அமெரிக்காவின் டெக்சாஸ் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிராக அந்த மாகாணத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெண்களை வீதிக்கு வரவழைத்துள்ள இந்தச் சட்டம் குறித்த பின்னணியை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

டெக்சாஸ் கருக்கலைப்பு சட்டம் இந்த மாதம் 9-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தப் புதிய சட்டத்தின் முக்கிய அம்சம், ஒரு தாய் கர்ப்பக் காலத்தின் ஆறு வாரங்களுக்குப் பிறகு, வயிற்றில் வளரும் கருவுக்கு இதயத் துடிப்பு உண்டாகியிருந்தால் அக்கருவைக் கலைக்க தடை விதிக்கிறது. மேலும், பாலியல் வன்கொடுமை போன்ற சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத வகையில் கரு உண்டாகி ஆறு வாரங்கள் ஆகினாலும், அதனைக் கலைக்க முடியாது என்கிறது இந்தச் சட்டம். இது டெக்சாஸ் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சட்டத்துக்கு அமல்படுத்துவதற்கு முன்பு, அங்கு 20 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க முடியும். ஆனால், தற்போது ஆறு வார கருவை கலைக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆறு வாரங்கள் என்பது கர்ப்பக் காலத்தின் ஆரம்ப கட்டமாகும். பல பெண்களுக்கு அந்த நேரத்தில் கர்ப்பமாக இருப்பது சில சமயங்களில் தெரியாது. ஏனென்றால் 45 நாட்களுக்குப் பிறகே கர்ப்பம் குறித்து பெண்களால் தீர்மானமான முடிவுக்கு வரமுடியும்.

மருத்துவ வரையறையின்படி ஒரு கர்ப்பிணிப் பெண் தனது மாதவிடாயை இழக்கும் நேரத்தில், நான்கு வார கர்ப்பிணியாக இருக்கிறார் என்கிறது. ஆனால், பல பெண்களுக்கு பல்வேறு உடல்நல காரணங்களால் ஒழுங்கற்ற மாதவிடாய் உண்டாகும் நிலை இருப்பதால், இப்படிப்பட்ட பெண்கள் கருவுறும்போது அதனை மிக தாமதாகவே அறிந்துகொள்ளமுடியும். இதனால், இந்தச் சட்டம் முரண்பாடு மிகுந்தது என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.

image

இதனிடையே, கருவுற்றிக்கும் தாயின் உடல்நலக் காரணங்களுக்காக கருக்கலைப்புகளை மேற்கொள்ளலாம் என இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. கர்ப்பம் தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே கருக்கலைப்புகளை மேற்கொள்ள முடியும். இதற்காக, செய்யப்படும் சோதனைகளை அரசு தீவிரமாக கண்காணிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், மைனர் பெண்கள் கருக்கலைப்பு பராமரிப்பைப் பெற, தங்களின் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும். இதுவும் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?

டெக்சாஸில் 70 லட்சம் பெண்கள், குழந்தை பிறக்கும் வயது கொண்டவர்கள். இதில் பலர் கறுப்பின பெண்கள் மட்டுமல்ல, பலர் சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் குறைந்த வருமானம் கொண்டவர்கள். கருக்கலைப்பு நடைமுறைக்கு செலவாகும் 550 டாலரை விட குறைவான வருமானம் கொண்ட மக்கள் இவர்கள். 2019-ஆம் ஆண்டில் டெக்சாஸில் நடந்த 70 சதவீத கருக்கலைப்புகள் கறுப்பின பெண்களுக்கே நிகழ்ந்துள்ளன.

இதனால். இந்தப் புதிய சட்டம் கறுப்பினப் பெண்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். டெக்சாஸ் மாகாணம், கருக்கலைப்பின்போது, பிரசவங்கள்போது ஏற்படும் தாய்வழி இறப்பு விகிதங்களில் முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மாகாண அரசு கொண்டுவந்துள்ள சட்டம் விமர்சனங்களையும் பெண்கள் மத்தியில் போராட்டங்களையும் எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “பெண்களின் ஆரோக்கியத்தோடு, உயிரோடு இச்சட்டம் விளையாடுகிறது” என்று கூறி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சட்டம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தும் பலனில்லை. நீதிமன்றங்கள் மனுவை தள்ளுபடி செய்துள்ளன.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.