என்னதான் பாரிஸ் ‘காதலர்களின் நகரம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் இன்றும் காதலின் உறைவிடமாக, காதலின் அதிகபட்ச வெளிப்பாடாகக் கொண்டாடப்படுவது ‘தாஜ் மஹால்’ தான். பல பெண்களைத் திருமணம் செய்த ஒருவன், ஒரு பெண்ணிடம் மட்டும் அவள் இறந்த பிறகும் தன் காதலைக் வெளிப்படுத்த, உலகமே மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கும் அளவிற்கு ஒரு கல்லறை கட்டி வைத்தான் என்றால் அது பெரிய விஷயம்தானே. அந்த பெண்ணின் மேல் அவன் கொண்ட மோகமும், காதலும் புனிதத்துவம் அடைந்த நிலையுற்றதுதானே!

image

அப்படிப்பட்ட காதலின் சின்னத்தை 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் சிறந்த கட்டடக்கலை என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் தாஜ் மஹால் சேர்க்கப்பட்டது.

image

2007-ம் ஆண்டு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட தாஜ் மஹாலுக்குள் உலா செல்வோம் இந்த கட்டுரையின் வழியே.

image

ஜஹாங்கீர் என்னும் முகலாயப் பேரரசரின் மகனான ஷாஜகானுக்கு 1607-ம் ஆண்டு பெர்சிய நாட்டைச் சேர்ந்த சான்றோர் குடும்பத்துப் பெண்ணான அர்ஜுமந்த் பானு பேகம் என்பவரோடு திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், அப்போதுதான் அவருக்கு வயது 15. இதனால் திருமணம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 5 ஆண்டுகள் கழித்து 1612-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. முகலாயர்களின் முறைப்படி திருமணமான பெண்ணிற்கு புதுப்பெயர் சூட்டப்பட்டது. அதாவது அர்ஜுமந்த் பானு பேகம் என்ற பெயர், மும்தாஜ் மஹால் என்று மாற்றப்பட்டது. ஷாஜஹனுக்கும் மும்தாஜுக்கும் உள்ள காதல், தனித்துவமாகப் பார்க்கப்பட்டது. இவர்கள் காதலின் வெளிப்பாடாக மும்தாஜ் 14 குழந்தைகளை ஈன்றெடுத்தார். 1631-ம் ஆண்டு தனது 14-வது குழந்தையான கவுஹரா பேகம் பிறந்த பின், ஏற்பட்ட பிரசவ சிக்கலில் மும்தாஜ் இவ்வுலகை விட்டுப்போனார்.

image

தன்னுடைய ஆசை மனைவியின் நினைவாக ஒரு கட்டடத்தை எழுப்ப முயற்சி செய்தார். இதற்காக, 42 ஏக்கர் பரப்பில் 1632-ம் ஆண்டு தாஜ் மஹால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மண்டபத்தின் பிரதான வேலைகள் 1642-ம் ஆண்டு நிறைவுபெற்றது. இதனையடுத்து, அதன் அடுத்த கட்டமாக அதைச்சுற்றி ஒரு மசூதியும் விருந்தினர் மாளிகையும் 1653-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது. மண்டபத்தின் நடுப்பகுதிக்குக் கீழே ஓர் அறை அமைக்கப்பட்டு அங்கே மும்தாஜின் உடலானது வைக்கப்பட்டது. வெள்ளைப் பளிங்கு கல்லில் கட்டப்பட்டதைப்போன்றே கருப்பு கற்களை வைத்து மற்றொரு மஹால் கட்டப்பட இருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்குள் பதவிக்கு ஆசைப்பட்ட ஒளரங்கசிப் தனது தந்தையை சிறையில் அடைத்துவிட்டு தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.

image

தாஜ்மஹாலில் சிறைவைக்கப்பட்ட ஷாஜகான் 1666-ம் ஆண்டு சிறையிலிருந்து தாஜ்மஹாலை பார்த்தபடியே மரணமடைந்தார். அவரின் உடலும் மும்தாஜ் உடலின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தாஜ் மஹால் கட்டுவதற்கான கட்டுமான திட்டத்தில், கட்டடக் கலையில் சிறந்த உஸ்தாத் அஹமத் லஹரி குழுவின் வழிகாட்டுதலின் கீழ் சுமார் 20,000 கைவினைஞர்கள் பணிபுரிந்தனர். யமுனை நதிக்கரைக்கு வெள்ளைப் பளிங்குக் கற்களைச் சுமந்து செல்ல சுமார் 1,000 யானைகளைப் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

image

தாஜ்மஹாலின் என்றதும் நினைவிற்கு வருவது பெரிய வெள்ளை குவிமாடம் கொண்ட சமாதிதான். இது ஒவ்வொரு மூலையிலும் நான்கு உயரமான மினராக்களால் சூழப்பட்டுள்ளது. வெளிப்புறம் வெள்ளை பளிங்கினால் ஆனது. முக்கியமாக, இங்கு, ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மஹாலை நினைவுகூரும் வகையில் இரண்டு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதே.

image

இதையும் தாண்டி அதில் பல சரித்திரங்களும், கட்டடக் கலை நுணுக்கங்களும் ஏராளமாக அடங்கியிருக்கிறது. சிறந்த கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தாஜ்மஹாலை ‘கட்டடங்களின் இளவரசி’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

image

தாஜ்மஹாலின் முக்கிய நுழைவாயிலானது முகலாயர்களின் கட்டடக்கலைக்கு சிறப்புப் பெற்ற சிவப்பு மணற்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. முகலாயர்களின் கட்டடங்களை ஒப்பிடும்போது, மிகவும் சிறப்பு வாய்ந்தது தாஜ்மஹால். இதில், விலையுயர்ந்த கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

image

தெற்கு வாயில்: (தற்போது நுழைவுக்காக மூடப்பட்டுள்ளது) இது பாதசாரிகளுக்கானது. இந்த வாயிலின் வலது பக்கத்தில் சிவப்புக் கல்லிலான கல்லறை, நீதிமன்ற முற்றங்களால் சூழப்பட்ட குவிமாடம் அமைந்துள்ளது. இது மும்தாஜ் மஹாலின், ஒரு தோழியின் கல்லறை என்று கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காக இந்த கட்டிடம் ஒரு பணிப்பெண்ணின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. மத்திய அறையில், பளிங்குக் கல்லின் இரண்டு எழுதப்படாத கல்லறைகள் உள்ளன.

image

கிழக்கு வாசல்: இந்த வாயிலானது அழகான தோட்டத்துடன் காணப்படும். இந்த வாயிலுக்கு அருகில் ஓர் உயர்ந்த மேடையில் ஒரு குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. ஷாஜஹானின் மற்றொரு மனைவியான சர்ஹிந்தி பேகம் நினைவாக இந்த கல்லறை கட்டப்பட்டதால் இந்த வாயில் ‘சிரிந்தி தர்வாசா’ என்று அழைக்கப்படுகிறது.

image

மேற்கு வாசல்: இது தாஜ்மஹாலின் முக்கிய நுழைவாயில் ஆகும். இந்த வாயிலுக்கு வெளியே சிவப்பு மணல் கல் கட்டிடம் உள்ளது, இது ஷாஜகானின் மற்றொரு மனைவி ஃபதேபூர் பேகம் நினைவாகக் கட்டப்பட்டது. ஓர் அழகான மொட்டை மாடி. அதன் அளவீடுகள் 130 அடி மற்றும் சுமார் 175 அடி வரை இருக்கும். ஒரே நேரத்தில் 200 நபர்கள் இங்கு நமாஸ் செய்யும் அளவுக்கு வசதிகள் உள்ளது.

image

இங்குள்ள மினார்கள் நான்கும் 130 அடிக்கு மேல் உயரம் கொண்டவை. சமச்சீராக சமாதியின் மேடையின் மூலைகளில் அமைக்கப்பட்டு கட்டடக் கலையின் அமைப்பிற்கு ஒரு நிறைவைக் கொடுக்கிறது. நிலநடுக்கம் வந்தாலும், மினார்கள் கீழே சாயாமல் இருக்க வெளி பக்கம் சாய்ந்தவாறு கட்டப்பட்டுள்ளது.

image

நிறமாலை மஹால்: தாஜ்மஹாலின் கட்டட வடிவமைப்பும், நிறத் தேர்வுகளும் இதை மேலும் சிறப்புடையதாக்கி இருக்கிறது. உதாரணமாக, தாஜ்மஹாலின் குவிந்த மற்றும் குழிந்த வடிவமைப்புகள் அத்தனை நெளிவு சுழிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றன. இதன் மீது வெயில் பட்டுப் பிரதிபலிக்கும் நிறமும், பச்சைத் தோட்டங்களும், செந்நிறப் பாதைகளும் வண்ணமயமாக மனதை மயக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

image

காலை நேரத்தில் இளஞ்சிவப்பாகவும், பகலில் வெள்ளை நிறத்திலும், மாலையில் மஞ்சள் நிறத்தில் தாஜ் மஹால் ஒளிரும். மாதத்தின் 5 நாட்களான பௌர்ணமி, அதற்கு முந்தைய 2 இரவுகள், பிந்தைய 2 இரவுகளில் இரவுநேர ஒளிரும் தாஜ்மஹால் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது. அதற்கென்று சிறப்புக் கட்டணமும், அனுமதியும் பெற வேண்டும்.

image

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு…

சென்னையிலிருந்து 1,955 கி.மீ தொலையில் உள்ளது. சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றால் 6 மணி நேரத்தில் தாஜ்மஹாலை அடையலாம். ஆக்ரா விமான நிலையம் அடைந்து அங்கிருந்து தாஜ்மஹால் செல்லலாம். இதுவே சென்னையிலிருந்து ரயிலில் சென்றால், சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து ஆக்ரா வரை செல்லாம். பின் அங்கிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோவில் செல்லலாம்.

தாஜ்மஹாலை பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் அனுமதி உண்டு. இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு 50 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டினருக்கு 1,100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. முக்கிய பகுதியான சமாதிக்குச் செல்ல கூடுதலாக 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை.

image

சுற்றுலாவிற்குச் செல்ல விரும்புபவர்கள் www.asiagracircle.in மற்றும் www.tajmahal.gov.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

காதலுக்கு அடையாளமாகவும், கட்டங்களின் இளவரசி என அழைக்கப்படும் தாஜ்மஹாலின் கட்டடக்கலையையும், அதன் வடிவமைப்பையும் கான விரைவில் ஒரு சுற்றுலாவுக்குத் தயாராவோமா..?

(உலா வருவோம்…)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 4: மத ஒற்றுமையின் சாட்சி – எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.