தமிழ்நாடு அரசியல் வரலாற்றைத் தீர்மானிக்கும் கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க மட்டுமே இன்றளவும் இருக்கின்றன. தி.மு.க-வைப் போல அரசியலில் அ.தி.மு.க-வும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவின்போதும் ஜெயலலிதாவின் மறைவை அடுத்தும் இனி அ.தி.மு.க-வால் தமிழ்நாடு அரசியல் களத்தில் நிலைக்க முடியாது என ஆரூடம் சொல்லப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த நிலையில் 2021-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் எனவும் 30-க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், எல்லா விமர்சனங்களையும் எதிர்கொண்டு 68 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க-வின் கடந்த கால ஆட்சி முறைதான் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அ.தி.மு.க தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஆட்சி நடத்தியது வரை மக்களிடம் தனக்கான இடத்தை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டது. அதற்கான காரணம் எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா ஆகியோர் நடத்திய ஆட்சிதான் எனவும் சொல்லப்படுகிறது. இப்போது இவர்கள் வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் இடம்பெற்றிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் இவர்கள் மூவர்தான் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா

பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் அ.தி.மு.க நீடித்திருக்கக் காரணமாகச் சொல்லப்படுவது அதன் கடந்த கால ஆட்சி. மக்களிடம் அது இணக்கமாகத் தன்னைக் காட்டிக்கொண்டது. இந்த அணுகுமுறைகளுக்கு அடித்தளமிட்டவர் யார்? அ.தி.மு.க ஆட்சியில் யாருடைய ஆட்சி சிறப்பானதாக இருந்தது உள்ளிட்ட சில கேள்விகளை மூத்த பத்திரிகையாளர்களிடம் முன்வைத்தோம்…

Also Read: தி.மு.க Vs அ.தி.மு.க: 1952 முதல் 2016 வரை தேர்தல் ஹைலைட்ஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

“அரசு என்பது அப்போது மக்களுக்கு இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதாக மட்டும் இல்லாமல் எதிர்காலத்தை நோக்கியும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்களின் வேலை என்றில்லாமல் இப்படி அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் காலத்தில் நடந்த சத்துணவுத் திட்டத்தின் விரிவாக்கம்தான் அ.தி.மு.க ஆட்சியின் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று. இந்த நடவடிக்கைதான் தமிழ்நாட்டில் கல்விதான் முக்கியமானது என்ற எண்ணம் இன்றைக்கு அனைவரிடமும் வளர முக்கியக் காரணியாக இருந்தது.தொழில் வாய்ப்புகளை ஒரே இடத்தில் குவிக்காமல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கினார். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார். நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல் மக்களோடு அவர் காட்டிய நெருக்கமும்தான் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகும் இன்றைக்கும் மக்கள் மத்தியில் அவர் பெற்றிருக்கும் மரியாதைக்கான அஸ்திவாரம்.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன் – மூத்த பத்திரிகையாளர்

காமராஜர், கருணாநிதி சிறந்த ஆட்சியாளர்களாக இருந்த காலத்தில் மக்களோடு அதிக நெருக்கம் காட்டியவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களோடு நெருக்கம் காட்டத் தொடங்கினார். . அதுதான் இப்போது வரையிலான அ.தி.மு.க-வின் பெரிய பலமாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் சிறப்பே அதிரடியான தீர்மானங்கள்தான். மத்திய அரசுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி, இலங்கை பிரச்னை தொடர்பாகவும் சரி அவர் எடுத்த முடிவுகளில் மிகத் தீர்க்கமாக இருந்தார்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஆம்… இல்லை… என்பதைத் தவிர அவரிடம் வழவழ பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கோயில்களில் விலங்குகள், பறவைகள் பலி கொடுக்கக் கூடாது, எஸ்மா சட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை நீக்கியது தவிர வேறெந்த உத்தரவையும் அவர் திரும்பப் பெற்றதாகச் சரித்திரமே இல்லை. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கான நலத்திட்டங்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்த முக்கிய செயல்திட்டங்கள். ஜெயலலிதாவின் முதல் ஆட்சியிலிருந்த ஊழல்களின் எண்ணிக்கை அடுத்த முறை ஆட்சி அமைத்தபோது குறைந்தது. ஆனால், ஆட்சியில் அரசியல் ரீதியிலான சில மோசமான தவறுகளைச் செய்தார். 2011 – 16 தேர்தலில் பெரிய அளவில் செயல்பாடே இல்லாமல் இருந்தாலும் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்றதற்குக் காரணம் முந்தைய காலங்களில் அவரது செயல்பாடுகள்தான் முக்கியமாக அமைந்தன. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் 2016 முதல் 2021 வரையிலான ஆட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், அதைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் அமையவில்லை.

ஜெயலலிதா – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் அரசியல் வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கிவிட்டார். அவரது ஆட்சியில் மக்கள் நலனும் இல்லை. சுயமாக முடிவெடுக்கப்படவும் இல்லை. எத்தனை நாட்கள் ஆட்சியில் இருப்போம் என்ற சந்தேகத்தோடுதான் ஆட்சியே அமைத்தார். அதில் என்ன கிடைத்தாலும் லாபம்தான் என்ற நோக்கில்தான் இயங்கினார். கடந்த ஒன்றரை ஆண்டில் ஓரளவு சிறப்பாகச் செயல்பட்டார். அதுவும் கூட சுனிலின் ஆலோசனையில்தான் செயல்பட்டார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலம் மட்டுமே மக்கள் நலன் சார்ந்து நடந்த அ.தி.மு.க ஆட்சி என்பேன்.”

மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி

“எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் நல்லது செய்ய வேண்டும், நல்லவிதமாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சின்ன ஊழல்கூட நடந்து குற்றவாளியாக யார் முன்னாலும் கை கட்டி நின்றுவிடக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் தெளிவாக இருந்தார். குறிப்பாக அவரின் ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த தேர்தலுக்குச் செலவு செய்யத் தனது சொத்துகளை அடகு வைக்கும் நிலையில்தான் அவரது பொருளாதாரச் சூழல் இருந்தது. என்னுடைய கணக்குப்படி எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் அ.தி.மு.க செய்ததிலேயே சிறப்பான ஆட்சி என்பேன். ஆனாலும் கூட இது முதல் இரண்டு ஆண்டுகள்தான் இந்த நல்லாட்சியும் நடந்தது. அதன்பின் எம்.ஜி.ஆரே சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய சூழல் உருவானது.

எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா தன்னை முதல்வராக இல்லாமல் மகாராணி, சுல்தான் என நினைத்துக் கொண்டு ஆட்சி செய்தார். அதனால்தான் அவர் வெற்றிகளைவிட மிகப்பெரிய தோல்விகளையே சந்தித்தார்.

Also Read: அ.தி.மு.க டெல்லி காவடி பின்னணி – “காப்பாத்துங்க!”

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி மக்கள் ஆதரவில் வரவில்லை என்றாலும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர்., எடப்பாடியிடம் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவிடம் மக்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகக் கூடத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் ‘அம்மா ஆட்சி’ என்று சொல்லிக் கொண்டது உணர்வுப்பூர்வமாக இல்லை. வெறும் சென்டிமென்ட்-க்காகச் சொல்லிக்கொண்டதற்கெல்லாம் மதிப்பிருக்காது”

ரவீந்திரன் துரைசாமி

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியின் நீட்சியாகத்தான் எடப்பாடி இருந்தது. எடப்பாடி ஆட்சியை டம்மி, பொம்மை ஆட்சி என்று சொன்னாலும் கூட அவர் சட்டம் ஒழுங்கை சரியாகப் பார்த்துக் கொண்டார். மக்கள் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தினார். சில ஊழல் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவையெல்லாம் வழக்கின் முடிவுகள் மூலம்தான் எந்தளவு உண்மை என்பது புலப்படும்.” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.