கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் இரவு, நேற்று பகல் பொழுதிலும் விடாமல் பெய்த மழை நேற்று இரவு முழுவதும் நீடித்தது. தொடரும் மழை காரணமாக பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக திக்குறிச்சி- மார்தாண்டம் சாலை, குழித்துறை- மேல்புறம் சாலைகள் துண்டிக்கப்பட்டன. திக்குறிச்சி, குழித்துறை, வைக்கலூர், முஞ்சிறை, மங்காடு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். மழை காரணமாக குழித்துறை பகுதியில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து பொருட்களை மீட்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட கலெக்டர் அரவிந்த்

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஒருவர் காணாமல் போயிருக்கிறார். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜெபின்(17) குழித்துறை பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார். குறும்பனை பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் நிஷான் அருகில் உள்ள வள்ளியாறு பகுதியில் குளித்த போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கீரிப்பாறை பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் தொழிலாளி சித்திரவேல் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 216.6 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. சிற்றார் 1 பகுதியில் 204.2 மி.மீ மழையும், சிவலோகம் பகுதியில் 194.6 மி.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 45.71 அடி தண்ணீர் நிரம்பியிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 75.85 அடி தண்ணீர் நிரம்பியிருக்கிறது.

Also Read: மகாராஷ்டிரா: கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 800 கால்நடைகள்!

திற்பரப்பு அருவிக்கு மேல் பகுதியில் தண்ணீர் பெருக்கு

தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீர் புகுந்த வீடுகளில் உள்ள மக்களை படகுகளில் மீட்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்துடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.