வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. தொடர் கனமழை காரணமாக தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருக்கின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள 909 ஏரிகளில் 404 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவளிக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்களும் அதிகாரிகளும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களுக்கு உதவுமாறு தங்கள் கட்சிகளின் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னை வெள்ளம்

மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்து மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவது தொடர்கிறதுதான் என்றாலும் தற்போதும் சென்னையில் ஏற்பட்டுள்ள பெருமழை வெள்ள பாதிப்புகளுக்கு அரசியல் கட்சிகள் சொல்லும் காரணம் என்ன என விசாரணையில் இறங்கினோம்…

Also Read: சிங்காரச் சென்னை… மழை பெய்தால் தீவு… என்னதான் தீர்வு?

“மழைக்கு முன்னர் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துக் கால்வாய்களும் முறையாகத் தூர்வாரப்பட்டுள்ளன’ என்றார். இப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது ‘நாங்கள் என்ன கையில் மண் வெட்டியோடேவா இருக்கிறோம். மழை நீர் தேங்கியதும் உடனடியாக மண்ணை வெட்டிச் சீர் செய்வதற்கு. இப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குக் காரணம் அ.தி.மு.க ஆட்சிதான். நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு மாதம்தான் ஆகிறது அதற்குள் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதையெல்லாம் முறையாக எடுத்திருக்கிறோம்’ என நழுவப் பார்க்கிறார். பாதிப்பு ஏற்படாதவாறு மழை பொழிவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஆனால், அப்போதெல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு இப்போது அ.தி.மு.க ஆட்சியால்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எங்கள்மீது பழி சுமத்துகிறார்கள். அதுமட்டுமல்ல ‘சென்னை மழைநீரால் இப்படிப் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டித் திட்டம்’ எனப் பழியில் பாதியை அங்கும் மாற்றிவிட்டிருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தால்தான் இவ்வளவு பாதிப்பு என்றால் ராயபுரம், கொளத்தூர் எனச் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் தேங்குவது ஏன்?

மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த்து எடப்பாடி பழனிசாமி

மழை வெள்ள பாதிப்புகளைக் கையாள முடியாமல் திணறும் தி.மு.க எங்கள்மீது குற்றஞ்சாட்டித் தங்கள் தவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள். தேவையில்லாமல் அரசியல் செய்வதைவிட்டுவிட்டு மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்…

அ.தி.மு.க-வினரின் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. புதியதாக எந்தக் கால்வாய்களும் அமைக்கவில்லை. மழைநீர் வடிகால்கள் அமைப்பதாக அ.தி.மு.க நாடகம் ஆடாமல் இருந்திருந்தால் உண்மையில் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. இன்னும் கூடுதல் கவனத்தோடு இந்த மழைக்காலத்தைத் தி.மு.க அரசு எதிர்கொண்டிருக்கும். அ.தி.மு.க-வின் ஊழல் அரசு செய்த வினைக்கான பலனைத்தான் தற்போது சென்னை மக்கள் அனுபவித்து வருகிறார். ‘2015 வெள்ள பாதிப்புக்குப்பிற என்ன செய்துகொண்டிருந்தீர்கள்’ எனச் சென்னை மாநகராட்சியைப் பார்த்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்தக் கேள்வி மாநகராட்சியை நோக்கியதாக இருந்தாலும் உண்மையில் இது அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசை நோக்கிய கேள்வியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாங்கள் அவர்கள்போலக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்வதற்காக அரசு இயந்திரத்தை முழுவதுமாக முடுக்கிவிட்டுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலினோடு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகிய அமைச்சர்களும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதோடு மழை நீரை அகற்றுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

களத்தில் முதல்வர் ஸ்டாலின்

இயற்கைப் பேரிடர் என்பது எதிர்பார்க்காமல் ஏற்படுவது. எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல ‘ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகியிருக்கிறது. எங்களால் என்ன செய்ய முடியும்’ எனப் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கவில்லை என்பதைக் கள நிலவரம் உணர்த்தும். விரைவில் நிலைமை சீராகும். எதிர்காலத்தில் இப்படிப் பிரச்னையே வராது” என விளக்கமளித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.