டால்பின் உள்ளிட்ட பலவகையான மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்து மிதந்ததால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான பாம்பன், மண்டபம், வேதாளை, பெரியப்பட்டினம், கீழக்கரையில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறமாக நேற்று மாறிய நிலையில், இன்று அப்பகுதியில் துர் நாற்றத்துடன் மீன்கள் இறந்து மிதந்தன.

கரை ஒதுங்கும் மீன்கள்

கீழக்கரை கடற்கரையோரம் பலவகையான மீன்கள், அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரை, கடல் பல்லி, ஜெல்லி மீன் உள்ளிட்டவை இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

இதேபோல், குருசடைத் தீவு மற்றும் சிங்கிலித் தீவு பகுதிகளிலும் மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து மண்டபம் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து கடல் நீரையும், இறந்து மிதக்கும் மீன்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன.

இதுகுறித்து மண்டபம் மத்திய கடல் மீன்வள அராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமாரிடம் பேசினோம். “மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இது ஆண்டுதோறும் சுழற்சியாக நடைபெறுவதுதான்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கால நிலை மாற்றத்துக்கு ஏற்ப பிரம்மபுத்திராவிலிருந்து ப்ரெஷ் வாட்டர் வங்க கடலில் கலப்பதால் அதில் நியூட்ரின் லோடு அதிகம் இருக்கும். அதுபோல் கீழேயிருந்து கேரள கடற்பரப்பில் நீரோட்டம் அதிகமாக இருக்கும்.

ஆய்வு செய்யப்படுகிறது

அந்த சூழலில் நாட்டிலுகா எனும் இந்த கடற்பாசி அதிகளவில் உற்பத்தியாகும். இவற்றால் எந்த ஆபத்தும் இல்லை. இந்த பாசிகள் கடலில் படரும் போது கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். பிறகு மாறிவிடும். இந்நிகழ்வு எல்லா வருடமும் நடைபெறுவது வழக்கம். சரியான நீரோட்டம், போதுமான காற்று இல்லாததால் கடலில் மிதந்து செல்ல முடியாமல் குறிப்பிட்ட பகுதிகளில் நாட்டிலுகா பாசி தேங்கி நின்றுள்ளது.

இந்த கடற்பாசி கடந்த செப்டம்பர் மாதமே கடலுக்குள் உருவாகியதாக வாலிநோக்கம் பகுதி மீனவர்களும், ரோந்து சென்ற கடற்படையினரும் தெரிவித்தார்கள்.

காற்று இல்லாமல் இவை ஒரே இடத்தில் தேங்கி நின்றதால் கடல் பச்சை நிறமாக மாறியது. அதனால் சில சிறிய மீன்கள் இறந்துள்ளன. பெரிய மீன்களுக்கு பாதிப்பில்லை, அவை இடம் மாறிவிடும்.

காற்று நன்றாக வீசினால் இந்த பாசிகள் இடம்பெயர்ந்து போய்விடும். இதனால் கடல் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கரை ஒதுங்கிய மீன்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு சாப்பிடலாம்.

மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையம்

ஆனால், டால்பின் இறந்தது பற்றி தகவல் வரவில்லை. இந்த பாசியால் டால்பின் இறக்க வாய்ப்பில்லை. இது கடலில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். தேவையான அளவு காற்று இல்லாததால் இப்படி நேர்ந்துவிட்டது. ஆனாலும், தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்பும் நாட்டிலுகா பாசி படர்ந்து இதைவிட அதிகமாக கடல் பகுதி பச்சை நிறமாக மாறியதாகவும் மீனவர்கள் சொல்கிறார்கள். கால மாற்றத்தில் நிலப்பரப்பை போல கடல்பரப்பிலும் இயற்கையாக நிகழும் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.