கோவிட்-19 தொற்றைப் பரப்பும் கொரோனா வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு உடல் திரவங்கள் மூலமும் பரவும் என்றுதான் முதலில் அறியப்பட்டது. அதற்குப் பிறகுதான் காற்று மூலமும் பரவலாம் என்று உறுதிசெய்யப்பட்டது. அதையே உலக சுகாதார நிறுவனமும் வரையறுத்துள்ளது. இந்நிலையில் தென்றல் காற்றைப் போன்ற இதமான காற்று வீசும் சமயத்தில் கொரோனை வைரஸ் வேகமாகப் பரவும் என்று ஓர் இந்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

Wind flow

ஐஐடி பாம்பே கல்லூரியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை `Journal Physics of Fluids’என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, ஒரு நபர் பொதுவெளியில் அல்லது வெளிப்புறத்தில் இருமும்போது, அவர் இருமிய திசையிலேயே காற்று வீசினால், அது தென்றல் காற்றைப் போன்று இதமான காற்றாக இருந்தாலும் அதில் கொரோனா வைரஸ் நீண்ட தூரத்துக்கு வேகமாகப் பரவும். காற்று வீசாமல் இருக்கும் நேரத்தைவிட இதமான காற்று வீசும்போது வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் இணை ஆசிரியர் அமித் அகர்வால், “இந்த ஆய்வின் அடிப்படையில், ஒருவர் வெளிப்புறத்தில் இருக்கும்போது கட்டயாம் மாஸ்க் அணிய வேண்டும். குறிப்பாக இதமான காற்று வீசும் நேரங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் வாயிலாகப் பரிந்துரைக்கிறோம். மேலும் வெளிப்புறங்களில் இருமும்போதும் தும்மும்போதும் முழங்கையை மடக்கி, அதில் முகத்தை வைத்து இருமுவதும் தும்முவதும் வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

Mask

Also Read: கொரோனா வைரஸ் உருமாற்றம்: ஏன் இந்த வைரஸ் மட்டும் நமக்கு சவாலாக இருக்கிறது?

இது பற்றி நுரையீரல் மருத்துவர் ஜாக்கின் மோசஸிடம் கேட்டோம்.
“இந்த ஆராய்ச்சியில் காற்றின் வேகத்தை வைத்து கொரோனா வைரஸின் பரவும் தன்மையைக் கணக்கிட்டிருக்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் பேசும்போதோ இருமும்போதோ ஒன்று முதல் 1.5 அடி வரை அந்தக் காற்று செல்லும்.

காற்றின் அடர்த்தி, அதிலிருக்கும் துகள்கள், மாசு ஆகியற்றின் காரணமாகவும், புவியீர்ப்பு விசையின் காரணமாகவும் அந்த தூரத்துக்கு மேல் பயணிக்க முடியாது. அதனால் பேசும்போதும் சுவாசிக்கும்போதும் வெளியிடும் காற்று அதிகபட்சம் 1.5 அடிவரைதான் செல்லும். புவியீர்ப்பு விசையானது கனமான துகள்களைக் கீழே ஈர்த்துக்கொள்ளும். இலகுவான கூறுகளை மேலே மிதக்கவிடும்.

corona virus

Also Read: Doctor Vikatan: மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியுமா?

ஒரு நபருக்கு கோவிட் தொற்று இருந்தால் அவர் பேசும்போது அல்லது இருமும்போது அதிலிருந்து வெளியாகும் நீர்த்திவலையில் வைரஸ் இருக்கும். அந்தக் காற்றின் வேகத்தில் அதிகபட்சம் 1.5 அடி வரை செல்லும். அதன் பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அந்த நீர்த்திவலைகள் தரைக்கு (Surface) ஈர்க்கப்படும். அவை தரைக்குச் சென்றால் 3 – 4 மணி நேரத்துக்கும் மேல் வாழாது.

ஒருவர் மாஸ்க் அணியாமல், முழங்கையை மடக்கி இருமாமல் நேரடியாக இருமும்போது அதிலிருக்கும் வைரஸ் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்திருக்கின்றனர். இதில் காற்றின் வேகத்தையும் ஒரு காரணியாகச் சேர்த்திருக்கின்றனர். அதன்படி கோவிட்-19 தொற்றுடைய நபர் ஒருவரின் பின்புறத்திலிருந்து காற்று வீசும்போது அவர் முன்பக்கமாக இருமினால் அவரிடமிருந்து வெளியாகும் வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆய்வின்படி ஒரு மணி நேரத்துக்கு 5 மைல் என்ற வேகத்தில் தென்றல் போன்ற மிதமான காற்று வீசினாலும், இருமலின் வேகத்தைப் பொறுத்து கொரோனா வைரஸ் 3-6 அடி முதல் 3.6 – 7.2 அடி வரைகூட பரவலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Pulmonologist Dr. Jackin Moses

ஆனால் எதிர்க்காற்று வீசும்போது இதைவிடக் குறைவான வேகத்தில் வைரஸ் பரவலாம். மிதமான காற்றிலேயே வைரஸ் அதிக தூரம் பயணிக்கிறது என்றால், கடற்கரையிலோ, வேகமாக காற்று வீசும்போதே வைரஸ் இன்னும் வேகமாகப் பரவலாம். மேலும் பொது இடங்களில் மக்கள் அதிக அடர்த்தியாக இருந்தால் நோய் பரவும் ஆபத்து இன்னும் அதிகமாகும்.

இந்த ஆய்வின்படி நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் வீடு, அலுவலகம் போன்ற மூடப்பட்ட இடங்களில் இருமினால்கூட குறிப்பிட்ட தூரம் வரை சென்று அந்த நீர்த்திவலைகள் கீழே சென்றுவிடும். ஆனால் வெளியே செல்லும்போதோ, பொதுவெளியிலோ ஒருவர் மாஸ்க் அணியாமல் இருமினாலோ தும்மினாலோ காற்றின் வேகத்தில் வைரஸ் அதிக தூரம் பயணித்து பலரைத் தாக்கும். உதாரணமாக, பேருந்தில் பயணிக்கும்போது மாஸ்க் அணியாமல் ஒருவர் இருமினாலோ தும்மினாலோ அது அந்தப் பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Sneeze

Also Read: Covid Questions: கோவிட் இழப்புகளால் பதற்றத்துக்கும் பயத்துக்கும் உள்ளாகும் குழந்தைகள்; தீர்வு உண்டா?

மூன்றாம் அலை ஏற்படுமா என்ற முடிவுக்கு இன்னும் வர முடியவில்லை. நாம் மெள்ள குழு எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) அடைந்து வருவதால் மூன்றாம் அலை ஏற்படாது என்றும் சற்று தாமதித்தாலும் மூன்றாம் அலை நிச்சயம் வரும் என்றும் வெவ்வேறு விதமான கணிப்புகளை தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிச்சயமற்ற நிலையில் தடுப்பூசி, அடிக்கடி கைகழுவுதல், மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் இவைதான் தலை சிறந்த தடுப்பு முறைகளாக இருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.