விகடனின் ‘Doubt of Common Man’ பக்கத்தில் வருண் என்ற வாசகர், “மின்சாரப் பணிகளைச் செய்வதற்கு மின் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்களே… மின் உரிமத்தை எப்படிப் பெறுவது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

Doubt of common man

போக்குவரத்துத் துறையின் மூலம் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான பல்வேறு வாகனங்களை இயக்குவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுவருவது போன்று, மின்சாரப்பணிகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு நிலைகளிலான தகுதிச் சான்றிதழ்களும் உரிமங்களும் வழங்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் எனும் அமைப்பின் மூலம் வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ்களும், மின் உரிமங்களும் பெறுவதற்கான விவரங்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

மின்கம்பி உதவியாளர் தகுதிச் சான்றிதழ் (WH)

இச்சான்றிதழைப் பெறுவதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரால் நடத்தப்பெற்ற மின்கம்பி உதவியாளர் தகுதிச் சான்றிதழுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.250ஐச் செலுத்த வேண்டும். இந்தச் சான்றிதழைப் பெற்றவர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் மின்கம்பியாளர்களுக்கான உதவியாளராகப் பணியாற்ற முடியும்.

மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழ் (W)

இச்சான்றிதழைப் பெறுவதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அல்லது தமிழ்நாடு தொழிற்பயிற்சிக் கூடத்தால் நடத்தப்பெற்ற மின்கம்பியாளர் (Wireman) அல்லது மின்சாரப் பணியாளர் (Electrician) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்கம்பியாளர் உதவியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்று, ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று, அதன் பின்பு மின் கம்பியாளர் தகுதிச் சான்றிதழுக்கான நேர்முகத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடைபவர்களும் இச்சான்றிதழினைப் பெற முடியும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

மின்சாரப் பணிகள்

இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் குறைந்த மின்னழுத்தம் மற்றும் நடுத்தர மின்னழுத்தப் பணிகளில் மின்கம்பியாளர்களாகப் பணியாற்ற முடியும்.

மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் (S)

இச்சான்றிதழைப் பெறுவதற்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்பெறும் மின்னியல் பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி, இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் மின்னியல் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி அல்லது A.M.I.E சான்றிதழ் தேர்வில் மின்னியல் பொறியியலுக்கான பகுதி A மற்றும் பகுதி B என்று இரு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் உயர் மின்னழுத்தப் பணிகளுக்கான நிறுவுதல் அல்லது உயர் மின்னழுத்தப் பணிகளில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் இரண்டு வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மின்சாரப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் குறைந்த மின்னழுத்தம், நடுத்தர மின்னழுத்தம் மற்றும் உயர் மின்னழுத்தப் பணிகளில் மின்சாரப் பணி மேற்பார்வைளர்களாகப் பணியாற்ற முடியும்.

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க… இங்கே க்ளிக் செய்யவும்

மின் உற்பத்தி நிறுவன இயக்குதல் மற்றும் பராமரிப்புத் தகுதிச் சான்றிதழ் (S)

இச்சான்றிதழைப் பெறுவதற்கு மின்னியல் அல்லது இயந்திரவியல் பொறியியலில் பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் வழங்கிய கல்வி நிறுவனம் மத்திய மின்சார ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.

இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் மின் பகிர்மானம் செய்யும் நிறுவனப் பணிகளிலும், மின் உற்பத்தி மற்றும் மின் இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடமும் பணியாற்ற முடியும்.

இபி மின் ஒப்பந்தக்காரர் உரிமம் (B)

இபி மின் ஒப்பந்தக்காரர் உரிமம் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில், மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற ஒருவரை முழுநேரப் பணியாளராகப் பணியில் அமர்த்தி, அவரின் ஒப்புதல் கடிதம் மற்றும் அவரது கம்பியாளர் தகுதிச் சான்றிதழையும் இணைத்து அனுப்பிட வேண்டும். 500 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, மின்னோட்ட ஆய்வுக் கருவி ஒன்று விலைக்கு வாங்கி, அதற்கான அசல் ரசீது, மேற்படி கருவியை சென்னை, மின் தர நிர்ணய ஆய்வுக் கூடம் அல்லது தமிழ்நாடு மின்சார வாரிய கருவிகள் சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து, சோதனை அறிக்கையைப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.2500 செலுத்த வேண்டும்.

மின்சாரப் பணிகள்

இந்த உரிமம் பெற்றவர்கள், 50 கிலோ வாட்ஸுக்கு மேற்படாத மின்சாரப் பணிகளைக் குறைந்த மற்றும் நடுத்தர மின்னழுத்தப் பயனீட்டாளரின் மின் அமைப்புகளில் மேற்கொள்ள முடியும்.

இஎஸ்பி மின் ஒப்பந்தக்காரர் உரிமம் (SB)

இஎஸ்பி மின் ஒப்பந்தக்காரர் உரிமம் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இவ்வாரியத்தால் மட்டுமே வழங்கப்பட்ட மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற ஒருவரையும், மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற ஒருவரையும் முழுநேரப் பணியாளராகப் பணியில் அமர்த்தி, அவர்களின் ஒப்புதல் கடிதம் பெற்று, அவர்களது மேற்பார்வையாளர், கம்பியாளர் தகுதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்பிட வேண்டும்.

500 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, டாங்டைப் அம்மீட்டர் ஒன்று, எர்த் ரெசிஸ்டென்ஸ் டெஸ்டர் ஒன்று, மின்னோட்ட ஆய்வுக் கருவி ஒன்று ஆகியவற்றை விலைக்கு வாங்கி, அதற்கான அசல் ரசீது, மேற்படி கருவிகளைச் சென்னை, மின் தர நிர்ணய ஆய்வுக் கூடம் அல்லது தமிழ்நாடு மின்சார வாரிய கருவிகள் சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து, சோதனை அறிக்கையைப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.4000 செலுத்த வேண்டும். ரூ.10,000த்துக்கான வங்கி உறுதிப் பத்திரமும் (Bank solvency) இணைத்து வழங்கிட வேண்டும்.

இந்த உரிமம் பெற்றவர்கள், அனைத்துக் குறைந்த மற்றும் நடுத்தர மின்னழுத்த மின் வேலைகளை மேற்கொள்ள முடியும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!

ஏ கிரேடு மின் ஒப்பந்தக்காரர் உரிமம் (EA)

ஏ கிரேடு மின் ஒப்பந்தக்காரர் உரிமம் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் வழங்கப்பட்ட மின்னியல் பொறியியல் பட்டயம் அல்லது மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் தேர்ச்சி பெற்று, இவ்வாரியத்தால் மட்டுமே வழங்கப்பட்ட மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற மேற்பார்வையாளர் ஒருவரை முழுநேரப் பணியாளராக நியமிக்க வேண்டும். அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவில்லாத அனுபவம் மற்றும் உயரழுத்த மின்சாரப்பணிகள் மேற்கொண்டதுடன் மின்மாற்றி நிறுவிய அனுபவம் ஆகியவையும் இருக்க வேண்டும். இதே போன்று, மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற இருவரையும் முழுநேரப் பணியாளராகப் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும். பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களின் ஒப்புதல் கடிதம் பெற்று, அவர்களது மேற்பார்வையாளர், கம்பியாளர் தகுதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்பிட வேண்டும்.

மின்சாரப் பணிகள்

500 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, 1000 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, டாங்டைப் அம்மீட்டர் ஒன்று, எர்த் ரெசிஸ்டென்ஸ் டெஸ்டர் ஒன்று, மின்னோட்ட ஆய்வுக் கருவி ஒன்று, எடுத்துச் செல்லக்கூடிய வோல்ட் மீட்டர் ஒன்று, பேஸ் சீகுவன்ஸ் இண்டிகேட்டர் ஒன்று ஆகியவற்றை விலைக்கு வாங்கி, அதற்கான அசல் ரசீது, மேற்படி கருவிகளைச் சென்னை, மின் தர நிர்ணய ஆய்வுக் கூடம் அல்லது தமிழ்நாடு மின்சார வாரிய கருவிகள் சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து, சோதனை அறிக்கையைப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.12,000 செலுத்த வேண்டும். ரூ.50,000த்துக்கான வங்கி உறுதிப் பத்திரமும் (Bank solvency) இணைத்து வழங்கிட வேண்டும். இந்த உரிமம் பெற்றவர்கள், அனைத்துக் குறைந்த மற்றும் நடுத்தர மின்னழுத்த மின் வேலைகளை மேற்கொள்ள முடியும்.

சூப்பர் ஏ கிரேடு மின் ஒப்பந்தக்காரர் உரிமம் (ESA)

சூப்பர் ஏ கிரேடு மின் ஒப்பந்தக்காரர் உரிமம் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மின்னியல் பட்டம் அல்லது தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் வழங்கப்பட்ட மின்னியல் பொறியியல் பட்டயம் பெற்று, இவ்வாரியத்தால் மட்டுமே வழங்கப்பட்ட மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற மேற்பார்வையாளர்கள் இருவரையும் முழுநேரப் பணியாளராக நியமிக்க வேண்டும். மின்னியல் பட்டம் பெற்றவர்களாக இருப்பின் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவில்லாத அனுபவமும், மின்னியல் பட்டயம் பெற்றவர்களாக இருப்பின் பத்து ஆண்டுகளுக்குக் குறைவில்லாத அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். உயரழுத்த மின்சாரப்பணிகள் 5 மற்றும் 2 மிகை உயரழுத்த மின்சாரப் பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். மின்னியல் பொறியியலில் பட்டயம் பெற்ற அல்லது தகுதியுடைய மின்சார வரைவாளர் ஒருவரையும் பணியமர்த்திட வேண்டும். இதே போன்று, மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற இருவரையும் முழுநேரப் பணியாளராகப் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும். பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களின் ஒப்புதல் கடிதம் பெற்று, அவர்களது மேற்பார்வையாளர், கம்பியாளர் தகுதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்பிட வேண்டும்.

மின்சாரப் பணிகள்

500 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, 1000 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, 2500 வோல்ட் மின்காப்பு அளவைத் திறன் கருவி (மெக்கர்) ஒன்று, டாங்டைப் அம்மீட்டர் ஒன்று, எர்த் ரெசிஸ்டென்ஸ் டெஸ்டர் ஒன்று, மின்னோட்ட ஆய்வுக் கருவி ஒன்று, எடுத்துச் செல்லக்கூடிய வோல்ட் மீட்டர் ஒன்று, பேஸ் சீகுவன்ஸ் இண்டிகேட்டர் ஒன்று ஆகியவற்றை விலைக்கு வாங்கி, அதற்கான அசல் ரசீது, மேற்படி கருவிகளைச் சென்னை, மின் தர நிர்ணய ஆய்வுக் கூடம் அல்லது தமிழ்நாடு மின்சார வாரிய கருவிகள் சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து, சோதனை அறிக்கையைப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். இச்சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணமாக ரூ.20,000 செலுத்த வேண்டும். ரூ.1,00,000த்துக்கான வங்கி உறுதிப் பத்திரமும் (Bank solvency) இணைத்து வழங்கிட வேண்டும்.

இந்த உரிமம் பெற்றவர்கள், அனைத்து மின்னழுத்த மின் வேலைகளையும் மேற்கொள்ள முடியும். இவர்களுக்கு மின்சாரப் பணிகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.மேற்காணும் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் மின் உரிமங்களைப் பெற விரும்புபவர்கள், தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியத்தின் இணையதளத்திலிருந்து தேவையான விண்ணப்பத்தினைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாக நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணத்தினை “Secretary, Electrical Licensing Board, Chennai” எனும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளக்கூடியதான வங்கி வரைவோலையாகப் பெற்று இணைத்தும் விண்ணப்பிக்கலாம்.

Also Read: அந்நியச் செலாவணி என்றால் என்ன? இந்தியாவில் Forex ட்ரேடிங் சட்டப்பூர்வமானதா? | Doubt of Common Man

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.