ஐபிஎல்-லில் புதிதாக பங்கேற்க இருக்கும் இரண்டு அணிகளை பற்றிய செய்திகளே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லக்னோ அணியை 7,090 கோடி ரூபாய்க்கு RPSG நிறுவனமும் அகமதாபாத் அணியை 5,625 கோடி ரூபாய்க்கு CVC Capital நிறுவனமும் ஏலத்தில் வாங்கியுள்ளன. ஒரு ஐபிஎல் அணிக்கு இவ்வளவு பெரிய தொகையா என வியப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வியப்போடு சேர்த்து, இத்தனை ஆயிரம் கோடிகளை முதலீடு செய்யும் நிறுவனங்கள் எப்படி லாபம் பார்க்கின்றன என்ற கேள்வியும் எழும். அதைப் புரியவைக்க டிவிட்டரில் ஒரு பெரிய பதிவிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் ஶ்ரீநிவாஸ் ராவ். அது இங்கே…

2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்தன. இந்த 8 அணிகளையும் மொத்தமாக 2900 கோடிக்கு பிசிசிஐ விற்றிருந்தது. அதிகபட்சமாக மும்பை அணி 111.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போயிருந்தது. குறைந்தபட்சமாக ராஜஸ்தான் அணி 67 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போயிருந்தது. 2008-ல் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 40 ரூபாயாக இருந்தது. ஆக, அந்த அணியின் அப்போதைய இந்திய மதிப்பு சுமார் 268 கோடி.

ஏலத்தில் அணிகளை எடுத்த நிறுவனங்கள் மொத்தத் தொகையையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. 10 வருடங்களுக்குள் பிசிசிஐக்கு மொத்த தொகையையும் செட்டில் செய்தால் போதும். இதற்கு வட்டி எதுவும் கிடையாது. ஆனால், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு சந்தா போன்றும் பிசிசிஐக்கு அணிகள் செலுத்தியாக வேண்டும். No Cost EMI போல!

2008-ல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைக்காட்சி உரிமையை சோனி நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு 8200 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ விற்றிருந்தது. 200 கோடி ரூபாய் கொடுத்து டைட்டில் ஸ்பான்சரானது DLF நிறுவனம் சேர்ந்தது.

ஐபிஎல் கிரிக்கெட்

இவற்றின் மூலம் பிசிசிஐயின் மொத்த வருவாய் 8400 கோடி ரூபாய். அணிகளுக்கான வருவாய் இந்த இடத்திலிருந்தே வருகிறது. பிசிசிஐக்கு வருவாயாகக் கிடைக்கப்பெற்ற இந்த 8400 கோடியிலிருந்து 8 அணிகளுக்கும் பங்கு அளிக்கப்பட்டது.

அதாவது, முதல் 3 வருடங்களுக்கு 80% வருவாய் அணிகளுக்கும் 20% வருவாய் பிசிசிஐக்கும் எனப் பிரிக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த பிரிப்பு சதவீதம் 70% – 30% என்று ஆனது. அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 60-40 என பிரிக்கப்பட்டது. 10வது ஆண்டிலிருந்து 50-50 என்ற வகையில் பிசிசிஐயும் அணிகளும் வருவாயை பிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அணிகளுக்கு வழங்கப்படும் 50% வருவாயில் எட்டு அணிகளுக்கும் சம பங்கே வழங்கப்படும். ஏலத்தில் எடுத்த நிறுவனங்களும் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் அணிகளுக்கு அதிக பங்கு அளிக்கப்பட்டது. ஆறேழு வருடங்களில் நிறுவனங்கள் தங்களின் முதலீடை ரிட்டர்ன் எடுத்துவிடவே வருவாய் பங்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு இப்போது வரை 50-50 என்ற ரீதியில் இருக்கிறது.

2018-ம் ஆண்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 5 ஆண்டுகளுக்கு ஸ்டார் நிறுவனம் 16,347 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. டைட்டில் ஸ்பான்சராக 2200 கோடி ரூபாய் கொடுத்து VIVO உள்ளே வந்தது. அதிகாரபூர்வா பார்ட்னர்ச்களாக ஐந்து நிறுவனங்கள் 40 கோடி ரூபாய் கொடுத்து உள்ளே வந்தனர். ஐபிஎல் மூலம் பிசிசிஐயின் வருமானம் ஏறக்குறைய 19,500 கோடி ரூபாயாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

ஐபிஎல் கோப்பை

2008-ல் தொலைக்காட்சி உரிமை தொகையையும், 2018-ல் தொலைக்காட்சி உரிமை தொகையையும் ஒப்பிட்டு பாருங்கள். அந்த 10 ஆண்டுகளில் ஐபிஎல் அசுர வளர்ச்சியடைந்ததை அதன்மூலம் புரிந்துக் கொள்ள முடியும்.

பிசிசிஐயின் வருமானமான 19,500 கோடியில் ஐம்பது சதவீதமான 9750 கோடி ரூபாய் எட்டு அணிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இதன்மூலம், 2018 முதல் 2022 வரை அணிகளுக்கு ஆண்டுக்கு 244 கோடி ரூபாய் வருவாயாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: புதிய ஐபிஎல் அணிகளை வாங்கிய 2 நிறுவனங்கள்… அதில் ஒரு நிறுவனத்தைச் சுற்றி இத்தனை சர்ச்சைகளா?!

இதுபோக அணிகள் தங்களுக்கான ஜெர்சி ஸ்பான்சர்கள், மைதானங்களின் டிக்கெட் விற்பனை ஆகியவற்றின் மூலம் ஏறக்குறைய ஆண்டுக்கு 50 கோடியை வருவாயாக பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு அணியின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 300 கோடியாக இருக்கும். இதில், வீரர்களுக்கு ஊதியமாக அணிகள் 90 கோடி ரூபாயை செலவளித்துவிடும். இதுபோக சீசன் நடைபெறும்போது, வீரர்களுக்கான வசதிகள், அணிக்காக ஆகும் இதர செலவுகள் எனக் கிட்டத்தட்ட ரூ.35-50 கோடியை ஒவ்வொரு அணியும் செலவளிக்கிறது. இதுபோக, உள்ளூர் கிரிக்கெட் போர்டுக்கு ஒரு போட்டிக்கு 50 லட்சம் என 7 போட்டிகளுக்கு 3.5 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும். மேலும், தங்களின் வருவாயில் இருபது சதவீதத்தை உள்நாட்டு கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பிசிசிஐக்கு ஒவ்வொரு அணியும் கொடுக்க வேண்டும்.

BCCI – IPL New Teams Auction

ஒட்டுமொத்தமாக ஒரு அணி 145-150 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிவரும். ரூ.300 கோடி வருவாயில் 145-150 கோடியை கழித்தால் 145-150 கோடி ரூபாய் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சீசனுக்கான லாபமாக நிற்கும்.

மேலே குறிப்பிட்டவை பொதுவான கணக்குகள்தான். சென்னை மற்றும் மும்பை போன்ற பெரிய அணிகளின் வருவாய் மற்ற அணிகளைவிட அதிகமாகவே இருக்கும்.

இடையில் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டபோதும் இதே போன்றே வருவாய் பிரிக்கப்பட்டது. இப்போது புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட பிறகு வருவாய் பிரிப்பில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதை பிசிசிஐ அறிவிக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.