உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை மனதில் கொண்டு, அங்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது மத்திய பா.ஜ.க அரசு. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மூன்று நாள் பயணமாக, கடந்த நவம்பர் 19-ம் தேதி, உ.பி-க்கு வந்திருந்தார் பிரதமர் மோடி. இந்த மூன்று நாள்களில், உ.பி-யின் ஜான்சியில் 3,425 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதோடு, மற்ற சில இடங்களிலும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதேபோல, டி.ஜி.பி-க்கள் மாநாடு உள்ளிட்ட சில அரசு விழாக்களிலும் அவர் கலந்துகொண்டார்.

உ.பி-யில், மூன்று நாள்களும் லக்னோவிலுள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார் பிரதமர் மோடி. அங்கு, நேற்று காலை (நவ. 21) மோடியைச் சந்தித்தார் யோகி ஆதித்யநாத். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டிருந்தார் யோகி. அந்த கவிதையின் மூலம், `புதிய இந்தியாவை உருவாக்க ஆலோசனையில் ஈடுபட்டிருந்தோம்’ எனக் கூறியிருந்தார் அவர். அந்த கவிதை வரிகளோடு, யோகியின் தோளில் கைபோட்டபடி நடந்து கொண்டே மோடி ஆலோசனை வழங்கியதுபோல இரண்டு புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. பா.ஜ.க-வினர் பலரும், `தலைமைப் பண்புக்கான சிறந்த உதாரணம் நம் பிரதமர்தான்!’ என்பது போன்ற வாக்கியங்களோடு இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

மோடி, யோகி ஆதித்யநாத்

Also Read: பெண் வாக்காளர்களை ஈர்க்கும் பிரியங்கா காந்தி! – உ.பி-யில் காங்கிரஸ் கொடி பறக்குமா?!

யோகியின் ட்விட்டர் பதிவு வெளியானதை அடுத்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “அரசியலில் சில விஷயங்கள் மக்களுக்காகச் செய்யப்படுகின்றன. உதாரணத்துக்கு, விருப்பமில்லாமல் ஒருவர் தோளில் மற்றொருவர் கைபோட்டுக் கொண்டு, சில அடிகள் நடப்பது போன்றவை செய்யப்படுகின்றன” என்று ட்விட்டரில் கவிதை வடிவில் கருத்துத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் பி.வி.ஶ்ரீனிவாஸ் யோகி பதிவிட்ட இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்து `வித்தியாசத்தைக் கண்டுபிடியுங்கள்!’ என்று பதிவிட்டிருந்தார். அதில் ஒரு படத்தில், மோடி சால்வை அணிந்திருந்தார். இன்னொரு படத்தில் சால்வை மிஸ்ஸிங்!. இந்தப் பதிவின் கீழ் கமெண்ட்டுகளில், “இயல்பாக நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது. இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட் என்பதால் சால்வை மிஸ்ஸாகிவிட்டது” என்று சிலர் பதிவிட்டிருந்தனர்.

மேலும் சில காங்கிரஸ் ஆதரவாளர்கள், “தேர்தல் நெருங்கிவிட்டதால், மோடியும், யோகியும் நெருக்கமாக இருப்பதுபோல காட்டிக்கொள்ள இந்த ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டிருக்கிறதே தவிர, புதிய இந்தியாவையெல்லாம் இவர்கள் உருவாக்கப்போவதில்லை” என்றும் பதிவிட்டிருந்தனர்.

யோகி, மோடி

Also Read: மோடி Vs யோகி ஆதித்யநாத்… முற்றுகிறதா மோதல்?! – என்ன நடக்கிறது உத்தரப்பிரதேசத்தில்?

பின்னணி என்ன?

இந்தப் புகைப்படத்தை யோகி ஆதித்யநாத் பகிர்ந்ததன் பின்னணி குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், “கடந்த மே, ஜூன் மாதங்களில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், மோடிக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த சமயத்தில் கட்சி மேலிடத்துக்கும் யோகிக்கும் பிரச்னை இருந்துவந்தது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், `யோகி அவராக பா.ஜ.க-விலிருந்து விலகப் போகிறாரா… இல்லை கட்சி மேலிடம் அவரை நீக்கப்போகிறதா? என்று தெரியவில்லை’ எனப் பிரசாரம் செய்தன. கூடவே, `யோகிக்கும் கட்சி மேலிடத்துக்கும் பிரச்னை நீடிப்பதால், மீண்டும் யோகி முதல்வரானால், மாநிலத்துக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வராது’ என்பது போன்ற கருத்துகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த நிலையில்தான், மோடியும், யோகியும் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு நெருக்கமாக இருப்பதுபோல புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. உ.பி-யில் சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிவருவதால், வாக்குகள் எந்த வகையிலும் சிதறிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், `நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’ எனக் காட்டிக்கொள்ளும் வகையில் இந்த ஃபோட்டோஷுட் நடத்தப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.