‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதை மற்றும் வசன உதவிக்காக தான் பெற்ற தொகையைத் திருப்பி அனுப்பியுள்ளார், எழுத்தாளர் கண்மணி குணசேகரன். ‘ஜெய்பீம்’ படம் வன்னியர்களை இழிவுபடுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் உள்பட வன்னியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து கண்மணி குணசேகரன் 2டி தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் சுருக்கம்:

‘விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் இருப்பவன் நான். எனக்கு வாசகராய் அறிமுகமாயிருந்த செந்தில் என்கிற தம்பி, இயக்குநர் த.செ.ஞானவேலை என் இல்லம் அழைத்துவந்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதையானது கம்மாபுரம் காவல்நிலையத்தில் வெகுசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். நானும் அதை கேள்விப்பட்டிருந்தேன். கதையின் களம் விருத்தாசலம், கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்று சொல்லி, பிரதியில் மாற்றி உதவிட வேண்டுமெனவும் சொன்னார்கள்.

கண்மணி குணசேகரன்

எனக்கு திரைக்கதையாடல் பரிச்சயமில்லாத துறையென்பதால் சற்று தயங்கினேன். ஆனபோதும் ஊருக்கே வந்துவிட்டதில் என்னால் தட்ட முடியவில்லை. மேலும் (உண்மை நிகழ்வில் குறவராக இருந்தாலும்) ஆதுபாதற்ற வாயில்லா சமூகமாய் நைந்து கிடக்கும் சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வைச் சொல்கிற படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன்.

எனக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் (திரைக்கதைப் பிரதி அல்ல) படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலி வேட்டை” என்றே இருந்தது. இப்பகுதி சார்ந்த காட்சிகளின் உரையாடல்களும் சற்றேறக்குறைய இம் மக்களின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு அமைந்தது. மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாகத் தெரியவில்லை. அந்தப் பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் உறுதியளித்தீர்கள். படம் ‘எலி வேட்டை’ என பரிதாபம் கொள்கிற தலைப்பாக இருந்ததால் அதற்குமேலும் அந்த பிரதியில் நான் ஊன்றி கவனம் செலுத்தவில்லை.

வட்டார உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு தாங்களாகவே ரூ 50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் செய்தீர்கள்.

இதனிடையில் கம்மாபுரம் பகுதி பச்சைப்பசேலென இருளர் வாழ்வியல் காட்சிக்குப் பொருத்தமாக இராது என விழுப்புரம் பகுதியை தெரிவு செய்து படப்பிடிப்பை முடித்திருந்ததை அறிந்தேன்.

ஜெய்பீம் படம் பற்றிய கண்மணி குணசேகரனின் கடிதம்
ஜெய்பீம் படம் பற்றிய கண்மணி குணசேகரனின் கடிதம்
ஜெய்பீம் படம் பற்றிய கண்மணி குணசேகரனின் கடிதம்

பிறகொருநாள் படம் திடுமென (‘எலி வேட்டை’யிலிருந்து) பெயர்மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என இதழ்களில் விளம்பரம் கண்டேன். தொடர்ந்து ‘தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல்’ செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்.

அண்மையில் படத்தைப் பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தது கண்டு மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்னிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்குப் பேரதிர்ச்சி. என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் அக்னிக் கலசம் போன்ற காட்சிக் குறியீடுகளெல்லாம் இல்லை. மீறி இருந்திருந்தால் உண்மை நிகழ்விற்கு முற்றும் புறம்பான, தேவையில்லாத அந்தப் பகுதியை உங்களிடம் நீக்கச் சொல்லியிருப்பேன்; அல்லது நான் வழக்குமொழியாக்க வேண்டுகோளை நிராகரித்திருப்பேன்.

Also Read: ஜெய்பீம் விவகாரத்தைத் தொடர்ந்து போஸ்டர் சர்ச்சையில் `சபாபதி’ சந்தானம்!

சர்ச்சைக்குள்ளான ஜெய்பீம் காவல்துறை அதிகாரியும், காட்சியும்!

எம் சமூகத்தை வன்முறையாளர்களாகவும் கொலையாளிகளாகவும் வலிந்து திணிக்கப்பட்ட வன்னியர் வெறுப்பரசியலை நீங்கள் கையிலெடுத்து திரைக்கதைப் பிரதியில் சேர்த்துவிட்ட குரூரம் குறித்து நெடும் பதிவொன்றை எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். உடன் ‘பீரியட் படம் என்பதால் ஆர்ட் சைடில் தவறுதலாக வைத்துவிட்டார்களெனவும் அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும் அப்படியிருந்தால் உங்கள் வீடுதேடி வந்திருக்க மாட்டேன், குறிப்பாக என்மீது வருத்தம் வேண்டாமெனவும் சர்ச்சைக்குரிய அந்த காலண்டர் படத்தை நீக்கச்செய்து விட்டதாகவும்’ சொன்னீர்கள்.

அதுபோலவே காலண்டர் காட்சியில் திருத்தம் செய்திருந்தாலும், வன்னிய சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்தக் கொடூரத்தையும் வன்மத்தையும் என்னாலும் அதைப் பார்த்த எம் மக்களாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

படைப்பாளி, கலைஞன் எனச் சொல்லிக்கொள்வோர்க்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும். ‘எலிவேட்டை’ என என்னிடம் காட்டி ‘ஜெய்பீம்’ என நீங்கள் மாற்றுவது உங்களுக்கு சாதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் எலிவேட்டை என்கிற தலைப்பில் இருக்கிற அதே சாதாரண உரையாடல், பெயர்கள், ஜெய்பீம் என அக்னிக் கலச குறியீடுகளோடு வருகிறபோது உக்கிரம் கூடி வேறொரு குரூர ரூபம் கொள்கிறது.

ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா

மறைந்த மாவீரன் காடுவெட்டியார் அவர்களையும் ராசாக்கண்ணு கொலைக்கு நீதிகேட்டு நெடுங்காலம் போராடிய என் சமூகத்தாரையும் சிறுமைப்படுத்தி மற்றும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரை வைத்துத் தாழ்த்தியும் உண்மைக்கு புறம்பான சித்தரிப்புக்கு விளக்கம் கேட்ட அன்புமணியின் கேள்விகளை புறந்தள்ளியுமாய் மௌனம் காக்கும் நீங்களும் உங்கள் நடிகர் சூர்யாவின் செய்கைகளும் என்னைப் பெரும் மனஉளைச்சலாக்குகின்றன.

25 ஆண்டு காலம் எனது எழுத்தில் தவழ்ந்த எம் நடுநாட்டு மொழியை எம் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது. உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறேன். எனவே தாங்கள் அனுப்பிவைத்தத் தொகை ரூ 50000/-ஐ (ரூபாய் ஐம்பதாயிரம்) தங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.