ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை (12-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. அதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

வாக்களிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஒன்பது பஞ்சாயத்து ஒன்றியங்களில் நடந்த தேர்தலின் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. நாளை அவற்றை அதிகாரிகள் குழுவினர், முகவர்கள் முன்னிலையில் எண்ண உள்ளனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க சார்பாக முகவர்களாகச் செல்லவிருப்பவர்கள் மீது பொய்யான புகார்கள் பதிவு செய்யப்படுவதாக அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை, நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் மனு அளித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை

அந்த புகார் மனுவில், ”தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வினர் பெரும்பாலானோர் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. திசையன்விளை பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் நடந்தபோது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கீதாஜீவன், ஆகியோருடன் வந்தவர்கள் அ.தி.மு.க தொண்டர்களைத் தாக்கினார்கள்.

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நாராயண பெருமாளின் மகன் லெனின் மற்றும் தொண்டர்கள்மீது தி.மு.க முக்கியப் பிரமுகரின் மகன் காரை ஏற்றிக் கொல்லை முயன்றனர். இது தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறோம்.

நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகம்

நாங்கள் கொடுத்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸார், எங்கள் மீது தி.மு.க-வினர் கொடுக்கும் பொய் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகியான பால்துரை உள்ளிட்ட 4 பேர் மீது பொய்யாக பழவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் நிறுவனத்தில் வேலை செய்யும் நாகராஜன் என்பவர் மூலம் பொய்யான புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்தில் இது போன்ற பொய்ப் புகார்களை தி.மு.க-வினர் கொடுக்கிறார்கள். அதை காவல்துறை பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து புகார் மனு

கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவல்கிணறு சந்திப்பில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க நிர்வாகியான பாஸ்கர் என்பவரை ஞானதிரவியம் எம்.பி தாக்கியது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை இதுவரைக் கைது செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் தி.மு.க-வினரிடம் இருந்து போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.