பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணிகளிலும் ஆண்களைப் போல பங்கெடுக்கத் தொடங்கிவிட்டாலும் ஆண்கள் அளவுக்கு அவர்களால் வருமானம் ஈட்ட முடியாமல் போகிறது. கூலி வேலை செய்யும் பெண் தொழிலாளி முதல் பணக்காரர் பட்டியலில் இருக்கும் பெண் முதலாளி வரை சமூகத்தின் அனைத்து தளத்திலும் இதே நிலைதான். அதிகம் சம்பாதிக்கும் மனைவிக்கு முட்டுக்கட்டை போடும் கணவர்கள், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ளார்கள். பலதரப்பட்ட காரணங்களின் அடிப்படையில், கணவனை விட மனைவியால் ஏன் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை என்பதற்கான விவரங்களைத் தேடி உலகளாவிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மற்றும் ஆய்வாளர்கள் பற்றிய கட்டுரை, பிபிசி செய்தி இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

Women

Also Read: குழந்தைத் தொழிலாளர்களான பள்ளி மாணவர்கள்; ₹50-க்கும் குறைவான கூலி; அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

உலக அளவில் வேலை மற்றும் சம்பளத்தில் இருக்கும் பாலின பாகுபாட்டை அறிய, 1973 முதல் 2016 வரை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் 45 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. உலகளாவிய ஊதிய பாகுபாட்டை ஆராயும் முதல் ஆய்வும் இதுதான்.

பெங்களூரில் பொதுக் கொள்கை மையத்தில் பேராசிரியராக இருக்கும் ஆய்வாளர் ஹேமா சுவாமிநாதன் மற்றும் பொருளாதார நிபுணரும் சமூக சேவகருமான பேராசிரியர் தீபக் மால்கன் ஆகியோர் இணைந்து 18 – 65 வயதுக்கு உட்பட்ட கணவன் – மனைவி உள்ள குடும்பங்களைத் தேர்வு செய்து, 28.5 லட்சம் குடும்பங்களிலிருந்து தரவுகளைச் சேகரித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை, குடும்பத்தை `ஒரு கறுப்புப் பெட்டி’ என வர்ணிக்கிறது.

சமூக பாலின சமத்துவமின்மை மற்றும் இல்லறத்தில் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றைக் கொண்டு நாடுகளை தரவரிசைப்படுத்தியது ஹேமா மற்றும் மால்கனின் ஆய்வு. ஆய்வின் முடிவில் எல்லா நாடுகளிலும் பணக்காரர் – ஏழை வித்தியாசமின்றி இருப்பதுபோல, எல்லா காலத்திலும் பாலின சமத்துவமின்மை இருந்துள்ளது, இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

“ஆண்களும் பெண்களும் 100% வேலைக்குச் செல்லும் நாடு என்று ஒன்றுகூட இல்லை, வளர்ந்த வல்லரசு நாடுகளும் சேர்த்துதான். எல்லா இடங்களிலும் பெண்கள் ஆண்களைவிடக் குறைவாக சம்பாதிப்பவர்களாகவே இருக்கின்றனர்” என்கிறார் ஆய்வாளர் மால்கன். மேலும், “பாலின சமத்துவம் மிகுந்திருக்கும் வட அட்லான்டிக் நாடுகளிலும் இதே நிலைதான். எல்லா இடங்களிலும் குடும்பத்தின் வருமானத்தில் பெண்களின் பங்கு 50%-க்கும் குறைவாகத்தான் இருக்கிறது” என்கிறார் மால்கன்.

Woman at the Office (Representational Image)

இந்தப் பாலினப் பாகுபாடுகளுக்கு உலகளாவிய காரணமாக இருப்பது, கலாசாரம். கலாசார ரீதியில் ஆண்கள் சம்பாதிக்க வேண்டியவர்களாகவும் பெண்கள் வீட்டைப் பேணுபவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். பல பெண்கள் குழந்தைப் பேற்றின்போது வேலையிலிருந்து ஓய்வு எடுக்க நேர்கிறது. அதில் சிலர் வேலையை இழக்கவும் செய்கின்றனர். பாலின அடிப்படையில் பெண்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவது ஆகியவை பெண்களுக்குத் தடையாக இருந்தாலும், மிக முக்கியமாக, சம்பளமும் ஓய்வும் இல்லாமல் பார்க்கும் வீட்டு வேலைகள் பெண்களின் பொறுப்பாக இன்றளவும் பார்க்கப்படுவது முதன்மை பிரச்னையாக உள்ளது.

2018-ம் ஆண்டு உலகத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, `உலக அளவில், ஊதியமற்ற தினசரி பணி செய்யும் நேரத்தில் 76.2% நேரப் பணிகளைப் பெண்கள்தான் செய்கின்றனர். ஆசிய பகுதிகளில் இது 80% சதவிகிதத்தைத் தாண்டுகிறது. சம்பளம் இல்லாமல் திணிக்கப்பட்டுள்ள, குடும்பப் பொறுப்பு என்ற பெயரில் பெண்கள் செய்கின்ற வேலைகள் பொதுத் தளத்தில் அவர்களின் பங்களிப்பைத் தடுக்கும் முக்கியத் தடையாக உள்ளன’ என்கிறது இந்த ஆய்வு.

பெண்கள் குறைந்த வருமானம் பெறுவது பொருளாதார ரீதியில் அவர்களைப் பாதிப்பது மட்டுமல்லாது குடும்பத்தின் பாலின சமத்துவத்தையும் பாதிக்கிறது. “வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பும் பங்களிப்பும் யார் கண்களுக்கும் தெரிவதில்லை. அதுவே, வெளியில் சம்பளம் வாங்கும் மனைவி வீட்டுக்குக் கொண்டுவரும் பணத்தால் அவர் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடியும். இதனால் அவரின் மதிப்பு உயர்வதுடன் வீட்டில் அவரது குரலையும் உயர்த்திக்கொள்ள முடியும்” என்று ஆய்வாளர் ஹேமா குறிப்பிடுகிறார். இவற்றுக்கிடையில் 1973 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், குடும்பப் பாலின சமத்துவமின்மை 20% குறைந்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Woman doing Household work (Representational Image)

Also Read: Doctor Vikatan: மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியுமா?

“இந்தக் காலகட்டத்தில் உலகின் பல பகுதிகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி கண்டுள்ளன. அங்கு பெண்களுக்கு ஏதுவான கொள்கைகள் மற்றும் சம ஊதியம் வழங்க முறையிடும் இயக்கங்கள் ஆகியவை ஆண் – பெண் ஊதிய இடைவெளியைக் குறைத்துள்ளன” என்கிறார் ஹேமா. என்றாலும், இன்னும் குறைக்கப்பட வேண்டிய இடைவெளி அதிகம் உள்ளது என்றும் கூறுகிறார்.

“சம்பளமில்லா வீட்டு வேலைகளிலும் பராமரிப்பு வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுவதால், நிறுவனங்கள் போதுமான அளவு பெண்களைப் பணியமர்த்துவதில்லை. எனவே, `பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறதா? பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பேணுவதற்கு ஏதுவான கொள்கைகள் உள்ளதா?’ என நாம் கேட்க வேண்டும். இந்தச் சம்பளமில்லா வேலைகளைப் பகிர்ந்துகொள்ள ஆண்களும் முன்வர வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். அரசாங்கங்களும் சமூகமும் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன” என்கிறார் ஹேமா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.