கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெகன்நாதன் – பிரியதர்ஷினி தம்பதி. இந்தத் தம்பதியின் 9 மாதப் பெண் குழந்தை நித்தன்யாஸ்ரீ, பிறந்து 3 மாதங்கள் வரை எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் ஆக்டிவ்வாக இருந்து வந்திருக்கிறார். அதன் பிறகு அடிக்கடி சோர்ந்து போவது, சரியாக உணவு எடுத்துக் கொள்ளாதது எனச் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தென்பட்டிருக்கின்றன.

அதனையடுத்து குழந்தை நித்தன்யாஸ்ரீயை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய, குழந்தை `ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோஃபி’ (Spinal muscular atrophySMA) என்னும் அரிய வகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனைச் சரிசெய்ய குழந்தைக்கு ஒருமுறை மரபணு மாற்று சிகிச்சை செய்ய வேண்டுமெனவும், அதற்கான மருந்தை வெளிநாட்டில் இருந்து வரவைக்க 16 கோடி ரூபாய் செலவாகும் எனவும் சொல்லியுள்ளனர்.

நித்தன்யாஸ்ரீ

Also Read: அரிய நோயால் உயிருக்குப் போராடும் குழந்தை; காப்பாற்ற பெண் காவலர் எடுத்த முயற்சி – வைரலாகும் வீடியோ!

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குழந்தை நித்தன்யாஸ்ரீயின் பெற்றோர், எப்படியாவது என்னோட குழந்தையைக் காப்பாத்திக் கொடுங்க’ என்று கண்ணீரோடு பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். “தட்டுவடையை தயாரிச்சு ஒரு குடிசைத் தொழிலாக செஞ்சு பிழைப்பு நடத்திக்கிட்டு வர்ற நான் எப்படிங்க 16 கோடி ரூபாய் மருந்து வாங்க பணத்தை ரெடி பண்ண முடியும்? குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குன்னு டாக்டர்கள் சொன்னதுல இருந்து நானும் என் மனைவியும் உடஞ்சு போய்க் கெடக்குறோம்.

தமிழக மக்கள் உதவி செய்து எப்படியாவது என் குழந்தையைக் காப்பாத்திக் கொடுத்திடுங்க. 16 லட்சம் பேர் ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்தால்கூட என் மகளைக் காப்பாத்திட முடியும். மத்திய, மாநில அரசாங்கமும், என் தமிழ்நாட்டு மக்களும் என் குழந்தைக்கு உதவிசெஞ்சு காப்பாத்திடுவாங்கன்னு நம்புறோம்” என சமூக வலைதளங்களில் உருக்கமாகக் கோரிக்கை வைத்து நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

நித்தன்யாஸ்ரீ குடும்பம்

அதனையடுத்து குழந்தை நித்தன்யாஸ்ரீக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்துவந்தனர். குழந்தையின் 2 வயதிற்குள்ளாக சிகிச்சைக்குத் தேவையான பணம் எப்படியாவது கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நித்தன்யாஸ்ரீ நேற்று மாலை திடீரென மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார். நித்தன்யாஸ்ரீயின் இழப்பு அவர் பெற்றோரை மட்டுமல்லாமல், குழந்தை சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி வர வேண்டுமென நினைத்த அனைவரையும் கலங்க வைத்திருக்கிறது.

Also Read: `3 லட்சம் நல் உள்ளங்களால் ₹16 கோடி கிடைச்சிருச்சு; இனி அரசு இதை மட்டும் செய்யணும்!’ – மித்ரா தந்தை

குழந்தை நித்தன்யாஸ்ரீயின் தந்தை ஜெகன்நாதன், `சனிக்கிழமை சாயங்காலம் பாப்பாவுக்குத் திடீர்னு மூச்சுத்திணறல் அதிகமாச்சு. ஒசூர், கிருஷ்ணகிரின்னு எல்லா ஹாஸ்பிட்டலுக்கும் கூட்டிட்டுப் போயி, கடைசியில தர்மபுரி கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருந்தோம். சிகிச்சையில இருந்தவளுக்கு நேத்து திடீர்னு மூச்சுத்திணறல் அதிகமாக, சாயங்காலம் 5.30 மணிக்கு இறந்துட்டா. எஸ்.எம்.ஏ பாதிச்ச குழந்தைகளுக்கு இப்படி மூச்சுத்திணறல் வரும்னு டாக்டர்கள் சொன்னாங்க. குழந்தையோட 2 வயசுக்குள்ள மக்கள் மற்றும் அரசாங்கத்தோட உதவியால 16 கோடி ரூபாய் கிடைச்சிடும்னு நம்பினோம். இதுவரைக்கும் அஞ்சரை லட்சம் தான் சேர்ந்துச்சு. எப்படியாவது என் குழந்தையை காப்பாத்திடலாம்னு நெனச்சோம். ஆனால், கடைசியில இப்படி ஆகும்னு நினைச்சுக் கூட பார்க்கல. அம்மா – அப்பாவுக்கு நாம எந்தச் சிரமத்தையும் கொடுக்கக்கூடாதுன்னு அவ போய்ட்டா போல” என்று உடைந்து அழுதார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.