மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 58 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தினை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாக சமூக ஊடகத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் தகவலால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

வாட்ஸ்அப் தகவல் என்ன?

“தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்பு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையை பார்த்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை பிபி குளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 58 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தினை போலி ஆவணம் தயார் செய்து சிலர் விற்க முயற்சி செய்ததை அறிந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர், அறநிலைய துறை அமைச்சர், அதிகாரிகள், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆய்வில் அமைச்சர் சேகர்பாபு

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பதிவுத்துறை அலுவலகத்தில் பிரச்னையில்லாமல் மீனாட்சியம்மன் கோயில் நிலத்தை பத்திரப் பதிவு செய்துள்ளார்கள்” என்று அந்த வாட்ஸ்அப் பதிவில் சொல்லப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: திருச்சி கோயில்கள் – 15: மதுரை கள்ளழகர், கூடலழகர் தெரியும்… அன்பில் அழகரின் சிறப்புகள் தெரியுமா?!

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சோலைக்கண்ணனிடம் பேசினேன், “ஆம், பிபி குளம் அஜ்மல்கான் ரோட்டில் சர்வே எண் 4795/1-ல் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், விற்பனை செய்வதாகவும் தகவல் வருகிறது. அதில் ஏதோ நடந்துள்ளது மட்டும் தெரிகிறது.

சோலைக்கண்ணன்

மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்ள சொத்துகள் பற்றியும், ஆக்கிரமிப்பில் உள்ளது பற்றியும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக இந்த பிபி குளம் நிலம் பற்றியும் அது விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் தகவல் கேட்டுள்ளேன். அதில் முறைகேடு நடந்தது தெரிய வந்தால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றார்.

இதுபற்றி மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்டோம். “பழைய சம்பவம் இது. இதுபற்றி 2 மாதத்துக்கு முன் என் கவனத்துக்கு வந்தது. ஆக்கிரமிப்பாளர் அந்த நிலத்தை எதுவும் செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் மனு போட்டு சொத்து விற்பனையை நிறுத்தி வைத்துள்ளோம்.

மீனாட்சியம்மன் கோயில்

ஆக்கிரமித்திருப்பவர் முறைகேடாக வேறொருவருக்கு பவர் கொடுத்து மதுரையில் பதிவு செய்யாமல், தூத்துக்குடியிலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் பதிவு செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி மாவட்டப் பதிவாளரிடம் புகார் செய்து கடிதம் அனுப்பியுள்ளோம். அதனால் அந்தச் சொத்தை விற்பனை செய்ய முடியாது. மேலும் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பதிவாளர் துறை தலைமைக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.