திருவண்ணாமலை மாவட்டத்தில், பழைமையான சின்னங்களும், கல்வெட்டுகளும் தொடர்ச்சியாகக் கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், சமணர் கோயிலுக்கு ஊர் மக்கள் தானம் செய்த தகவலை தாங்கி நிற்கும் கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். “திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட தென்னாத்தூர் கிராமத்தில் ஒரு கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. சிறிய கருவறை, அர்த்தமண்டபத்துடன் காணப்பட்ட அந்தக் கோயில் புதர்கள் மண்டியும், மரங்கள் முளைத்தும் காணப்பட்டது. அந்தக் கோயிலின் உள்ளே எந்தச் சிற்பமும் காண்பதற்கு கிடைக்கவில்லை. மேற்கு நோக்கியபடி அமைந்துள்ள இக்கோயிலின் தெற்கு பகுதி அதிட்டானத்தில் ஆவணம் செய்யப்படாத 3 வரியிலான கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டறிந்தோம். அதை சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்ட போது, இந்தக் கோயில் சமண சமயத்தைச் சார்ந்த ‘மகாவீரர் கோயில்’ என்பதை அறியமுடிந்தது.

கல்வெட்டு

‘முக்குடை செல்வர்’ என்று மகாவீரரைக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. அதோடு மட்டுமின்றி, ‘பல்லவராயர் மனை’ என்று அழைக்கப்படும் இடத்திற்குக் கிழக்கு திசையில் உள்ள மனையையும், ஏந்தல் நிலம் மற்றும் இரண்டு கிணறுகளையும் இந்தக் கோயிலுக்காக, ஊர்மக்கள் வரி நீக்கி தானம் அளித்த செய்தியை அறியமுடிகிறது. இந்தத் தானத்திற்கு சாட்சியாக மலையபெருமாள் ஆடுவார், குருகுலராய ஆடுவார் மற்றும் அப்பாண்டையார் இருப்பதாகவும், சந்திரன், சூரியன் உள்ளவரை இந்தத் தானம் செல்லும் என்றும் அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: திருவண்ணாமலை: தொன்மையான வீரனுடைய நடுகல், தவ்வை சிற்பம் கண்டுபிடிப்பு! சொல்லும் சேதி என்ன?

இக்கோயிலின் அருகே தலை உடைந்த ‘மகாவீரர் சிலை’ ஒன்று இருந்ததாகவும், உறை கிணறு ஒன்று இருந்ததாகவும் அந்தக் கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுள் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமணர் கோயில்

இக்கோயிலின் கட்டுமானம், பிற்கால விஜயநகர காலத்தை சேர்ந்ததாகும். இவ்வூரில் சமணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துள்ளதை நிரூபிக்கும் வகையில், ‘முத்தா கோயில்’ என்று அழைக்கப்படும் மற்றொரு சமணர் கோயில் இன்றும் சிறப்பாக இவ்வூரில் இயங்கி வருகிறது. சுமார் 500 வருடம் பழைமையான இக்கோயில், புதர் மண்டி அழிவின் விழிம்பில் தத்தளிக்கும் காட்சி, வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயிலை, இங்குள்ள சமண சமயத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீட்டு, மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வருவதே முக்குடை செல்வரான மகாவீரருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.