாஸ்டிக் பந்து, ஏழு கற்கள், 6 முதல் 8 நபர்களின் குதூகல விளையாட்டாக இருந்தை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்க்கிறது.

பொழுதுபோக்கு என்பதே விளையாட்டு மட்டும்தான் என்று சுற்றித்திரிந்த காலங்கள் அவை. காலங்கள் மாறினாலும், நினைவில் நீங்கா இடம் பிடிப்பவை அவை!

வே.சுந்தர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.