Press "Enter" to skip to content

தடைசெய்யப்பட்டும் கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குவது எப்படி? பின்னணி இதுதான்! – நான் அடிமை இல்லை 11

விமான நிலையங்களில் போதைப் பொருள் கடத்தியவர்களைப் பிடித்ததாக அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். கஞ்சா விற்றவர்கள், கஞ்சா பயிரிட்டவர்கள் கைது என்ற செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இவற்றையெல்லாம் மீறியும் போதை வஸ்துகள் இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஊடுருவியிருப்பதன் பின்னணிதான் என்ன… அதன் பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பகிர்கிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவருமான வெங்கடேஷ் பாபு.

பொதுவாக, அதிகமாகப் புழக்கத்தில் இருப்பவை `New Psychoactive Substances (NPS)’ என்ற பட்டியலில் வரும் நெயில் பாலிஷ், எழுதியதை அழிக்கப் பயன்படும் வொயிட்னருடன் கலக்கப்படும் நிறமில்லாத ஒருவகை திரவம், பசை, பெயின்ட், தின்னர், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற அன்றாட பயன்பாட்டிலிருக்கும் பொருள்கள்.

வெங்கடேஷ் பாபு

காரணம், போதை நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட இந்தப் பொருள்தான் வேண்டும் என்று தேடிச் செல்பவர்கள் மிகக் குறைவு. எது கைகளில் எளிதாகக் கிடைக்கிறதோ, எதைப் பயன்படுத்தினால் எளிதாக போதை கிடைக்கிறதோ அதை அதிகம் பயன்படுத்துவார்கள். காரணம், அவர்களுக்குத் தேவை போதை. மேலும், அதை எடுக்கும்போது யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது, யாரும் கண்டிக்கவும் கூடாது என்பதால் அன்றாட பயன்பாட்டிலிருக்கும் பொருள்களை போதைக்குப் பயன்படுத்துவதான் அதிகம்.

இந்த வகை பொருள்கள்தான் போதையைக் கொடுக்கும் என்று நிலையான ஒரு வரையறைக்குள் வர முடியவில்லை. நமது நாட்டில் இதை போதைப்பழக்கம் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலத்தில் Narcotic Drugs & Psychotropic Substances என்று குறிப்பிடுகிறோம். உலக அளவில் `Substance Abuse’ என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றனர். இவற்றில் மது, புகையிலைப் பழக்கம் எனப் போதைக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகை பொருள்களையும் குறிப்பிட்டு இந்தப் பெயரால் அழைக்கின்றனர். அந்தப் பொருள்களுக்கு சட்டபூர்வமான அனுமதி இருந்தாலும் (உதாரணத்துக்கு… நெயில் பாலிஷ், பெயின்ட், பசை) அவை `Substance Abuse’ என்ற பட்டியலில்தான் வரும்.

போதைப்பொருள்களில் கஞ்சாவின் புழக்கம்தான் அதிக அளவில் இருக்கிறது. கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்கள் அவ்வளவு எளிதாகப் புழங்குவது இல்லை. ஆந்திரா, ஒடிசா எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுகிறது. அங்கு வாழும் மலைவாழ் மக்களிடம் நக்சலைட்டுகள் கஞ்சா நாற்றுகளைக் கொடுத்து பயிரிட்டுக் கொடுக்குமாறு கூறிவிடுவார்கள்.

கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கான பாதுகாப்பையும் அவர்களே கொடுத்துவிடுவார்கள். அவர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிக்குள் வனத்துறையினரோ காவல்துறையினரோ அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது.

Drug (Representational Image)

Also Read: மருத்துவ மாணவர்களையும் பாதிக்கும் போதை மருந்துகள்; அதிர்ச்சி யதார்த்தம்! – நான் அடிமை இல்லை – 10

நக்சலைட்டுகளின் தயவில்லாமல் அங்குள்ள மலைப்பகுதி மக்களால் வாழ முடியாது. அவர்களுக்குத் தேவையான நல்லதையும் அவர்களே செய்வார்கள் என்பதால் அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சொல்வதை அப்படியே செய்துகொடுத்துவிடுவார்கள்.

தமிழ்நாடு, கேரளா எல்லைப்பகுதிகளில் இருக்கக்கூடிய மலைப்பகுதியான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. இதைச் சிலர் குழுவாக இணைந்து பயிரிடுவார்கள். கஞ்சா செடிகள் மலைப்பகுதிகளில் தானாகவே வளரும் என்றாலும், அவற்றின் மூலம் அதிகம் லாபம் பார்க்க முடியாது. காரணம், ஆங்காங்கே வளரும், கஞ்சா செடிகளின் நடுவே வேறு செடி, கொடிகள் வளரும். இதனால் அறுவடை செய்வதற்கு சிரமம் இருக்கும். மேலும் பயிர் போன்று கவனித்து வளர்க்கும்போதுதான் அதன் விளைச்சலும் நன்றாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். தானாக வளரும் செடிகள் அடர்த்தியாக வளராது.

அவ்வாறு வளர்க்கப்படும் செடிகள் ரயில் மூலமாக தமிழகத்துக்குள் கொண்டு வரப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கொண்டு வரப்படும் கஞ்சா, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு விநியோகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தோணி மூலம் இலங்கைக்குச் செல்கிறது. மதுரையும் மிகப்பெரிய விநியோக மையமாக உள்ளது. இவையெல்லாம் மிகச் சாதாரணமாக நடைபெறும் செயல்கள்.

ஒரு ரயில் வருகிறது என்றால் அதில் ஆயிரக்கணக்கானோர் பயணிப்பார்கள். அதில் யாரிடம் போதைப்பொருள் இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியாது. ஆயிரக்கணக்கானவர்களை பரிசோதனை செய்வது சிரமமான காரியம்.

Drugs (Representational Image)

Also Read: மருந்தகங்களே துணை போகும் `காக்டெயில் போதை’, இளைஞர்கள் வீழ்வது எப்படி? – நான் அடிமை இல்லை – 9

மேலும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு போதைப்பொருள்களை மறைவாகக் கொண்டு வருவது எப்படி என்ற வழிமுறைகள் தெரியும். போதைப்பொருள் கொண்டு வருபவர் பற்றிய சரியான தகவல் கிடைத்தால் மட்டுமே அவர்களைப் பிடிக்க முடியும். எந்த இடத்தில் எவ்வளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்பதை வைத்து எந்த இடத்தில் அதிகமாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது, புழங்கப்படுகிறது என்பது தெரியும்.

கண்காணிக்கச் செல்லும்போது வழக்கு போடக் கூடாது என்பது நடைமுறை. ஒருவரைக் கண்காணிக்கச் செல்லும்போது கண்காணிக்கப்படும் நபர் அந்த இடத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டாலும் அவரைத் தடுக்கக் கூடாது. அப்படித் தடுத்தால் அந்த இடத்தோடு குற்றச்செயல் தடைப்பட்டுவிடும். அந்த நபரின் பின்னால் இருக்கும் பிற நபர்கள், நெட்வொர்க் போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. இந்த நடைமுறையும் சில நேரங்களில் குற்றவாளிகளுக்குச் சாதகமாக முடிந்துவிடும்.

தமிழகத்திலுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவர் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெரும்புள்ளி கஞ்சா பயிரிடும் பகுதிக்குள் யாரும் நுழைந்துவிடாத அளவுக்கு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்புக்காக நிறுத்தியிருப்பார்கள். வனப்பகுதிக்குள் அவர்களைத் தாண்டி அவ்வளவு எளிதில் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. போதைப்பொருள் வியாபாரிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வியாபாரிகள்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சில பரிசோதனை முறைகளைக் கையாள்வார்கள். வியாபாரிகள்தான் என்று உறுதி செய்யப்பட்டால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும். வியாபாரிகள் இல்லை என்று தெரிந்துவிட்டால் அப்படிச் செல்பவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை விழிப்புணர்வு குறைவாக இருப்பதே பிரச்னைக்கு காரணம். காரணம், இந்தப் பழக்கங்களில் விழுபவர்கள் எல்லாம் இளம் வயதினர். அவர்களுக்கு அந்தப் பிரச்னையின் தீவிரம் தெரியாது. சிலர் போதைப்பொருள் விநியோகம் (Supply) குறைந்துவிட்டால் அதற்கான தேவையும் (Demand) குறைந்துவிடும் என்பார்கள்.

Drug Addiction (Representational Image)

Also Read: பார்ட்டி கலாசாரத்துக்குப் பழகும் இளம் தலைமுறை; மறைந்திருக்கும் போதை அரக்கன்; பெற்றோர்களே அலர்ட்! – 8

அது ஏற்புடைய வாதம் கிடையாது. ஒருவேளை விநியோகம் குறைந்தால் அந்த போதைப்பொருளின் விலைதான் கூடுமே தவிர, தேவை குறையாது. விநியோகம், தேவை என இரண்டையும் குறைக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவை விழிப்புணர்வே.

ஒரு நபருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதற்கு அரசு ஒரு ரூபாய் செலவழித்தால், போதைக்கு அடிமையானதற்குப் பிறகு, மறுவாழ்வு அளித்து அதிலிருந்து மீட்பதற்கு அரசு 54 ரூபாய் செலவழிக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் விளைவு உடனே நமக்குத் தெரியாமல் போகலாம். ஆனால், பல வருடங்கள் கழித்து அதன் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கும். உடனே விளைவு கிடைக்கவில்லையே என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நிறுத்தக்கூடாது, அதிகரிக்கவே செய்ய வேண்டும். விழிப்புணர்வை அதிகரிப்பது என்பது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு தனிநபரின் கடமையும்கூட. ஒவ்வொரு மனிதனும் தன் குடும்ப உறுப்பினர், தன் நண்பன், தன் சகோதர சகோதரிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிடக் கூடாது என நினைத்துவிட்டாலே போதும்… விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலையைத் தானாகவே தொடங்கிவிடுவார்கள்” என்கிறார்.

சுஷாந்த் சிங் முதல் ஷாருக் கான் மகன் வரை… பிரபலங்கள் போதை வலைக்குள் சிக்குவதன் பின்னணி?

அடுத்த அத்தியாயத்தில்..!

More from healthyMore posts in healthy »