இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர்

இந்த பெருநகரத்தை நம்பி வந்தவர்களை இந்த ஊர் ஒருபோதும் கைவிட்டதில்லை. 2008 -ம் வருடத்தின் பிற்பகுதியில் சென்னையை நோக்கி வந்தபோது கொஞ்சம் கனவுகளும் நிறைய வறுமையும் மட்டுமே என்னிடமிருந்தது. இந்த பணிரெண்டு வருடங்களில் என்னைத் தேடிவந்த எல்லாமுமே இந்த நகரம் எனக்குக் கொடுத்ததுதான்.

காவியத்தலைவன் திரைப்படத்தில் இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக வேலைசெய்துகொண்டிருந்தபோது அந்தத் திரைப்படத்தில் நடிகர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை எனக்கு இயக்குநர் கொடுத்திருந்தார். இரண்டாவது பகுதியில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ஒரு நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இயக்குநர் அதிகம் பிரபலமாகாத ஒருவர் நடித்தால் சரியாக இருக்குமெனச் சொல்லியிருந்தார். தற்செயலாக விருமாண்டி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியில் நடித்திருந்த பெரியவரைப் பார்க்க, ஊரில் நிஜமாகவே பஞ்சாயத்தைப் பார்ப்பது போலிருந்தது. அவர் யார் என்னவென மேனேஜரின் மூலமாக விசாரித்தபோது மதுரா ட்ராவலர்ஸின் நிறுவனர் திரு வி.கே.டி பாலன் என்று தெரியவந்தது. அன்றைய தினமே அவரது எண்ணுக்கு அழைத்து நேரில் சந்திக்கச் சென்றேன். அவரைக் குறித்தோ அவரது தொழில்களைக் குறித்தோ எதுவும் தெரியாது. என்னளவில் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பாரா என்பதை நேரில் பார்த்து உறுதிசெய்துவிட வேண்டும் என்பது மட்டுந்தான் என் நோக்கமாக இருந்தது. ஆனால் அவருடனான உரையாடல் அவரை வழக்கமான தொழிலதிபர் என்பதையும் தாண்டி சமூகத்தின் மீது அக்கறையும் நேசமும் கொண்ட மனிதர் என்பதை உணரவைத்தது.

காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் சாதிப்பதற்கான சந்தப்பர்ங்களை வழங்குகிறது, சிலர் அதை அடையாளம் கண்டு தனது வாழ்வை வெற்றியை நோக்கி திசைதிருப்பிக் கொள்கிறார்கள். பலர் தங்களுக்கான சந்தர்ப்பம் வந்ததையே புரிந்துகொள்ளாமல் தவறவிட்டுவிடுகிறார்கள். வி கே டி பாலன் அவர்கள் வீழ்ச்சிகளைக் கடந்து தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டவர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970 களில் திருச்செந்தூரிலிருந்து சென்னையை நோக்கி வந்த பாலன் அவர்களுக்கு இந்த பெருநகரில் சொந்தமோ நண்பர்களோ எவருமில்லை. ஒதுங்கக் கூரையில்லாத அந்த மனிதன் கிடைத்த இடங்களில் எல்லாம் ஒதுங்கி தன்னைப் பாதுகாத்துக்கொண்ட அந்த மனிதருக்கு எதிர்காலத்தின் மீது அளப்பெரிய நம்பிக்கையும் ஆசையுமிருந்தது. இந்தப் பெருநகரில் தனக்கானதொரு கூரையில்லாத மனிதன் எதிர்கொள்ளும் துயரமும் நெருக்கடிகளும் அசாதாரணமானவை. பாலன் அவர்கள் குறிப்பிடும் அதே எக்மோர் ப்ளாட்ஃபார்ம் எனக்கும் பரீட்சயமானது. ஆதரிக்க ஒருவருமில்லாத மனிதன் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளை என்னால் மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அழுக்கும் வெக்கையும் நிரம்பிய மனிதனாய் சென்னையின் தெருக்களில் தனக்கானதொரு வேலையைத் தேடியலைந்த இளைஞனுக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிஞ்சுகிறது. தன்னைப் போலவே ஒதுங்கக் கூரையில்லாத சில இளைஞர்களோடு உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பிய காவல்துறையினர் தங்களோடு காவல்நிலையத்திற்கு வரச் சொல்கிறார்கள்.

வி.கே.டி. பாலன்

Also Read: நீலகண்டன்: “ஒரு துளி நீரும் சமுத்திரம் ஆகும்” | இவர்கள் | பகுதி – 4

குழப்பத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அருகிலிருந்த இளைஞர் அங்கிருந்து ஓடத் துவங்குகிறார். பாலனும் அந்த இளைஞனைத் தொடர்ந்து ஓடத் துவங்குகிறார். போலிஸ்காரர்களும் விடுவதாயில்லை என்கிற முடிவோடு துரத்த, மூச்சுமுட்ட ஓடும் பாலன் அவர்கள் ஒரு கட்டத்தில் ஓய்ந்து களைத்துப்போய் ஓரிடத்தில் படுத்துவிடுகிறார். அங்கு வேறுசிலர் முன்பே அவரைப்போல படுத்திருந்தார்கள். களைப்பில் பாலன் அவர்களும் அவர்களோடு உறங்கிவிடுகிறார். அதிகாலையில் அவரை ஒருவர் எழுப்பி ‘இந்த எடத்த எனக்குக் குடு தம்பி ரெண்டு ரூவா தரேன்..’ என்று சொல்ல அவர் குழப்பத்தோடு பார்க்கிறார்.

வாய்ப்புகள் யாருக்கும் தானே சென்று கதவுகளைத் தட்டுவதில்லை, நாம் தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அன்று அந்த விடிகாலையில் தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் துவங்கிய அவர் அதன்பிறகு தனது அன்றாட வேலையாக அதனை மாற்றிக் கொள்கிறார். அமெரிக்க விசாவிற்காக வருகிறவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவேண்டி முந்தைய நாளே இதுபோல் வந்து படுத்துக் கொள்வார்கள். அப்படி வரமுடியாதவர்களுக்கு இடம் பிடித்துக் கொடுப்பதுதான் பாலன் அவர்களின் வேலை. அவரிடமிருந்த உற்சாகத்தையும் துடிப்பையும் கவனித்த ஒரு ட்ராவல்ஸ் நிறுவன முதலாளி தன்னிடம் வேலைக்கு வரச்சொல்லிக் கேட்கிறார். ‘நீ செய்ற இதே வேலையச் செய்யலாம். அஞ்சு ரூவா தர்றேன்.. பகல் நேரத்துல என் ட்ராவல்ஸ் ல வேலைக்கு வா..’ என்று அவர் பாலன் அவர்களுக்கு புதிய வாய்ப்பைத்தர தனக்கான வெளிச்சம் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் ஒப்புக் கொள்கிறார்.

மற்றத் துறைகளிலிருந்து சுற்றுலாத்துறையும் ட்ராவல்ஸும் முற்றிலும் வேறு குணங்களைக் கொண்டது.

நட்பும் நம்பிக்கையும் கூடிவந்தால் மட்டுமே இந்தத் தொழிலில் நீண்டகாலம் ஒருவர் தப்பிப் பிழைக்க முடியும்.

வேலைக்குச் சேர்ந்த ட்ராவல்ஸில் கடுமையாக உழைக்கத் துவங்குகிறவர் அந்தத் தொழிலில் இருக்கும் நுட்பங்களை, சக மனிதர்களை அணுகும் விதத்தை எல்லாம் கற்றுக் கொள்கிறார். அத்தோடு இல்லாமல் வெவ்வேறு அலுவலகங்களில் சிறு சிறு வேலைகளைப் பார்க்கத் துவங்க இந்த நகரமும் வாழ்வும் மெல்ல பிடிபடத் துவங்குகிறது. ஹெம்மிங்வேயின் கடலும் கிழவனும் நாவலில் அற்புதமானதொரு வரி உண்டு. ‘எந்த ஒரு மனிதனையும் தோற்கடிக்க முடியாது. ஒரு மனிதனை அழிக்க முடியும். ஆனால் தோற்கடிக்க முடியாது.” மனிதர்கள் நம்பிக்கையைக் கைவிடும் போதுதான் தோற்றுப்போனவர்களாகிறார்கள். வாழ்வின் மீதும் உலகின் மீதும் சிறுதுளி நம்பிக்கை எஞ்சியிருந்தால் போதும் நமக்கான வெளிச்சம் கிடைத்தே தீரும். பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் சொல்வார்கள்,

வி.கே.டி. பாலன்

இந்த வார்த்தை அந்தப் பகுதி மக்களின் கடுமையான உழைப்பிற்கு அடையாளம்.

சில மாதகால சென்னை வாழ்க்கை அவருக்கு ட்ராவல்ஸ் தொழிலில் உள்ள நிறையபேரை அறிமுகப்படுத்தியிருந்தது. வெவ்வேறு வேலைகளில் கிடைத்த சிறு வருமானங்களைக் கொண்டு தனக்கான கூரையைத் தேடத் துவங்குகிறார். ஐம்பது ரூபாய் வாடகையில் அழுக்கும் தூசியும் நிறைந்த பழைய அறை, ஆனால் அங்கிருந்து அவரை யாரும் துரத்த முடியாதென்பது எத்தனை பெரிய ஆறுதல். நான் சென்னையில் சற்றேறக்குறைய எல்லா பகுதிகளிலும் வசித்திருக்கிறேன். நண்பர்களின் அறைகள், நண்பர்களின் நண்பர்களின் அறைகளென இரவில் ஒதுங்குவதற்காக அலைந்தவன் என்கிற வகையில் சொந்தமாய் ஒரு அறையில்லாதவனின் துயரை நன்கறிவேன். திருமணமாகி என் மனைவியோடு ஒரே வீட்டில் வசிக்கத் துவங்கியபோதுதான் எனக்கானதொரு வீடென்பதை உணரத் துவங்கினேன். அதற்கு நான் ஏழு வருடங்கள் இந்த சென்னை நகரத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனாலேயே வி.கே.டி. பாலன் அவர்களின் வாழ்க்கைக் கதையைத் தெரிந்த கொண்டபோது மிகப்பெரிய உந்துதல் கிடைத்தது. இன்றைக்கும் தமிழ்நாட்டின் ஏதேதோ ஊர்களிலிருந்து கனவுகளோடு சென்னை நகர் நோக்கி வருகிறவர்களில் எங்கு தங்கப் போகிறோமென்கிற உறுதியில்லாமல் வருகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நகரம் வஞ்சிக்கக் கூடியது, வாழ்வைத் தொலைத்துவிடுவார்கள் என்கிற பொதுவான நம்பிக்கை ஊர்ப் பக்கங்களில் உண்டு, அது எத்தனை அபத்தமானது.

இந்த மனித சமுத்திரத்தில் நீந்திப் போராடப் பழகியவன் கரையேறும் போதுதான் தான் எத்தனை பெரிய சாகசத்தை செய்திருக்கிறோம் என்பதை உணர்கிறான்.

வி.கே.டி பாலன் தனியாக ட்ராவல்ஸ் துவங்குவதற்காக காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். 80 களில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. குருவிகள் ஏராளமாய்ச் சென்றுவருவார்கள். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் நிகழ்ந்த வணிகம் மிகப்பெரியது. இந்தக் குருவிகளை ஒருங்கிணைத்து அனுப்பி வைப்பதற்கென்றே நிறைய பயணமுகவர்கள் உண்டு. அப்படியான ஒரு பயணத்திற்காக 100 பேரின் பாஸ்போர்ட்டுகளை பாலனின் கையில் கொடுத்து ஒரு முதலாளி சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கிறார். ராமேஸ்வரத்திற்கு முன்பாகவே அதிகாலையில் ரயில் நின்றுவிட, இவர் இறங்கி விசாரிக்கிறார். பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதால் ரயில் பிற்பகலுக்கு மேல்தான் செல்லும் என்கிற தகவல் கிடைக்கிறது. காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தில் சென்று பாஸ்போர்ட்டைக் கொடுக்காவிட்டால் குருவிகள் பயணிக்க முடியாது, பயணமுகவருக்கு பெரும் நஷ்டமாகிவிடும்.

அவ்வளவு பதற்றத்திலும் துணிந்து ரயில்வே ட்ராக்கில் நடக்கத் துவங்கிவிடுகிறார். விடிந்தும் விடியாத காலையில், கடுமையான கடற்காற்றுக்கு நடுவே நடந்து செல்கிறவரை அலைகளின் பேரிரைச்சல் அச்சுறுத்துகிறது. போதாக்குறைக்கு ட்ராக் முழுக்க க்ரீஸ் ஆயில் வழிந்து வழுக்கிக் கொண்டிருந்ததால் காலை அழுத்தமாக ஊன்றி நடக்க முடியாத நிலை. மெல்ல தவழ்ந்து தவழ்ந்து அந்த இரண்டு கிலோமீட்டர் ரயில்வே பாதையை இரண்டு மணி நேரங்களில் கடந்து சென்றுவிடுகிறார். குறிப்பிட்ட நேரத்திற்குள் துறைமுகத்தில் பாஸ்போர்ட்டுகளை சேர்த்துவிட்டதால் முதலாளிக்கு பெரும் நிம்மதி. அங்கு பயணத்திற்காகக் காத்திருந்த மற்ற ஆட்களும் இவர் செய்த காரியத்தைக் கேட்டு வியப்போடு பேசியிருக்கிறார்கள்.

பாலன் அவர்களிடமிருந்த மிகப்பெரிய இரண்டு முதலீடுகள் கடும் உழைப்பும், நம்பிக்கையும். அந்த முதலீடுதான் எக்மோர் ரயில் நிலைய நடைமேடையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய உயரத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

வெறுமனே ஒரு தொழிலதிபராக இருந்திருந்தால் எனக்கும் அவரைக் குறித்து எழுதுவதற்கு பெரிய ஆர்வமெதுவும் இருந்திருக்காது. அவரிடமிருக்கும் வாசிப்புப் பழக்கம் ,இலக்கிய ஆர்வம், பொதுக் காரியங்களில் தொடர்ச்சியான ஈடுபாடு இவை எல்லாமுமே அவரை தனித்துவமான மனிதராய் எப்போதும் நினைக்கச் செய்யும். நான் கேட்டதும் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டவர், படப்பிடிப்புத் தளத்தில் மிக எளிமையாக நடந்து கொள்வார்.

இவர்கள்

யாரிடமும் தனது பின்புலத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்கு நடிக்க வந்திருக்கும் இன்னொரு நடிகராக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். மனிதன் பொருளை எளிதில் சம்பாதித்து விடலாம், நிதானத்தையும் பக்குவத்தையும் சம்பாதிப்பது கடினம். இன்றைக்குத் தென்னிந்தியாவின் மிக முக்கியமான பயண முகவர்களில் ஒருவராய் வி.கே.டி. பாலன் அவர்களின் மதுரா ட்ராவல்ஸ் நிறுவனம் இருக்கிறதென்றால் அதற்கு அவரது உழைப்பும், நேர்மையும், சக மனிதர்களின் மீதான கரிசனமுமே காரணம்.

Also Read: செபாஸ்தியன் – கலையின் வழியாக அடையாளங்களை மீட்டெடுத்த மலேசியத் தமிழர்: இவர்கள் | பகுதி 3

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.