கலீல் ஜிப்ரானின் ஒரு சிறு கதை இது.

குன்றுகளைத் தாண்டி அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். ‘துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன’ என்றான். அதற்கு அந்தத் துறவி ‘என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது’ என்றார். ‘ஆனால் நான் ஒரு திருடன்’ என்றான் அவன். ‘நானும் ஒரு திருடன்தான்’ என்றார் துறவி. ‘நான் ஒரு கொலைகாரன். நான் கொன்றபோது மக்கள் எழுப்பிய கூக்குரல் இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது’ என்றான் அந்த இளைஞன். ‘எனக்கும்தான்’ என்றார் துறவி. அந்த இளைஞன் துறவியை உற்றுப் பார்த்தான். அப்போது அவன் கண்களில் ஒரு புதிய மாற்றம் தெரிந்தது. குன்றிலிருந்து கீழே இறங்கினான். அப்போது அவன் விந்தி விந்தி நடக்கவில்லை.

ஜென் துறவி

நான் அந்தத் துறவியைப் பார்த்து ‘எதற்காக நீங்கள் செய்யாத குற்றத்தை எல்லாம் செய்ததாக அவனிடம் கூறினீர்கள்? இதையெல்லாம் அவன் நம்பியிருப்பான் என்றா நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘அவனுக்கு என் மேல் நம்பிக்கை பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் மிகவும் ஆறுதலாக திரும்பிச் சென்றான்’ என்றார். தொலைவில் அந்த இளைஞன் உற்சாகமாக பாடிக் கொண்டே சென்றது காதுகளில் விழுந்தது. அந்த பாடலின் ஆனந்தம் பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்தது.

இதில் முக்கியமாக எனக்குப் படுவது இதுதான். ‘நம்மைப் போலவே இந்தத் துறவியும் ஏகப்பட்ட குற்றங்களை செய்திருக்கிறார்’ என்ற எண்ணம் அவனுக்கு ஆனந்தத்தை தரவில்லை. சொல்லப்போனால் துறவி கூறியதை அந்த இளைஞன் நம்பவில்லை. இதைத் துறவியும் உணர்ந்திருக்கிறார் தன்மேல் அவனுக்கு நம்பிக்கை பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு ஆறுதல் கிடைத்திருக்கிறது என்கிறார். அதாவது ஒருவர் – அதுவும் தனக்குத் தொடர்பில்லாத ஒருவர் தன் மன ஆறுதலுக்காக பொய் கூறுகிறார் என்பதே அவனுக்கு அப்படி ஒரு ஆறுதலை அளித்திருக்கிறது. அதுதான் இங்கே முக்கியம்.

மலை

குழந்தைகளின் மன அமைதிக்காக நாம் எவ்வளவு பொய்களைக் கூறுகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். துயரப்படும்போது ஒவ்வொருவருமே ஒரு குழந்தைதான். அந்த வருத்தத்தைப் போக்க வேண்டுமென்று ஒருவர் முயற்சித்தால் சாய்ந்து கொள்ள ஒரு தோள் கிடைத்தது என்ற எண்ணமே ஆறுதல் அளிக்கும். தோள் கண்டேன் தோளே கண்டேன் என்பதை வேறொரு கோணத்தில் ஒருவர் அறிந்து நெகிழும்போது அந்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக் கொள்ளாதா என்ன?

‘எனக்குக் கூட ஒரு தடவை இப்படித்தான் ஆச்சு. அதிலிருந்து இப்படி மீண்டேன்’ என்றோ, ‘நானும் என் கணவரும் போடாத சண்டையையா நீ போட்டுட்ட. இதெல்லாம் சகஜம்’, என்றோ நீங்கள் கூறும் போது நீங்கள் கூறுவது முழு உண்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. சக மனிதனின் துயரத்தைப் போக்க உதவுவோம் என்ற உங்கள் எண்ணம்தான் முக்கியம்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.