முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், “வரும் 29-ம் தேதி காலை 7 மணிக்கு அணையிலிருந்து நீர் திறக்கப்படும்” என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான போது நீர்மட்டம் 137 அடி மட்டுமே இருந்தது. அணையில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை. தேனி மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் அறிவித்தப்படி, இன்று காலை 7 மணிக்கு 3 மற்றும் 4-வது மதகுகள் வழியாக 534 கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம் ரூல் கர்வ் விதிப்படி 139.50 அடி வரை நிலை நிறுத்த உத்தரவிட்டுள்ளது என்கின்றனர். இன்று காலை நிலவரப்படி நீட்மட்டம் 138.70 மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் வெளிநடப்பு

Also Read: முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் ஆய்வு, தொடர் கோரிக்கை… இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு!

இத்தகையை சூழலில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, வனத்துறை மற்றும் பொதுப்பணி அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அப்போது விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், “எச்சரிக்கை அறிவிப்பு 140 அடி வந்தால் மட்டுமே வெளியிடவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் 134 அடி நிரம்பியதும் ஏன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கூட எவ்வித தகவலும் சொல்லாமல் பொதுப்பணித்துறை தன்னிச்சையாக செயல்படுகின்றனர் என குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த ஆட்சியர் முயன்றார். ஆனால் அதையேற்காத விவசாயிகள், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்ததற்கு ஒத்துழைத்த தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு மொத்தமாக வெளியேறினர். ஆட்சியர் மேடைக்கு அருகே உள்ள வாயில் வழியாக செல்ல முயன்றவர்களை, எதிரே உள்ள வாயில் வழியாக செல்லுங்கள் என ஆட்சியர் வழியனுப்பி வைத்தார்.

விவசாயிகள்

Also Read: முல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்!’ – கொந்தளிக்கும் விவசாயிகள்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையை 90 சதவிகிதம் தாரைவார்த்துவிட்டது. அங்கிருக்கும் 3 அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டுவிட்டால் முழுவதும் அணை அவர்களின் வசம் சென்றுவிடும். 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள அணைக்கு 126 ஆண்டுகள் கடந்துள்ள போதே இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசு உரிய உத்தரவிடாமல் இதுபோன்ற செயல்களில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதை கறுப்பு நாளாக பார்க்கிறோம். தமிழகத்தில் இருந்து யாரையும் அழைக்காமல் அமைச்சர், எம்எஏக்கள், இடுக்கி ஆட்சியர் என மொத்தம் 150 பேர் அணை திறப்புக்கு சென்றுள்ளனர். ஆனால் தேனி ஆட்சியர் சாதாரண நாள்களில் கூட சென்று பார்வையிட முடியாத நிலை உள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கையால் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படவுள்ளது. இதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தது. தேனி மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் கூட இவ்விவகாரம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசுவது இ்ல்லை. விவசாயிகள் மட்டுமே போராடி வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நாளை முதல் தொடர் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.