ம.தி.மு.க-வின் தலைமைக் கழகச்செயலாளராக வைகோ-வின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டிருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் ஹாட் டாப்பிக். “துரை வைகோ எனக்குத் தெரியாமலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.க-வில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக அவரை முழுமையாகக் கழக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வற்புறுத்தத் தொடங்கினார்கள். ம.தி.மு.க சட்ட திட்டங்களின் படி பொதுச்செயலாளர் என்ற முறையில் பொறுப்புகளில் நானே ஒருவரை நியமனம் செய்யலாம். கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் துரை வைகோ நியமனம் குறித்து கருத்துக் கேட்டேன். பெரும்பான்மை உறுப்பினர்கள், துரை வைகோவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாக்களித்தனர். இதையடுத்தே ம.தி.மு.க. தலைமைக் கழகச்செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மனிதாபிமானம் இருக்கிறது. பொதுவாழ்வில் வெற்றி பெறத் தேவையான அனைத்து குணமும் அவருக்கு இருக்கிறது. எனவே துரை வைகோ வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு மரணம் வரை ஓய்வு கிடையாது” என விளக்கம் அளித்திருக்கிறார்.

வைகோ

“வாரிசு அரசியலை எதிர்த்து தனியாகக் கட்சி தொடங்கியவர் வைகோ. இன்றைக்கு அதே அரசியலைத் தானும் செய்கிறார். அதற்கு புதிய விளக்கமும் கொடுக்கிறார்” எனத் தன் மகனுக்காகப் பல விதங்களில் வைகோ சமாளித்து வருகிறார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. துரை வைகோ நியமனத்தையும் வைகோ பதிலையும் எப்படிப் புரிந்துகொள்வது?

Also Read: மதிமுக: `தலைமைக் கழகச் செயலாளராகிறார் துரை வையாபுரி; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வைகோ!’

துரை வைகோ நியமனம் குறித்து ம.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “யாருக்கும் விருப்பம் இல்லாமல் எங்கள் கட்சியில் யாரும் எந்தப் பொறுப்புக்கும் வந்துவிட முடியாது. துரை வைகோ திடீரென கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு வரவில்லை. அரசியல் வேண்டாம் என விலகியிருந்தவரைத் தொண்டர்கள்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். வந்தவுடன் அவருக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்புகள் எதுவும் கொடுத்துவிடவில்லை. மற்றவர்கள் பதவியைப் பிடுங்கவும் இல்லை. அவருக்கென்று தலைமைக் கழகச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கியே நியமித்திருக்கிறார்கள். அதுவும் வாக்கெடுப்பு மூலம். இதோடு வாரிசு அரசியலைப் பொருத்திப் பார்க்க முடியாது” என்றனர்.

“கட்சித் தலைமை வெள்ளைக் காக்கா பறக்கிறது என்றால் ஆமாம் பறக்கிறது என்று சொல்லும் அளவுக்குத்தான் ஜனநாயகம் இருக்கிறது. இது வாரிசு அரசியல் இல்லை என்கிறார் வைகோ. அப்படியானால் எது வாரிசு அரசியல் என்று ஏன் இதுவரை எங்களுக்குச் சொல்லித் தரவில்லை.

துரை வைகோ

ம.தி.மு.க-வில் வைகோ உடன் நின்றவர்கள் எல்லாம் கொள்கை சார்ந்து இருந்தவர்கள். மற்ற கட்சியில் இருப்பவர்கள்போல அரசியலால் எந்த ஆதாயமும் அடையாதவர்கள். ஆனால், அவர்களையெல்லாம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவு செய்துவிட்டு ஜனநாயகமாக நடந்துகொள்வதாகக் காட்டிக் கொள்கிறார்” என்கின்றனர் மற்றொரு தரப்பினர்.

மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், எந்தப் பதவியில் வருகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். தலைமைக் கழகச் செயலாளர் என்பது தி.மு.க-வில் இருந்தது. தற்போது ம.தி.மு.க-வில் துரை வைகோவுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பதவிக்குத் துரை வைகோ பொருத்தமாகவே இருப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன். தன்னடக்கத்தோடு, சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் அரசியல் செய்தவர். எளிமையானவர். தமிழ்நாட்டில் அல்ல இந்தியாவில் வாரிசு அரசியல் இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை.

ராதாகிருஷ்ணன்

ஆர்.எஸ்.எஸ் வேண்டுமானால் வாரிசு அரசியல் தங்கள் கட்சியில், அமைப்பில் இல்லையென பெருமைக்குச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அரசியலை வைத்து தொழிலில் ஆதாயம் அடைபவர்கள் அங்கும் சிலர் இருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு எதிராக வைகோ பேசியது காலத்தின் கட்டாயம்.

Also Read: ’என்னோடு போகட்டும்; என் மகனுக்கு அரசியல் வேண்டாம்’ – வைகோ உருக்கம்!

திருச்சியில் தி.மு.க சார்பில் அப்போது ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வைகோவும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ‘மாநாட்டிற்கு வைகோ வரமாட்டார்’ என்கிறார் துரைமுருகன். ‘இல்லை நிச்சயம் வருவார்’ எனக் கலைஞர் காத்திருக்கிறார். ஆனால், நடந்தது வேறு. தி.மு.க-வில் கலைஞருக்கு அடுத்து தான்தான் தி.மு.க-வின் வாரிசு என நினைக்கிறார். அதற்கு ஸ்டாலின் கட்சிக்குள் வருவது இடையூறாக இருக்கும் என்பதாலேயே எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதையொட்டியே கட்சியிலிருந்து விலகும் முடிவையும் எடுக்கிறார். அதன்பின் கலைஞரைப் பார்த்தார்கள் என்றாலே பலரையும் கட்சியிலிருந்து விலக்கியவர் வைகோ. அந்தளவு வாரிசு அரசியலுக்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். தற்போது ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டார் என்றுதானே பொருள்.

கருணாநிதி – வைகோ

ம.தி.மு.க தொடங்கப்பட்ட நோக்கமும் நீர்த்துப் போய், அதன் தேவையே இப்போது இல்லாமல் போய்விட்டதில்லையா? இவையெல்லாம் வைகோ செய்த தவறுகள். அதற்காகத் துரை வைகோ அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது” எனத் துரை வைகோ நியமனம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.