“எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதாக ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ், சசிகலாவை இழிவுபடுத்தி பேசிய எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?” என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மயுத்தம்

நேற்று மதுரை வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், ‘யாரையும் கண்ணியக் குறைவாக பேசக்கூடாது. அரசியல் நாகரிகத்துடன் பேசவேண்டும், செயல்பட வேண்டும். அது தான், அதிமுகவின் கொள்கை. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்’ என்று பேசியிருந்தார்.

அவருடைய பேட்டி அதிமுக-வுக்குள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சசிகலாவுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் ஓ.பி.எஸ் தலைமையில் நிர்வாகிகள் அணி சேர்வதாகவும் சொல்லப்படுகிறது.

ஓ.பி.எஸ் – சசிகலா

இது தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “சசிகலாவை எடப்பாடி உள்ளிட்டவர்கள் மிகவும் இழிவாக பேசி வருகிறார்கள். இதேபோல், திமுக எம்.பி ஆ.ராசா எடப்பாடியாரின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தார்கள். ஓ.பி.எஸ்ஸும் கண்டனம் தெரிவித்து எச்சரித்திருந்தார். அதற்கு ஆ.ராசாவும் தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார்.

Also Read: சசிகலா: அமமுக வரவேற்புடன் சுற்றுப்பயணம்; அதிமுகவை அசைக்குமா இந்தப் புதிய ‘மூவ்’?

அப்படி ராசாவை எச்சரித்த ஓ.பி.எஸ், சசிகலாவை தரம் தாழ்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமியையும் உடனே கண்டித்திருக்க வேண்டும். ஆனால், ஒருவாரம் கழித்துதான் அதை குறிப்பிட்டு பேசுகிறார். இதற்கு காரணம், இடஒதுக்கீடு விவகாரத்தால் ஏற்கெனவே அதிமுக தலைமை மீது ஆத்திரத்தில் இருக்கும் முக்குலத்தோர் மக்கள், சசிகலாவை எடப்பாடி இழிவுபடுத்தி பேசியதால் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த கோபம் தேவர் குருபூஜைக்கு இவர்கள் செல்லும்போது கடும் விளைவை ஏற்படுத்தும் என்ற பயத்தால் தான் ஓ.பி.எஸ் இப்படி பேசுவதுபோல் தெரிகிறது.

புகழேந்தி

அது மட்டுமல்லாமல் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது சம்பந்தமாக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் கூறியிருக்கிறார். எந்த நிர்வாகிகள் ஆலோசிப்பார்கள்..?, எந்த தேதியில் கலந்து பேசுவார்கள் என்பதை அவர் கூறவில்லை. இதையெல்லாம் தெளிவுபடுத்தினால் தான் ஓ.பி.எஸ்ஸின் பேச்சை உண்மையான அதிமுக தொண்டர்கள் நம்புவார்கள். இல்லையென்றால் இது தேவர் குருபூஜைக்கான ஸ்டண்ட்டாக மட்டும் தான் பார்க்க முடியும்” என்றார்.

சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்த ஓ.பன்னீர்செல்வமே அவருக்கு எதிராக பேசாதது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.