திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கொக்கலாடி அரக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு, இதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் தன் நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார். அந்த நிலத்தில் ராமமூர்த்தி விவசாயம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, வேலாயுதம், ராமமூர்த்தி இருவருமே உயிரிழந்து விட்டனர். ஆனால் வேலாயுதம் குத்தகைக்கு விட்ட நிலம், ராமமூர்த்தியின் குடும்பத்தினரிடமே தொடர்ந்து இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், வேலாயுதத்தின் மருமகள் விமலா, தன் மாமனார் கொடுத்த நிலத்தைத் திருப்பித் தருமாறு ராமமூர்த்தியின் மகன் ரவி மற்றும் அவர் மனைவி ரேணுகா ஆகியோரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அந்த நிலத்தைத் திருப்பி தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

திருத்துறைப்பூண்டி

இது தொடர்பாக , இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாள்களாக பிரச்னை நீடித்து வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேளாண் கூட்டுறவு வங்கி விவகாரம் தொடர்பாக, ரவி குடும்பத்தினர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த விமலா, சர்ச்சைக்குரிய குத்தகை நிலத்தில் வேலி அமைத்து விவசாயப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரவி குடும்பத்தினர், அன்று மாலை விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கின்றனர்.

அப்போது, அந்த நிலத்தில் விமலா குடும்பத்தினர் விவசாயப் பணிகள் செய்து வந்ததைக் கண்டு, ஆத்திரமடைந்த ரேணுகாதேவி குடும்பத்தினர், அவர்கள் அமைத்திருந்த வேலியைப் பிரித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், விமலா தரப்பினருக்கும், ரேணுகா தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், கைகலப்பாகமாறி அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட விமலா

இந்த மோதலின் போது, விமலாவின் உடலில் மிகக் கொடூரமாகக் கத்திக் குத்து விழுந்திருக்கிறது. அதில், விமலா ரத்த வெள்ளத்தில் மயங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்த, திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல்துறை ஆய்வாளர் கழனியப்பன், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர், விமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரேணுகாதேவி, அவர் கணவர் ரவி மற்றும் ரவியின் சகோதரர்கள் கண்ணன், முத்துராஜா ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.