தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் பாயும் நாகநதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தஞ்சையில் சுமார் 3 மணி நேரம் கனமழை பொழிந்தது. தஞ்சை புதிய பேருந்து நிலையம், கரந்தை, பள்ளி அக்ரஹாரம், நாஞ்சிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறுவை நெல் சாகுபடி அறுவடை செய்த விவசாயிகள் நெல்லின் ஈரப்பதம் கூடுவதால் வேதனையடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பெண்ணாடம் உள்ளிட்ட சில பகுதிகளில் பேருந்து நிலையம், கடை வீதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

image

அதேபோல் புதுக்கோட்டையில் நகர்பகுதிகளான திருவரங்குளம், கேப்பரை, கடையக்குடி, கட்டியாவயல், இச்சடி, காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவ மழைக்கு முன்பே மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த போதிலும், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட வடிகால் வாய்க்கால்கள் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கரூரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பொழிந்தது. தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், மாயனூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழையின் போது திண்டுக்கல் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் கீழ் தளத்திற்குள் அதிகளவில் வெள்ளம் புகுந்தது. சுமார் 5 அடி உயரத்திற்கு மழை நீர் புகுந்ததால் இரண்டு கடைகளுக்குள் இருந்த தையல் இயந்திரங்கள், பைண்டிங் இயந்திரங்கள் சேதமடைந்தன.

தமிழக ஆந்திர எல்லைகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தரைப்பாலம் உடைந்தது. தரைப்பாலம் உடைந்ததால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

image

இதேபோல் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 10ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆரணி, கண்ணமங்கலம், படவேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த தொடர் மழையால், தடுபணையையும் தாண்டி தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு பரவலாக மழை பெய்தது. விக்கிரவாண்டி, காணை, கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டநேரம் கனமழை தொடர்ந்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

image

கரூர், அரவக்குறிச்சி, மாயனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தபோது, வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மூடுபனி இருந்த நிலையில், இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.