தன் மகனை போலீஸ் அதிகாரியாக்கச் சிறுவயது முதலே பயிற்சியளிக்கிறார் எக்ஸ் சிபிஐ அதிகாரி பிரகாஷ்ராஜ். தன் மகனைவிடப் பக்கத்துவீட்டுச் சிறுவன் சிறப்பான திறமையுடன் வலம்வர, அவனையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். பின்னர் ஓர் அசம்பாவிதத்தால், இரண்டு சிறுவர்களின் வாழ்வும் வெவ்வேறு திசையில் சென்றுவிட, பின்னாளில் சிங்கப்பூரில் இவர்களே எதிரிகளாகச் சந்தித்துக் கொள்கின்றனர். விட்டுப்போன ஆடுபுலி ஆட்டத்தை மீண்டும் பெரிய லெவலில் இருவரும் ஆட, யார் யாரை வென்றார் என்பதே படத்தின் கதை.

ENEMY | எனிமி

எதிரிகளாகும் நண்பர்கள் சோழன் – ராஜிவ் பாத்திரத்தில் முறையே விஷாலும் ஆர்யாவும் முறுக்கிக்கொண்டு திரிகிறார்கள். தமிழ்ப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து போரடித்துவிட்டதால், நடிகர் மாரிமுத்துவுக்கு இதில் புரோமோஷன் அளித்து சிங்கப்பூர் போலீஸ் ஆக்கியிருக்கிறார்கள். ஆனாலும், அங்கு மளிகைக் கடை வைத்திருக்கும் விஷால்தான் ‘துப்பறிவாளன்’ அனுபவத்துடன் எல்லா துப்பையும் துலக்குகிறார். ஆம், சூப்பர்மார்க்கெட் வைத்திருந்தாலும் போலீஸுக்கான பாடி லேங்குவேஜிலேயே சுற்றுகிறார். படத்தின் கருவுக்கு அது செட்டானாலும் சிங்கப்பூர் போலீஸுக்கே உதவுவது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கூட்டத்தின் பாதுகாப்பு அம்சங்களை அவர்களே விஷாலிடம் சொல்லி உதவிக் கேட்பது என… இதெல்லாம் எதுக்கு பாஸ்? பேசாம விஷாலை போலீஸ்னே காட்டிருக்கலாமே?! இதற்கான காரணமாகத் தம்பி ராமையாவின் ‘ரிஸ்க்’ ராமலிங்கம் பாத்திரம் இருந்தாலும் அவரின் தர்க்கங்களும் அழுத்தமாகப் பதியப்படவில்லை.

வழக்கம்போல் ஃபிட்டான ஆர்யா ஸ்டன்ட் காட்சிகள், கோபக்கனலாய் வெடிக்கும் காட்சிகள் போன்றவற்றில் சிறப்புச் செய்திருக்கிறார். ஹீரோ விஷாலும், வில்லன் ஆர்யாவும் செம ஸ்மார்ட்டானவர்கள் என்பதை நொடிக்கு ஒருமுறை வசனங்கள் மூலம் பதிய வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் உண்மையில் அவ்வளவு புத்திசாலித்தனமாக இல்லை. விஷாலுக்கு நெருக்கமானவர்களை ஆர்யா கடத்துவதும், ஆர்யாவுக்கு நெருக்கமானவரை விஷால் கடத்துவதுமாகப் போகும் இரண்டாம் பாதி அலுப்பு. இதில் ஹேக்கிங் என்ற பெயரில் டெராபைட் கணக்கில் காதில் பூ சுற்றுகிறார்கள். படத்தில் ஆர்யாவால் ஹேக் செய்யமுடியாது என எதுவுமே இருக்காது போல. இதை விடுங்கள்… ‘Glowing Paint’ வைத்து ஒரு மாஸ் சீன் வைத்திருக்கிறார்கள். செம போங்கு பாஸ்! எல்லாவற்றுக்கும் மேலாக பிட்காயின் செலுத்தி ஹிட்மேனை அசைன் செய்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு ஸ்விஸ் பேங்குக்கு அடுத்து ஒரு ‘தேல்பத்திரிசிங்’ டெம்ப்ளேட் கிடைத்துவிட்டதுபோல!

ENEMY | எனிமி

சீனா வில்லன்/அசாசின் என ஒரு ஜீவன் படத்தில் அவ்வப்போது தலை காட்டுகிறார். சைனீஸ் மாங்க் போல் அமைதியாகத் தெரிந்தாலும், டெரரான விஷயங்களை அசால்ட்டாக செய்கிறார். ஆனால், இந்தியா எப்போது வல்லரசு ஆகும் என்பது வரை அறிந்து வைத்திருக்கும் ஆர்யவிஷாலால் இவரைக் கணிக்க முடியாமல் போய்விடுவது என்பது வரலாற்றுச் சோகம். இந்த ஹிட்மேனைக் கையில் வைத்திருக்கும் கும்பல் முடிவு எடுக்க வேண்டும் என்றால் வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு எடுப்பார்கள். ஆனால் அந்த தலைவர்களின் ஒரே வேலை யாரைப் போட்டுத்தள்ள வேண்டும் என யோசிப்பது. இதெல்லாமா பிசினெஸு?!

Also Read: Annaatthe விமர்சனம்: சென்னையில் வதம் செய்தால் திருப்பாச்சி, கல்கத்தாவில் காப்பு கட்டினால் அண்ணாத்த!

பிளாஷ்பேக் காட்சி ஒன்றுண்டு. அட… ஸ்பாயலர் எல்லாம் இல்லை. சதுரங்கத்தில் குட்டி ஆர்யா, குட்டி விஷாலை வென்றுவிட, குட்டி விஷால் அப்படியே மனம் ஒடிந்து உட்கார்ந்துவிடுகிறார். அதற்குள் குட்டி ஆர்யா ஒரு ஸ்கெட்ச் போட்டு, ஒரு சம்பவம் செய்து, அதற்கேற்ப நடித்து, அடித்து, சண்டை போட்டு, பழிவாங்கி, அண்ணா நகரில் அரை கிரவுண்ட் இடம் வாங்கி எனக் காட்சிகளை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். படத்தில் ஆங்காங்கே 5 ஸ்டார் சாக்லேட் ரெஃபரென்ஸ் வருகிறது. 5 ஸ்டார் சாப்பிடுபவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் மெய் மறந்து அதைச் சாப்பிடுவார்கள் போன்ற விளம்பரங்கள் வருவதுண்டு. அப்படியாவது அந்தக் காட்சியை எடுத்திருக்கலாம். அதிபுத்திசாலிகளான குட்டி ஆர்யாவும், குட்டி விஷாலும் ஆடும் சதுரங்கத்தில் போர்டே தவறாகத்தான் இருக்கிறது என்பது தனிக்கதை.

ENEMY | எனிமி

மிர்னாலினி – விஷால் காதல் காட்சிகளை நீக்கினாலும் கதைக்குப் பெரிய பாதிப்பு வராது என்கிற அளவில்தான் அவை வந்துபோகின்றன. இலவச இணைப்பாக இவர்களுக்கு இரண்டு டூயட் பாடல்களும் உண்டு! முக்கியமான பாத்திரமாகக் காட்டிவிட்டு, பின்னர் மம்தா மோகன்தாஸும் வீணடிக்கப்பட்டிருக்கிறார். தமனின் இசையில் ‘டம் டம்’ பாடல் தாளம்போட வைக்கிறது. சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினாலும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, மேக்கிங் பக்கா எனச் சொல்லவைக்கிறது.

ஒரு ஐடியாவாக ‘அடடே’ சொல்லவைத்தாலும், கதை, திரைக்கதையாக அது சரியாகப் பரிணாம வளர்ச்சி அடையவில்லை. பிரதான இரண்டு பாத்திரங்கள் தவிர பல்வேறு கதாபாத்திரங்கள் சும்மா வந்துபோக மட்டுமே செய்கின்றன. கான்செப்ட் கிடைத்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு ஷூட்டிங் சென்றுவிட்டதாகவே உணர வைக்கிறது இந்த ‘எனிமி’. இன்னும் உட்கார்ந்து யோசித்திருக்கலாம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.