கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேரூர்கடை சி.பி.எம் ஏரியா கமிட்டி உறுப்பினரான ஜெயச்சந்திரனின் மகள் அனுபமா. இவர் முன்பு எஸ்.எஃப்.ஐ அமைப்பின் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகி அஜித் என்பவரை காதலித்தார் அனுபமா. அஜித் விவகாரத்துப் பெறுவதற்கு முன்னர் அனுபமா கர்ப்பம் ஆக, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குழந்தையைத் தேடும் தாய் அனுபமா

அனுபமாவின் சகோதரிக்கு திருமணம் நடந்து முடிந்த பிறகு அவரிடம் அவரது குழந்தையைத் தருவதாகக் கூறி, பிறந்த மூன்றாம் நாள் குழந்தையை அவரிடமிருந்து பிரித்திருக்கிறார் அவரின் தந்தை ஜெயச்சந்திரன். சகோதரியின் திருமணம் நடந்து முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் தன் பெற்றோர் தன் குழந்தையைத் தன்னிடம் கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறி குழந்தையின் தந்தை அஜித்துடன் வசித்திருக்கிறார் அனுபமா. `என் குழந்தை எனக்கு வேண்டும்’ எனக் கேட்டு பேரூர்கடை காவல் நிலையத்தில் அனுபமா புகார் அளித்த பின்னரும் நடவடிக்கை இல்லை. ஆறு மாதங்களாக குழந்தைக்காகப் போராட்டம் நடத்தினார். உயர்மட்ட அதிகாரிகள் தொடங்கி கேரள முதல்வர் வரை மனு கொடுத்தும் பலன் இல்லை.

Also Read: பிறந்த 3-ம் நாளில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சிசு; சட்டவிரோதமாக தாத்தாவால் தத்துக்கொடுக்கப்பட்டதா?

சி.பி.எம் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தும் நியாயம் கேட்டிருக்கிறார். எதிலும் தீர்வு கிடைக்காததைத் தொடர்ந்து மீடியாவிடம் விவரத்தைக் கூறினார். இதைத் தொடர்ந்து அனுபமாவின் போராட்டம் வெளி உலகிற்குத் தெரியவந்தது.

குழந்தைகள் நலத்துறை மூலம், அனுபமாவின் குழந்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கேரள தலைமைச் செயலகம் முன்பு அனுபமா தனியாளாகப் போராட்டத்தில் இறங்கினார். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் சி.பி.எம் நிர்வாகிகள் அனுபமாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர் போராட்டம் தொடங்கிய அன்று மாலையிலேயே போராட்டத்தை கைவிட்டார். இந்த நிலையில் கேரள அரசும் சமூக நலத்துறையும் அனுபமாவின் குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை கேட்டு திருவனந்தபுரம் குடும்பநல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது.

அனுபமா – அஜித்

Also Read: அரிய நோயால் உயிருக்குப் போராடும் குழந்தை; காப்பாற்ற பெண் காவலர் எடுத்த முயற்சி – வைரலாகும் வீடியோ!

அந்த மனுவை இன்று விசாரித்த குடும்ப நல கோர்ட் குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதற்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அந்தக் குழந்தை வேண்டாம் எனக் கைவிடப்பட்டதா, அல்லது தத்துகொடுக்கப்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அது அனுபமாவின் குழந்தைதானா என்பதை அடையாளம் காணத் தேவைப்பட்டால் டி.என்.ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சற்று ஆசுவாசம் அடைந்துள்ளார் அனுபமா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.