வேலையில்லா பட்டதாரி ஹரிஷ் கல்யாணுக்குப் பட்டம் வாங்குவதே பெரிய வேலையாகிவிட, நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டு என ஒதுங்கிவிடுகிறார். திருமணம் முடிந்தால் எல்லாம் கூடி வரும் என நினைக்கும் தந்தை வேணு அரவிந்த், பெண் பார்க்க அழைத்துச் செல்ல, அது தப்பான கதவைத் தட்ட வைக்கிறது. ஆஸ்திரேலியா கனவுகளுடன் இருக்கும் ப்ரியா பவானிசங்கரோ, கடந்தகால வடுக்களிலிருந்து தப்பிக்கப் போராடுகிறார். கதவுக்குப் பின்னான உரையாடல்கள், அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இருவரின் வாழ்க்கையிலும் நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றை இணைத்து ‘ஓ… மணப்பெண்ணே’வை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர். தெலுங்கு சினிமாவான ‘பெல்லி சூப்பூலு’வைத் தமிழுக்குப் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

ஓ மணப்பெண்ணே!

ஹரிஷ் கல்யாணுக்கு மற்றுமொரு ‘உருப்படாத பையன்’ வேடம். பெரிதாய் குறையுமில்லை, நிறையுமில்லை டைப்பில் நடித்துக்கொடுத்திருக்கிறார். படத்தின் முதன்மை கதாபாத்திரம் ப்ரியா பவானிசங்கருக்குத்தான். தன் சொந்தக் காலில் நிற்க நினைக்கும் பெண்ணாக, சுயமரியாதை, லட்சியங்கள் கொண்ட பெண்ணாக, உலவும் தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். குறிப்பாகப் பிற்பாதியில் தன் காதலன் ‘குக் வித் கோமாளி’ அஷ்வினிடம் பேசும் காட்சி, தெளிவானதொரு கேரக்டர் கிராஃப். காமெடிக்கு அன்பும், அபிஷேக்கும். தெலுங்கில் ப்ரியதர்ஷி செய்த அளவுக்கு இல்லையென்றாலும், அன்பு ஓரளவு சிரிக்க வைத்துவிடுகிறார். அபிஷேக் தன் ஸ்டாண்ட் அப் காமெடியில் செய்ததைத்தான் இங்கும் செய்துகொண்டிருக்கிறார். சிரிப்பு காட்டாதீங்க ப்ரோ என்பது போல், சிரிப்பு காட்டுங்க ப்ரோ எனச் சொல்ல வைக்கிறார்.

சிடுசிடு அப்பாவாக வேணு அரவிந்த் ஈர்க்கிறார். அவர் சீரியல் நடிகர் என்பதற்காக, அதன் ரெஃபரன்ஸ் எல்லாம் வைத்து காமெடி லைனர்கள் சேர்த்திருப்பது நல்லதொரு முயற்சி. இன்னும் இதே மாதிரி நிறைய விளையாடியிருக்கலாமே டைரக்டர் சார்?! என்னதான் சினிமா என்றாலும் அனிஷ் குருவில்லாவின் பாத்திரம்போல நிஜத்தில் எந்த மாமனார்/பிசினஸ்மேன் இருப்பார் என்று தெரியவில்லை. அவரின் பெண்ணாக வரும் பாத்திரம் ஜாதகம், ஜோசியம் குறித்து பேசும் வசனங்கள் நச்! விஷால் சந்திரசேகரின் இசையில் ‘ஆவோ ஜி ஆவோ’, ‘ஓ… மணப்பெண்ணே’, ‘போதை கணமே’ பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசையிலும் பல காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.

ஓ மணப்பெண்ணே!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தெலுங்கில் ஒரு புதிய அலையை உருவாக்கிய சினிமாக்களில் ‘பெல்லி சூப்புலு’ முக்கியமானது. விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகனாகப் பெரியதொரு அறிமுகத்தைக் கொடுத்த படம். ப்ரியதர்ஷிக்கு கிட்டத்தட்ட முதல் படம். ரீது வர்மாவை விருதுகள் வெல்ல வைத்த படம் என தருண் பாஸ்கர் எழுதி இயக்கிய ‘பெல்லி சூப்புலு’க்கு பெரியதொரு வரலாறு உண்டு. பெல்லி சூப்புலுவின் வசனங்களைப் பெரிய அளவுக்கு மாற்றாமல், கதையின் போக்கையும் அப்படியே கொண்டுவந்ததில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் கார்த்திக். ஆனால், அந்தக் கதையிலும், நடிப்பிலும் இருந்த ஃப்ரெஷ்னெஸ் இதில் பெரிய அளவில் கைகூடவில்லை. அதைப் பிரதியெடுப்பதற்கான பிரயத்தனம் மட்டுமே சில காட்சிகளில் துண்டாகத் தெரிகிறது. அதுவே படத்தின் மிகப்பெரிய குறையாக மாறிப்போகிறது.

ஏற்கெனவே சிறப்பானதொரு மாஸ்டர்பீஸாக இருப்பதை ரீமேக் செய்யும்போது மாற்றங்கள் தேவையில்லைதான். ஆனால், சின்ன சின்ன விஷயங்களில், புதுமைப் புகுத்த சாத்தியமுள்ள இடங்களில்கூட பெரிதாக மெனக்கெடாமல், அப்படியே தமிழ்ப்படுத்தியிருப்பது நெருடல். இப்போது இருக்கும் திரைத்துறை வளர்ச்சிக்கு, அந்தப் படத்தையே தமிழ் டப்பிங்கிலோ, சப்-டைட்டிலுடனோ பார்த்துவிடலாமே! போதாக்குறைக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைத் தெலுங்கு ஆடியோவிலும் கேட்கலாமாம்! எதுக்கு?!

ஓ மணப்பெண்ணே!

அதே சமயம், அசல் சினிமாவைப் பார்க்காமல், இதைத் தனிப்படமாக பார்ப்பவர்களுக்குக் கதையும், காட்சிகளும் ஒரு ஜாலியான ரோம்-காம் படத்தின் உணர்வைக் கடத்தலாம். உழைப்பு, சுயமரியாதை, இழப்பைக் கடந்து வருதல் போன்றவை குறித்து மெசேஜாக திணிக்க வாய்ப்பிருந்தும், கதையின் போக்கிலேயே அவற்றைச் சொல்லியிருப்பது சிறப்பு.

ரீ-மேக்கை வைத்துக்கொண்டு பொருத்தம் பார்க்காமல், ஃப்ரெஷ் படமாகப் பார்த்தால் இந்த ‘ஓ… மணப்பெண்ணே’க்கு ‘லைக்ஸ்’ விடலாம்தான்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.