தமிழ்நாடு முழுவதும் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் பருவத் தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. அதற்காக, `கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்தில் 6 நாள்களும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும்´ எனத் திங்கள்கிழமை (22.11.2021) அறிக்கை வெளியிட்டிருந்தது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாள்களும் வகுப்புகள் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டன. “பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கொரோனாவுக்கு முந்தைய கால நடைமுறையில் நடத்தப்படும்” எனத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளிலும் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டது. மதுரையில் கல்லூரி தொடங்கி சில நாள்களிலேயே பருவத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அமெரிக்கன் கல்லூரி அறிவித்தது.

மாணவர்கள் போராட்டம்

‘ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டுத் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது. இந்த செமஸ்டர் தேர்வை மட்டும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது அரசு சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Also Read: மாணவர்கள் விரும்பும் ஆன்லைன் தேர்வு; அரசு அறிவித்திருக்கும் நேரடி தேர்வு; முடிவுதான் என்ன?

சென்னை, கள்ளக்குறிச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ‘ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையோடு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ‘மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு நடத்த வேண்டும்’ என அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் சார்பில் தனித்தனியே அறிக்கை வெளியிடப்பட்டது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டனர். நவம்பர் 20-ம் தேதி மாணவ அமைப்புகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஜனவரி 20-ம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். ஆனாலும் மாணவர்கள் போராட்டம் தொடர்வதோடு சென்னை மெரினாவில் கூடி போராட்டம் நடத்தப்படும் எனவும் செய்திகள் பரவின. மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என்ற செய்தி வதந்தி என்றும் இதுபோன்ற செய்திகளைப் பரப்புபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த காவல்துறை மெரினாவில் மக்கள் கூடுவதற்கு தடைவிதித்ததோடு பாதுகாப்பு பணியில் காவல்துறையை ஈடுபடுத்தியது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

கல்லூரி தேர்வுகள் நடத்துவது தொடர்பான சர்ச்சைகளுக்கான மையப்புள்ளி எது என்ற விசாரணையில் இறங்கினோம்…

நேரடித் தேர்வுகள் தேர்வுகள் வேண்டாம், ஆன்லைனில்தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சிலரிடம் பேசினோம். “ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்காமல் தேர்வை தள்ளி வைத்திருக்கிறது அரசு. இப்படித் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படுமானால் தேசிய பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கவோ போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவோ முடியாது. தமிழ்நாட்டிலேயேகூட மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்படும். ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகள்

நேரடி வகுப்புகளும் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் நடத்தப்பட்டுள்ளன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால விடுமுறையில் ஓடிவிட்டன. பருவத்துக்கான பாடங்கள் இதுவரை முழுவதும் நடத்தி முடிக்கப்படவில்லை” என்றவர்கள்…

Also Read: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்… நேரடியாக நடத்தலாமா, ஆன்லைனில் நடத்தலாமா?! – விகடன் சர்வே முடிவுகள்

நேரடியாகத் தேர்வுகள் நடத்தப்படுமானால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் போகும். இது அரியர் தேர்வுகள் என்ற பெயரில் நிர்வாகத்தினர் கல்லா கட்டவே பயன்படும். முறையாகப் பாடங்கள் நடத்தாமல், பாடத்திட்டத்துக்குரிய நோட்ஸ் எதுவும் கொடுக்காமல் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேரடியாகத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு சிக்கல்களை வைத்துக்கொண்டு நேரடித் தேர்வுதான் என்பதில் அரசு உறுதியாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை” என்றவர்களிடம் அமைச்சருடனான ஆலோசனையில் ஏன் இவற்றைத் தெரிவிக்கவில்லை எனக் கேட்டோம்…

மாணவர்கள் போராட்டம்

“ஆன்லைன் தேர்வு வேண்டாம் எனப் போராடும் எந்த மாணவரையும் அழைத்து அமைச்சர் பேசவில்லை. நாங்கள் உயர் கல்வித்துறை செயலாளரிடம் மட்டுமே எங்களது கோரிக்கையை வைக்க முடிந்தது. அப்படிச் சொல்லப்பட்ட கோரிக்கைகளும் அமைச்சருக்குத் தவறாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன” என்றனர்.

தேர்வு சர்ச்சை குறித்து அமைச்சருடனான ஆலோசனையில் எஸ்.எஃப்.ஐ., ஏ.ஐ.எஸ்.எஃப்., ம.தி.மு.க., வி.சி.க., தி.மு.க உள்ளிட்ட சில மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் பங்கேற்ற மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பேசினோம். “ஆன்லைன் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளன. ஆரம்பம் முதலே எங்களின் கோரிக்கை ஆன்லைன் தேர்வுகள் வேண்டாம் என்பதுதான். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எந்த அமைப்பையும் சாராதவர்கள். அமைச்சருடனான ஆலோசனையில் “தேர்வுகளைக் குறைந்தது ஒரு மாத காலமாவது தள்ளி வைக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ‘ஜனவரி 20-ம் தேதி தேர்வுகள் நடத்தப்படும்’ என உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் தேர்வு – மாணவர்கள் போராட்டம்

போராடும் மாணவர்களைத் தனியார் கல்லூரி நிர்வாகங்களும் தூண்டி விடுகின்றன. எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாணவர்களின் படிப்பை வைத்தும் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்” என்றனர்.

தேர்வு தொடர்பான சர்ச்சை குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயனிடம் பேசினோம்… “கொரோனா காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்திக்கொள்ளப்பட்டுள்ளன. பொது இடங்களில், வழிபாட்டுத் தளங்களில், பொழுது போக்கு இடங்களில் கூடும் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதையொட்டியே கல்லூரிகளைத் திறக்கவும் தேர்வுகள் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எங்களைச் சந்தித்து பெரும்பாலான மாணவர்கள் “ஆன்லைன் தேர்வுகள் வேண்டாம், நேரடித் தேர்வுகளே நடத்துங்கள். ஆனால், கொஞ்சம் கால அவகாசம் மட்டும் வேண்டும்’ என்றனர். அதை ஏற்றுக் கொண்டுதான் ஜனவரி 20-ம் தேதிக்கு தேர்வை ஒத்தி வைத்துள்ளோம். பல்கலைக்கழக விதிகளின் படி ஒரு பருவத் தேர்வை நடத்துவதற்கு 90 நாள்கள் வகுப்புகள் நடத்தியிருக்க வேண்டும். இந்த இடைவெளியில் நிச்சயம் பாடங்களை நடத்தி முடித்து ரிவிசன், மாடல் தேர்வுகள் நடத்திவிடலாம். அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய தேர்வில் ஒரு மாணவரின் சராசரி மதிப்பெண் விகிதம் 35 சதவிகிதம் தான் இருந்தது. அதே ஆன்லைனில் நடத்திய போது சராசரி மதிப்பெண் 90 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம். தமிழ்நாட்டின் பலமே உயர்கல்வியில் மற்ற மாநிலங்களைவிட தரமுடன் இருப்பதுதான். ஆன்லைன் தேர்வுகளால் அதற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிவிட்டது. இதை எப்படி அனுமதிக்க முடியும்?

கார்த்திகேயன் ஐஏஎஸ்
உயர்கல்வித்துறை செயலாளர்

தேர்வைக் கண்டு சில மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அது தேவையில்லாதது. அடுத்தடுத்த பருவங்கள் தள்ளிப் போகும் என்றும் அச்சப்படுகிறார்கள். ஆனால், ஒரு பருவத்துக்கான 90 வேளை நாள்கள் வகுப்பை நடத்த அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும். அதற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்புத்தரத் தயாராக இருக்கிறார்கள். தேவையற்ற அச்சத்தைப் போக்கி படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.