இந்த நானிலம் முழுவதும் தட்சிணாமூர்த்தியாக இறைவன் அருளும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றுள் மகிமை பொருந்திய சில தலங்களை குருத்தலமாகப் போற்றி வணங்குகிறோம். காரணம், அந்தத் தலங்களில் லோக குருவான தட்சிணாமூர்த்தியை வணங்க, குருவருளும் திருவருளும் ஸித்திக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.

அருள்மிகு வதான்யேஸ்வரர் திருக்கோயில்

தமிழகத்தில், குருஸ்தலமாகப் போற்றப்படும் தலங்களுள் முதன்மையானது ஆலங்குடி. அந்தத் தலத்துக்கு இணையான மற்றுமொரு தலம் உண்டு. மயிலாடுதுறை வள்ளலார்கோயில் எனப் போற்றப்படும் அருள்மிகு வதான்யேஸ்வரர் திருக்கோயில்தான் அது.

பிரதோஷ தினத்தில் வழிபடவேண்டிய திருக்கோயில் இது. கங்கையில் மூழ்கி பாவத்தைக் கரைத்து புண்ணியம்பெறும் நோக்கில், கங்கை தீர்த்ததுக்குக் காசிக்குச் செல்லும் பக்தர்கள் கோடானுகோடி பேர். ஆனால், அந்த கங்கையே தேடி வந்து புண்ணியம் பெற்ற திருத்தலம் இது. மேலும், ராமர் வழிபட்டு வரம்பெற்ற ஊர் என்பதால், குருப்பெயர்ச்சி தினத்தில் பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், அவசியம் வழிபடவேண்டிய க்ஷேத்திரம் இது என்கின்றன ஞானநூல்கள். இதன் மகிமையை இன்னும் விரிவாக அறிவோம்.

வழிபாடு

பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த தலம் இது

நமக்குள் இருக்கும் சக்தி, அந்த அநாதியான சிவனிடமிருந்தே கிடைத்துள்ளது. ஆனால், அதை உணராது தம் வலிமையில் கர்வம் கொள்வது ஞானத்தின் அடையாளமாகாது. ஒருமுறை, ரிஷபதேவருக்குள்ளும் கர்வம் எழுந்தது.

தன் சக்தி சிவனருளால் கிட்டியது என்பதை உணராமல், ‘சிவனாரைத் தாங்கிச்செல்லும் வலிமை மூவுலகிலும் தனக்கே உள்ளது’ என்று கர்வம் கொண்டாராம் நந்திதேவர். ஞானத்தின் பிறப்பிடமான ஆதிசிவன், நந்தியின் கர்வத்தைத் தீர்க்க முடிவு செய்தார். தன் சடையிலிருந்து ஒரு முடியை எடுத்து நந்தியின் மேல் வைத்தார். நந்திதேவரால் அதன் எடையைத் தாளமுடியவில்லை. அப்படியே நிலத்தில் அமிழத் தொடங்கினார். அப்போது அவர் வெட்கமடைந்து சிவனருளை வேண்டினார். ‘பிழைபொருத்தருளி மெய்ஞ்ஞானம் அருளவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.

நந்தி

சிவனும் மனம் கனிந்தார். ‘காசிக்கு இணையான புண்ணியத் தலமாகத் திகழும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி தம்மை வழிப்பட்டால், அனைத்துப் பாவங்களும் நீங்கி புதுப்பொலிவு கிடைக்கும்’ என்று நந்திதேவருக்கு அருள்பாலித்தார். அதன்படி, ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடி சிவனைத் தொழுது, மீண்டும் தன் சக்திகளை மீட்டுக்கொண்டார் நந்தி தேவர். அவருக்கு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாகி அருள்செய்த காரணத்தால், இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தோடு காட்சியருள்கிறார். இந்தத் திருக்கோலம் மிக விசேஷமான கோலம் ஆகும்.

கங்கா புண்ணியம் அருளும் தலம் இது. இந்த தட்சிணாமூர்த்திக்கு, ‘கங்கா அனுக்கிரக மேதா தட்சிணா மூர்த்தி’ என்ற திருநாமமும் உண்டு. ஜீவன்கள் அனைத்தும் கங்கையில் நீராடினால், தங்கள் பாவங்கள் நீங்கப்பெறுவர் என்பது புராணம் சொல்லும் அறிவுரை. ஒருமுறை, `யுகம் யுகமாய் உலக மாந்தர்கள் என்னிடம் வந்து நீராடி புண்ணியம் பெறுகிறார்கள். அவர்களின் பாவங்களோ என்னிடம் சேர்கின்றன. ஆகவே, என் பொலிவும் சாந்நித்தியமும் குறைகின்றனவே’ என்று எண்ணி மிகவும் கவலைகொண்டாள், கங்காதேவி.

சிவபெருமான்

தனது கவலையை சர்வேஸ்வரனாம் சிவபெருமானிடம் சமர்ப்பித்து, தனக்கொரு தீர்வு சொல்லும்படி வேண்டிக்கொண்டாள். அப்போது அவர், மயிலாடுதுறை தலத்தின் மகிமையையும் ஐப்பசியில் துலாக்கட்ட காவிரி ஸ்நானத்தின் பெருமைகளையும் எடுத்துக்கூறி, “அங்கு சென்று காவிரியில் நீராடினால் மீண்டும் பொலிவடைவாய்’’ என்று அறிவுறுத்தினார். அதன்படி, கங்கை இந்தத் தலத்துக்கு வந்து காவிரியில் நீராடித் தன் பாவங்கள் தீரப்பெற்றாள் என்கின்றன புராணங்கள்.

நாமும் இந்த ஐப்பசியில், இந்தத் தலத்தை நாடிச்சென்று காவிரியில் நீராடி, அருள்மிகு வதான்யேஸ்வரரை வழிபட்டு, காசிப்புண்ணியமும் கங்கையில் நீராடிய பலனையும் பெற்று வருவோம்.

குருப்பெயர்ச்சி

குரு பரிகார திருத்தலம் இது!

மனிதர்களுக்கும் தேவர்களுக்கு நல்வழியைக் காட்டுவது குருபகவான். தேவர்களின் குருவாகத் திகழ்பவர். மனிதர்களுக்குக் குறையென்றால் தேவகுருவை நாடலாம். தேவகுருவுக்கே ஒரு குறையென்றால்… யாரை நாடுவது?!

ஆமாம், நவகிரகங்களில் ஒருவரும் தேவ குருபகவானுமாகிய பிரகஸ்பதியையும் ஒருமுறை தோஷம் பற்றிக்கொண்டது. திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை. குரு பகவான், இந்தப் பிரபஞ்சத்துக்கே குருவாகிய தட்சிணாமூர்த்தியை – சிவபெருமானைச் சரணடைந்தார். தன் தோஷம் தீர்க்கும்படியும், அந்த தோஷத்தால் தான் இழந்த பதவியை மீட்டுத் தரும்படியும் வேண்டிக்கொண்டார்.

சிவன், அவருக்கு அற்புதமான வழியைக் காட்டினார். மயிலாடுதுறை காவிரிக் கட்டத்தின் மகிமையை எடுத்துரைத்தார்.

“அற்புதமான அந்த தலத்துக்குச் சென்று வழிபட்டால், அங்கே தட்சிணாமூர்த்தியாக நான் எழுந்தருளி உன் குறை தீர்ப்பேன்’’ என்று அருளினார். அதன்படியே, குரு பகவான் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வணங்கி வழிபட்டார். ஈசன், அருள்மிகு மேதா தட்சிணாமூர்த்தியாகத் தோன்றி, குரு பகவானுக்கு அருள்பாலித்தார். தன் தோஷம் தீர்ந்து, வியாழபகவான் மீண்டும் தேவகுருவாகவும் நவகிரகங்களில் ஒருவராகவும் பதவியேற்று புகழ்பெற்றார்.

வழிபாடு

ஜாதகத்தில் குருபகவானின் அருள்பார்வையைப் பெறும் ஜாதகர்கள் அனைவரும் பெரும் பாக்கியங்களைப் பெறுவார்கள். இந்தத் தலமோ, குரு பகவானே சிவனாரின் அருள்பார்வையைப் பெற்ற திருத்தலம். அதுமட்டுமா, குருவின் அருளைப் பெற தட்சிணாமூர்த்தியின் அனுக்கிரகம் பெற வேண்டும் என்கின்றன ஜோதிட நூல்கள். அவ்வகையில், வேறெங்கும் காண்பதற்கரிய விசேஷ கோலத்தில் ரிஷப வாகனாராக – மேதா தட்சிணாமூர்த்தி அருளும் இந்தத் தலம் என்பதால், இங்கு வந்து சிறப்பு சங்கல்பம் செய்துகொண்டு, அர்ச்சனை வழிபாடுகள் செய்தால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இந்தப் பெயர்ச்சி, நமக்கு எந்த மாதிரியான பலன்களை அருளும் என்பதை நினைத்து யாரும் கலங்கத் தேவையில்லை. குருபகவானின் அருளைப் பெற, பிரபஞ்ச குருவான தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் போதும். மேலும், குருபகவானே தன் சாபம் தீர்ந்த தலத்தில் ஈசனை வழிபடுவது பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தரும்.

தட்சிணாமூர்த்தி

‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பது ஜோதிட மொழி. இந்த குருப் பெயர்ச்சி காலத்தில், அனைத்து ராசிக்காரர்களுக்கும் குரு பகவானின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்திட சக்தி விகடன் உளமார பிரார்த்திக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.