உத்தரப் பிரதேசத்தில் வால்மீகி சமூக மக்கள் மத்தியில் பிரியங்கா காந்தி ஏற்படுத்தியுள்ள தாக்கம், காங்கிரஸ் கட்சிக்கு வரவிருக்கும் தேர்தலில் கைகொடுக்குமா என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2014-ல் பிரதமரான மோடி, ‘தூய்மை இந்தியா’ எனப்படும் ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டத்தை தொடங்குவதற்காக அவர் தேர்வு செய்த இடம் மகாத்மா காந்தி தங்கியிருந்த டெல்லியின் வால்மீகி நகர். அப்போது இந்தத் திட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் டெல்லியில் வால்மீகி நகரில் இருந்து 500 கி.மீ தொலைவில் இருக்கும் லக்னோவின் ‘லவ் குஷ்’ நகரில் உள்ள வால்மீகி பஸ்தி மக்கள். வடமாநிலங்களில் பட்டியலினப் பிரிவில் இருக்கும் வால்மீகி சமூக மக்கள் வசிக்கும் இடங்களே வால்மீகி பஸ்தி என அழைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் காலனி பகுதிகளாக பல இடங்களில் இருக்கிறது இந்த பஸ்திகள். வால்மீகி சமூக மக்கள் பெரும்பாலும் தூய்மைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். லவ் குஷ் நகர் காலனியில் மட்டும் சுமார் 4,000 வால்மீகி குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பலரும் அதன்பிறகு பாஜகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இப்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகுப் உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதே வால்மீகி பஸ்திக்குச் சென்று, வால்மீகி கோவிலில் தரையை சுத்தம் செய்ததோடு அங்கு வசிக்கும் பல குடும்பங்களைச் சந்தித்துப் பேசினார். பிரியங்காவின் இந்த செயல் வால்மீகி சமூக மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அம்மக்கள் மத்தியில் பிரியங்கா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று தற்போது சொல்லப்படுகிறது.

image

பிரியங்கா காந்தியுடன் கோவில் தரையை சுத்தம் செய்த ரேகா என்ற பெண், “நான் கோவில் வளாகத்தின் தரையை சுத்தம் செய்யும் போது, பிரியங்கா தானும் சுத்தம் செய்வதாக கூறினார். சுத்தம் செய்ததோடு, எங்கள் வீட்டிற்கு வந்து அனைவரையும் சந்தித்துச் சென்றார். இவ்வளவு பெரிய தலைவர் இதுபோன்று செய்வதை நான் முதல்முறை பார்க்கிறேன்” என்றுள்ளார்.

இதேபோல் வினய் என்பவர், “இவ்வளவு பெரிய ஆளுமை முதன்முறையாக எங்கள் பகுதிக்கு வருவது இப்போதுதான். இந்த தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வேன். நான் செல்ஃபி எடுத்துக்கொள்ள கேட்டபோது என் தோளில் கை வைத்து புகைப்படம் எடுத்தார். நாங்கள் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பொதுவாக, பெரிய தலைவர்கள் எங்களைத் தொடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் பிரியங்கா அப்படி நடக்கவில்லை. மாறாக எங்கள் பகுதி பெண்களை கட்டிப்பிடித்தார்” என்றுள்ளார்.

உத்தப்பிரதேச பகுதிகளில் வால்மீகி சமூக மக்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கப்படுவது அடிக்கடி நிகழும். இதனால் அம்மக்கள் விரக்தியில் இருந்த நிலையில்தான் அவர்களுடனான பிரியங்காவின் சந்திப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள இந்த சமூக மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது அம்மக்கள் காங்கிரஸ் பின்னால் செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த காலங்களில் இந்த சமூக மக்கள் உத்தரப் பிரதேசத்தின் முக்கிய கட்சிகளுக்கு ஆதரவளித்திருக்கின்றன. கடைசியாக பாஜகவுக்கு தங்களின் முழு ஆதரவை கொடுத்தனர். அதனால் பாஜக பெரிய வெற்றிகளை இந்த சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சாத்தியப்படுத்தியது. ஆனால், பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டும் இம்மக்கள், “மோடியும் தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார். அது எங்களில் பலரை ஈர்த்தது. ஆனால் பிரியங்காவின் வருகையில் எங்களுடன் தனித்தொடர்பு இருந்தது.

எங்களை சந்தித்து எங்கள் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் சொன்ன பிரச்னைகளைத் தீர்ப்பதாக அவர் உறுதியளித்தார். அதனால் இந்த முறை எங்களின் ஆதரவு அவருக்குத்தான். நாங்கள் முன்பு சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தோம். ஆனால், இந்த முறை நாங்கள் பிரியங்கா தீதிக்கு தான் எங்கள் ஆதரவு. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்கள், சிலர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்கிறார்கள். இந்த வேலையை நிரந்தரம் ஆக்குவதாக முன்பு ஆட்சி செய்த சமாஜ்வாதி, இப்போது இருக்கும் பாஜக அரசு போன்ற வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை” என்றுள்ளனர்.

image

உத்தரப் பிரதேசத்தில் மக்கள் தொகையில் பட்டியிலன மக்கள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உள்ளனர். இதில் வால்மீகி சமூக மக்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். இதனால் அவர்கள் ஒரு முக்கியமான வாக்கு வங்கியாக திகழ்கிறார்கள். 1990 வரை வால்மீகி சமூக பாரம்பரிய காங்கிரஸ் வாக்காளர்களாக இருந்தனர். பின்னர் அவர்கள் கன்ஷி ராம் மற்றும் மாயாவதியை ஆதரித்தனர். பிஎஸ்பி பலவீனமடைந்தபோது, பிரதமர் மோடி ஜாதவ் அல்லது பட்டியிலன மக்களை கவர நிறைய செயல்பாடுகளை கையிலெடுத்தார். அதனால் அம்மக்களின் ஆதரவு வெகுவாக கிடைக்க, பாஜக ஆட்சியமைப்பது எளிதானது.

அதேநேரம் இவர்களின் வாக்குகளை இழந்த காங்கிரஸ் மிகவும் பலவீனமாகி போனது. அந்தத் தேர்தலில் 403 இடங்களில் காங்கிரஸ் 7 இடங்களை மட்டுமே பெற்றது. இந்த நிலையில்தான் பிரியங்காவால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் திரும்ப தொடங்கியிருக்கிறது வால்மீகி சமூகம். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு முக்கிய ஆதரவாக இருப்பது பிராமணர்கள், பட்டியலின மக்கள் மற்றும் முஸ்லிம்கள். இதில் இழந்த பட்டியலின மக்களின் வாக்குகளை பிரியங்காவால் பாதியைக் கூட திரும்பக் கொண்டுவர முடிந்தால், காங்கிரஸ் அதன் செயல்திறனை மேம்படுத்த முடியும்.

உ.பி.யைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஷில்ப் ஷிகா சிங் என்பவர், “பட்டியிலன மக்களை கவர, காங்கிரஸ் நிறைய முயற்சிகள் செய்வதாகத் தெரிகிறது. அதேநேரம் பிரியங்காவின் செயல்பாடுகளையும் அம்மக்கள் வெகுவாக கவனிக்கிறார்கள். இதனால் அம்மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பிரியங்காவிடம் சில சாத்தியங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது” என்றுள்ளார்.

– மலையரசு

தகவல் உறுதுணை: The Print, Bharathtimes

| வாசிக்க > லக்கிம்பூர் வன்முறையின் தாக்கம்: உ.பி. தேர்தலில் யோகிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?! |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.