உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக காட்டை விட்டு வெளியேறி கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்கி வரும் T23 என்ற ஆண்‌ புலியைப் பிடிக்க, மசினகுடி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், 3 கால்நடை மருத்துவர்கள், தமிழக வனத்துறை, கேரள வனத்துறை என பெரும் படையாக மொத்தம் 300 பேர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மசினகுடி

இந்த தேடுதல் வேட்டைக்கு ஒத்துழைக்கும் விதமாகவும், அடுத்ததாக அந்தப் புலி யாரையும் தாக்காமல் இருக்கவும் இரவு நேரத்தில் மசினகுடி மக்கள் வெளியில் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் மசினகுடி மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், மறுபுறம் சுற்றுலா அனுமதிக்கப்பட்டு வருவது ஆபத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருப்பதாக தெரிவிக்கின்றன செயற்பாட்டாளர்கள்.

Also Read: ஆபரேஷன் ‘T23’: எட்டிப்பார்க்காத வனத்துறை அமைச்சர்; கொதிக்கும் நீலகிரி மக்கள்!

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ஊட்டி ஜனார்த்தனன்,“மசினகுடி பகுதியில் உலவி வரும் அந்த புலி, அடுத்து யாரைத் தாக்குமோ என்ற அச்சத்துடன் மக்களும் வனத்துறையினரும் இருக்கின்றனர். அதே நேரம், சுற்றுலாவுக்கு தடை அறிவிக்கப்படாததால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இன்னும் சில சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக தனியார் ஜீப்பில் சஃபாரி செல்கின்றனர். காட்டை ஒட்டிய ரிசார்ட்டிலும் பயணிகளை தங்கவைத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புலியைப் பிடிக்கும் வரை முதுமலையில் சுற்றுலாவை தடை செய்ய வேண்டும்”என்றார்.

மசினகுடி

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்,“கொரோனாவால ஏற்கனவே பல மாசமா சுற்றுலாவுக்கு தடை இருந்தது. கால்நடைகளையும் உறவுகளையும் பறிகொடுத்த இந்த மக்கள், வனத்துறை மீது கடுமையான கோபத்துல இருக்காங்க. இப்படிப்பட்ட சூழல்ல சுற்றுலாவை தடை செஞ்சா, மக்களின் கோபம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கு. அதனாலதான் தடை விதிக்காமல் இருக்கோம்”என்றார்.

நிலைமை இப்படியிருக்க, ”புலியை சுட்டுப்பிடிக்க எந்த திட்டமும் இல்லை, உயிருடன் பிடிக்கவே முயன்று வருகிறோம்” என வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.