அரசியலைப் பொறுத்தவரை ஒருவருடைய வீழ்ச்சியில்தான், இன்னொருவரின் எழுச்சி அடங்கி இருக்கிறது என்பார்கள். நன்மை, தீமை பற்றியெல்லாம் பார்க்காமல், லாபமா நஷ்டமா என்பதுதான் அரசியலில் முக்கியம். அதன்படி, அதிமுக-வின் வீழ்ச்சியில்தான், சசிகலாவின் எழுச்சி அடங்கி இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சசிகலா

ரீ-என்ட்ரி தொடர்பாக சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, “சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள பல்வேறு வழிகளில் ஒருங்கிணைப்பாளர்களிடம் முயன்றுப் பார்த்தார். ஓ.பி.எஸ்-க்கு சசிகலா மீது சாஃப்ட் கார்னர் இருப்பதால் அவர் ஒப்புக்கொண்டாலும், எடப்பாடி சுத்தமாக சம்மதிக்கவில்லை என்பதால் தொங்கலில் நிற்கிறது. ஒருபோதும் அதிமுக-வில் இனி சசிகலாவுக்கு இடமில்லை என்பதில் எடப்பாடியார் உறுதியாக இருக்கிறார். எனினும், இரட்டைத் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் தன்னிடம் வருவார்கள் என்று எண்ணி, வரும் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்துவருகிறார் சசிகலா.

எடப்பாடி பழனிசாமி – சசிகலா – ஓ.பன்னீர்செல்வம்

அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செய்யும் சசிகலா, அடுத்த நாள் 17-ம் தேதி ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்துக்குச் சென்று அ.தி.மு.க கொடியை ஏற்றுகிறார். பிறகு அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியில் இருந்து சுற்றுப் பயணம் செய்யவிருப்பதாகவும் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஜெயிக்கிறதா? தோற்கிறதா அதைப்பற்றிக் கவலைப்படாமல், முன்பே தயார் செய்த பிளான் இது. இப்போது வெளிவந்திருக்கும் முடிவுகளின் படி மாவட்ட கவுன்சில் 140-ல் 139-ஐ தி.மு.க கைப்பற்றவே, ஒன்றை மட்டுமே அ.தி.மு.க பெற்றது. தொண்டர்கள் பெரும்பாலும் இரட்டைத் தலைமையை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவே இதுதான் சசிகலா அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்கான சரியான தருணம்” என்றனர்.

சசிகலா

அ.தி.மு.க கலைப்பிரிவு இணைச் செயலாளர் நாஞ்சில் அன்பழகனிடம் பேசினோம். “உள்ளாட்சித் தேர்தலில் கட்சி செல்வாக்கை விட சொந்த செல்வாக்கிற்குதான் முக்கியத்துவம் கிடைக்கும். இதற்கும் சட்டசபை தேர்தலுக்கும் தொடர்பில்லை. 2019 உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவிகிதம் ஜெயித்தோம். அப்படியென்றால் 2021 தேர்தலில் வென்றிருக்க வேண்டுமே? பல தேர்தலில் தி.மு.க தோற்றிருக்கிறது. அதற்கெல்லாம் அக்கட்சித் தலைமை காரணம் என எடுத்துக்கொள்ள முடியுமா? இதனால் பின்னடைவு என்பது தவறு. தலைமையை ஏற்றுக்கொண்டுதான் பணியாற்றினோம்.

Also Read: சசிகலா ரீ-என்ட்ரி முதல் செந்தில் பாலாஜியின் அதிமுக பாசம் வரை ! – கழுகார் அப்டேட்ஸ்

சசிகலாவுக்கும், அ.தி.மு.க-வுக்கும் தொடர்பில்லை. அ.ம.மு.க-வுக்கு தொடர்புள்ளது. வாஷ் அவுட் ஆனது அமமுகதான். அவர்களை நம்பியிருக்கிற சொச்ச ஆதரவாளர்களைத் திருப்திபடுத்த இதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆண்டிகள் கூடி கட்டும் மடமாகவே சசிகலா முயற்சி முடியும். ‘அடாது செய்பவன் படாது படுவான்’ ஒரு சொல்லாடல் உண்டு. சசிகலா அத்தகைய அடாது அரசியலைச் செய்கிறார்கள். களத்தில் ஒருபோதும் நிற்க முடியாது. இது வடிவேலு பானி காமெடி அரசியல். எவ்வளவு பெரிய தோல்வி கிடைத்தாலும் கட்சித் தொண்டர்கள் சின்னம் இருக்கும் இடத்தில்தான் இருப்பார்கள். சசிகலாவினால் ஒருபோதும் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வாய்ப்பில்லை” என்றார்.

சுகுமார் பாபு, அமமுக

அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் சுகுமார்பாபுவிடம் கேட்டபோது, “அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவினை சசிகலா தலைமையினால் மட்டுமே மீண்டும் பழைய எழுச்சி நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். இதனை தலைவர்களும் தொண்டர்களும் உணர்ந்துகொண்டால் போதும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.