கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் சி.பி.எம் கட்சியின் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதே ஆன நாட்டின் இளம் பெண் மேயர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆர்யா ராஜேந்திரன். அவர் மேயராகப் பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை நெருங்கும் நிலையில் மக்களின் வரிப்பணத்தை திருவனந்தபுரம் மாநகராட்சி கையாடல் செய்ததாகப் புகார் கிளம்பியது. இதுபற்றி விசாரணை நடைபெற்று ஒருசில ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பில் கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டி மூலம் விளக்கமளித்த ஆர்யா ராஜேந்திரன், “பணம் கையாடல் செய்ததாகச் சில விபரங்கள் இருந்ததால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஆதாரம் இல்லாமல் எந்த அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்ய முடியாது” என விளக்கம் அளித்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி கே.முரளீதரன்

இந்த நிலையில் கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகனும், காங்கிரஸ் எம்.பி-யுமான கே.முரளீதரன் நேற்று சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். “அரைத் திருடனும் முக்கால் திருடனும் சிம்மாசனத்தில்… என்ற பாடலை எங்களை பாட வைக்காதீர்கள் என மேயர் ஆர்யா ராஜேந்திரனிடம் கேட்டுக்கொள்கிறேன். மேயர் பார்க்க நல்ல அழகாக இருக்கிறார். ஆனால் அவர் வாயில் இருந்து வருவதெல்லாம் `கொடுங்ஙல்லூர் பரணி பாட்டை’ விட பயங்கரமான வார்த்தைகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கேரளத்தில் யாராவது அதிகமாக கெட்டவார்த்தைகள் பேசுபவர்களாக இருந்தால் அவரைப் பார்த்து `கொடுங்ஙல்லூர் பரணிப்பாட்டு பாடாதிங்க’ எனச் சொல்லுவது வழக்கம். அந்த சொலவடையை கே.முரளீதரன் எம்.பி பயன்படுத்தியது சி.பி.எம் கட்சியினரைக் கொதிப்படையச் செய்தது. இதுகுறித்து சி.பி.எம் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பன் கூறுகையில், “திருவனந்தபுரம் மேயர் பற்றி கே.முரளீதரன் பேசிய கருத்துக்கள் பெண்ணியத்துக்கு எதிரானதும், தரம் தாழ்ந்ததும் ஆகும். எனவே அவரைக் கைது செய்ய வேண்டும்.

Also Read: ‘சகாவு’ ஆர்யா ராஜேந்திரன் நாட்டின் இளம் மேயர்!

மேயர் ஆர்யா ராஜேந்திரன்

பரணிப்பாட்டுக்காரி என மேயரைப் பற்றிக் கூறியது முரளீதரனுக்கு நன்றாக பொருந்தும் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அதை அவரது நண்பரே சொல்லியிருக்கிறார். முரளீதரனைப் போன்ற ஒரு எம்.பி இதுபோன்று தரம் தாழ்ந்த அறிக்கையை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி கேரள மாநில காங்கிரஸ் தலைவரின் நிலைபாடு என்ன என்று கேட்க முடியாது. ஏனென்றால் அவரைப்பற்றி வரும் தகவல்கள் இதைவிட மோசமானது. இதுதான் காங்கிரஸின் கலாசாரம் என்பதை அக்கட்சி தொண்டர்கள் உணர்ந்துகொள்வது நல்லது” என்றார்.

இந்த நிலையில் கே.முரளீதரன் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் புகார் அளித்திருக்கிறார். சட்ட ஆலோசனைக்கு பிறகு வழக்குப் பதிவது சம்பந்தமாக போலீஸார் முடிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த எம்.பி கே.முரளீதரன், “இதுசம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனவும் கூறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.