நாலாப்பக்கத்திலிருந்தும் அரசியல் அம்புகள் பாய்ந்து வரும் நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலைதான் திண்டாட்டமாகியிருக்கிறது. சசிகலா தரும் நெருக்கடிகள் ஒருபக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், கட்சிக்குள் இருந்துகொண்டே தன் பங்கிற்கு ஈட்டியை வீசி வருகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். இந்தச் சிக்கல்களுக்கு இடையே, ‘சசிகலாவால் அதிமுக-வை ஏன் கைப்பற்ற முடியாது’ என தனக்கு நெருக்கமான ஒரு வட மாவட்டச் செயலாளரிடம் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அ.தி.மு.க தலைவர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தன் வாதத்திற்கு மூன்று காரணங்களை அடுக்கியிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி

அந்த மாவட்டச் செயலாளரிடம் எடப்பாடி கூறியிருக்கும் மூன்று காரணங்கள் பற்றி, அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “அந்த வடமாவட்டச் செயலாளரும் எடப்பாடியும் பால்ய கால நண்பர்கள். எம்.எல்.ஏ ஹாஸ்டலில் எடப்பாடி தங்கியிருந்தபோதே, இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்கள். அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, தன் மனதில் எழும் சந்தேகங்கள், கருத்துக்களை அந்த மாவட்டச் செயலாளரிடம் எடப்பாடி மனம் விட்டுப் பேசுவது வழக்கம். அந்தவகையில்தான், சசிகலா குறித்தும் அவரிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி.

Also Read: பற்றவைத்த சசிகலா… அ.தி.மு.க தீபாவளி! – புகையும் பன்னீர்… ‘புஸ்ஸ்…’ எடப்பாடி

‘அ.தி.மு.க-வின் சட்டவிதிகள் மாற்றப்பட்டு, பொதுச் செயலாளர் என்கிற பதவியே நீக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. இதன்படி நான்கு தேர்தல்களையும் சந்தித்துவிட்டோம். இந்தச் சூழலில், சசிகலாவால் அ.தி.மு.க-வை ஒருபோதும் சட்டப்படி உரிமை கோரவே முடியாது. பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கால், நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை முன்னிறுத்தும் சசிகலா, தான் கையெழுத்திட்டு அனுப்பும் லெட்டர் பேடுகளில், ‘அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர்’ என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, நம்மைப் போல கட்சியின் பெயரை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினால், சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

சசிகலா

இரண்டாவது, கழக நிர்வாகிகள் யாரும் அவருடன் இல்லை. அவர் சிறையிலிருந்து சென்னை வந்தபோதும், அம்மாவின் நினைவிடத்திற்குச் சென்றபோதும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்றபோதும், அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் யாரும் அவரைச் சந்திக்கவில்லை. ஆக, மூன்று சந்தர்ப்பங்களில் அவருக்கு கழக நிர்வாகிகள் யாரும் ‘சப்போர்ட்’ செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அவர் கட்சிக்குள் நுழைந்தால், பின்னாலேயே மன்னார்குடி குடும்பமும் நுழைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே சுழலுக்குள் சிக்கிக் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். மூன்றாவது, பன்னீர்செல்வம். கட்சிக்குள் தன்னுடைய இருப்பை பலப்படுத்திக் கொள்ளத்தான், அவ்வப்போது அரசியல் அதிரடியை அவர் அரங்கேற்றுகிறாரே தவிர, சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவரும் மனநிலையில் அவர் இல்லை.

Also Read: பசும்பொன்: மிஸ்ஸான எடப்பாடி, பன்னீர்… உற்சாகமிழந்த அதிமுக; மகனுடன் வந்த வைகோ!

2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் 33 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். அம்மா இல்லாத காலக்கட்டத்திலும் கூட, 66 சீட்களில் வெற்றிப் பெற்றிருக்கிறோம். இரட்டை இலை இல்லையென்றால், இந்த வெற்றிக்கூட இல்லை என்பது பன்னீருக்குப் புரியும். ஆக, சசிகலாவை வைத்து அவர் அழுத்தம் கொடுப்பாரே தவிர, தன் இருப்பை விட்டுக் கொடுக்கவோ, கட்சியை முடக்கவோ பன்னீர் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார். தவிர, பலமான அ.தி.மு.க தான் பா.ஜ.க-வின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் திட்டத்திற்குக் கை கொடுக்கும். டெல்லி நம் பக்கம்தான் நிற்கிறது. ஆக, சசிகலாவால் ஒன்னும் பண்ண முடியாது’ என்று அந்த மாவட்டச் செயலாளரிடம் தன் மனதில் இருந்ததைக் கூறியிருக்கிறார் எடப்பாடி. அவரின் கவனமெல்லாம் எதிர்கட்சித் தலைவராக செயல்படுவதில் மட்டும்தான் இருக்கிறது” என்றனர் அந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

எடப்பாடி பழனிசாமி – சசிகலா – ஓ.பன்னீர்செல்வம்

சட்ட நுணுக்கங்கள், பன்னீரின் மனநிலை, நிர்வாகிகள் மாறாதது என காரணங்களை எடப்பாடி ஒருபக்கம் அடுக்கினாலும், சசிகலா ‘ஃபீவர்’ அ.தி.மு.க-விற்குள் குறைந்தபாடில்லை. விரைவிலேயே, தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறாராம் சசி. அதையொட்டி, அ.தி.மு.க-வுக்குள் சலசலப்புகள் எழுந்தால், அதையும் எடப்பாடி ‘ஈஸி’யான மனநிலையோடு கடந்து செல்வாரா என்பதைப் பொறுந்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.