இன்று, இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் 37-வது நினைவுதினம். அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவால் 1950-ம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1964-ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு இறந்தபோது, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதோடு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 1966-ல் லால்பகதூர் சாஸ்திரி மரணத்துக்குப்பின் இந்தியாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1984-ல் படுகொலை செய்யப்படும் வரை நான்கு முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பசுமைப் புரட்சித் திட்டத்தைக் கொண்டுவந்தது, வங்கிகளைத் தேசியமயமாக்கியது வங்கதேச உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியது, பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை நடத்தக் காரணமாக இருந்தது என இந்திரா காந்தியை நினைவில் கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், ஆளுமைமிக்க பெண் தலைவர் என்பதுதான் இன்றளவும் அவருக்கான அடையாளமாக இருக்கிறது. ‘இந்திரா காந்தி போன்றவர்’ என்று சுட்டிக்காட்டப்படுவதே தற்போது ஆளுமை மிக்க பெண்களுக்கான அடையாளமாகியிருக்கிறது.

இந்திரா காந்தி

அரசியல் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இந்திய அரசியலில் அவருக்கான வாய்ப்புகளும் இடங்களும் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. .

Also Read: “இந்திரா காந்தி – மோடி… என்ன வேறுபாடு?” – ராகுல் காந்தி

இந்திரா பிரியதர்ஷினி காந்தி இதுதான் அவரது இயற்பெயர். தனது 12-ம் வயதிலேயே அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர்களுடன் இணைந்து ‘வானரசேனா’ என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டனர் சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைப் பரப்புப் பிரசுரங்களைப் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சேர்த்தார். சுதந்திரமடைந்து ஜவஹர்லால் நேரு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதும் அவர் சென்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இந்திரா காந்தியும் உடன் சென்றார். அப்போது வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைக் கையாளும் பொறுப்பு இந்திரா காந்திக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படி இளமைக் காலத்திலேயே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். 1971-ம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் இன்றைய வங்கதேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என வங்கதேசத்து மக்கள் குரல் எழுப்பினார்கள். அப்போது பாகிஸ்தான் அரங்கேற்றிய பல்வேறு கொடுமைகளிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு இடமளித்ததது. அதையொட்டி நடந்த போரில் 13 நாள்களில் பாகிஸ்தானை வீழ்த்தியதோடு வங்கதேசம் என்ற நாடு உருவாகவும் காரணமாக இருந்தார் இந்திரா காந்தி. வரலாற்றில் இன்று வரை மிகக் குறுகிய காலத்தில் நடந்து முடிந்த போர் இதுதான்.

நேரு, இந்திரா

நேரு எப்படி இந்தியாவின் பெருமையை உலக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தினாரோ, அதேபோல இந்தியாவின் அதிகாரத்தை இந்திரா காந்தி உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார். இந்த துணிச்சலான நடவடிக்கைக்குப்பின், இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்தது. சிக்கிம் மாநிலத்தை இந்தியாவோடு இணைத்தவர் இந்திரா காந்திதான். இந்த ஒப்பந்தத்தை இப்போதுவரை எந்த நாட்டிலும் எந்த நீதிமன்றத்திலும் விவாதிக்க முடியாத வகையில் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவோடு இணைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்தும் அணுகுண்டு சோதனை நடத்தியிருந்த நேரத்தில் இந்தியாவாலும் அணுவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வெடிகுண்டுகள் இருக்கின்றன என்பதை உலகத்துக் காட்டியவர் இந்திரா காந்தி. மேலும், பொக்ரானில் அணுகுண்டு சோதனையும் நடத்திக் காட்டினார். 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றியவர் இந்திரா காந்தி. அவர் தனது செயல்களுக்காக நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அவர் தனது முடிவுகளுக்கு விசுவாசமாக இருந்தார். அவசரநிலைக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடத்திய தாக்குதல் சீக்கிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்துதான் அக்டோபர் 31-ம் தேதி 1984-ம் ஆண்டு அவரது மெய்க்காப்பாளர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி உடல்

ஒரு நம்பிக்கைக்குரிய, தைரியமான தலைவர் இந்திரா காந்தி. ஆனால், அவரின் சில தவறான முடிவுகள் அவரைச் சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாகக் காட்டியது. வரலாற்றில் இந்திரா காந்தி செய்தவற்றை மாற்றியமைக்க முடியாது என்றாலும் அவரது பல முடிவுகளுக்காகவும் அவரது ஆளுமைக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படும் இடத்தில் நிச்சயம் இருப்பார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.