ஜொமேட்டோ நிறுவனம் தொடர்ச்சியான நஷ்டத்தில் இருப்பதுடன், அதன் முக்கியமான இணை நிறுவனரும் அண்மையில் நிறுவனத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனாலும் இந்த நிறுவனப் பங்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருக்கிறது. ஜொமேட்டோ நிறுவனத்தில் என்ன பிரச்னை? இதில் முதலீடு செய்துள்ளவர்கள் கவனிக்கவேண்டியவை என்னென்ன?

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நஷ்டக் கணக்கை பதிவு செய்து வருகிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, கடந்த 2020-21-ம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 682.20 கோடி ரூபாயை நஷ்டமாகப் பதிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாகத்தான் ஜொமேட்டோவின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய 2018-ம் ஆண்டில் ரூ.106.91 கோடியும் , 2019-ல் ரூ.1,010 கோடியும், 2020-ல் ரூ.2,385 கோடியையும் நஷ்டமாகப் பதிவு செய்துள்ளது.

Downfall

கடந்த 2020-ம் ஆண்டில் ஏப்ரல் – ஜூன் காலகட்டத்தில், இந்நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.1,093.63 கோடியாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஜனவரி – மார்ச் காலாண்டில் ரூ.2,684.91 கோடியாக இருந்தது. கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.2,981 கோடியாக மீண்டும் அதிகரித்தது. இது கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.

`பிக் புல்’ கருத்து!

இந்தியாவின் வாரன் பஃபெட், `பிக் புல்’ என்று சொல்லப்படும் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஜொமேட்டோ பங்குச்சந்தையில் பட்டியல் ஆன சில தினங்களில் அவருடைய கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் அவர், “ஒரு நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக்கில்லை.

Rakesh jhunjhunwala

நான் என்ன பங்குகளை வாங்குகிறேன், எந்த விலையில் வாங்குகிறேன் என்பது மிக முக்கியம். ஜொமோட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.99,000 கோடி வரை உயர்ந்தாலும், மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஆறு டிரில்லியன் டாலர் வரை உயர்ந்தாலும், நான் இந்தப் பங்குகளை வாங்கப் போவதில்லை” எனச் சொல்லியிருந்தார். மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளர் ஜொமேட்டோ பங்குகள் பற்றி இப்படிச் சொன்னது, பங்குச்சந்தை வட்டாரத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இணை நிறுவனர் ராஜினாமா!

சமீபத்தில், இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது பிஸினஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பங்குச்சந்தை வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது. `தான் வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதால் ஜொமேட்டோவில் இருந்து விலகுவதாக’ கவுரவ் குப்தா தெரிவித்தாலும், ஐ.பி.ஓ வெளியிடும் வரை இருந்துவிட்டு, ஒரு சில மாதங்களில் நிறுவனத்தின் மிக முக்கியப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் ராஜினாமா செய்வது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கவுரவ் குப்தா

அதனால்தான் அவர் ராஜினாமா செய்த செப்.14-ம் தேதிக்குப் பிறகு, நிறுவனத்தின் பங்கு விலை பெருமளவு சரிந்துள்ளது. இந்த செய்தி வெளியானதற்கு முன்பு ரூ.150-க்கு வர்த்தகமான ஜொமேட்டோ பங்கு, தற்போது ரூ.136.50-க்கு வர்த்தகமாகி வருகிறது.

Also Read: Zomato: மளிகைப் பொருள்கள் விநியோக சேவையை திடீரென நிறுத்தும் ஸொமேட்டோ; பதவி விலகிய இணை நிறுவனர்; ஏன்?

சென்ற ஆண்டு தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சேவையை ஜொமேட்டோ நிறுவனம் விரிவுபடுத்தியது. அதற்கு அப்போது நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் தற்போது அந்த சேவை மந்தமானதால் டெலிவரி செய்யும் சேவையை, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஜொமேட்டோ நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து சர்சைக்குள்ளாகி வரும் ஜொமேட்டோ நிறுவனத்தின் அடுக்கடுக்கான பிரச்னைகள், அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஜொமேட்டோ நிறுவனத்தின் செயல்பாடுகளின் என்ன பிரச்னை, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி, பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

வ.நாகப்பன்

“ஜொமேட்டோவின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சந்தேகப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், ஐ.பி.ஓ வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டும் வரை இருந்துவிட்டு, அடுத்த ஒரு சில மாதங்களில் பதவி விலகுவது முதலீட்டாளர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு சில மாதங்களில் பதவி விலகப் போகிறார் இவர் என்பதை ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு முன்பாக வெளிப்படையாக ஜொமேட்டோ தெரிவித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? அதே போல, இந்நிறுவனத்தின் இழப்பு கடந்த 2020-ல் ரூ.2,385-ஆக இருக்கிறது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தையே பதிவு செய்திருக்கிறது. இதுவும் கவனிக்கத்தக்க விஷயமாகும். நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் நன்றாக இருந்தாலும், தொடர்ந்து நஷ்டத்தைப் பதிவு செய்வது, பங்கின் விலை ஏற்றத்துக்கு தடையாக இருக்கும்.

இருப்பினும் பட்டியலிடப்பட்ட விலையை விட இன்று இந்நிறுவனத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் ஐ.பி.ஓ வெளியிட்டு ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், நிறுவனத்தின் முழுமையான செயல்பாடுகளை நம்மால் கணிக்க முடியாது. ஒரு சில காலாண்டு முடிவுகளுக்குப் பிறகுதான், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஓரளவுக்காவது கணிக்க முடியும். அதனால் முதலீட்டாளர்கள், தொடர்ந்து இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்துவருவது நல்லது.

1990-களில் ஐ.பி.ஓ!

ஒரு நிறுவனம் 1990-களில் ஐ.பி.ஓ வெளியிடும் போது, முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டி, அந்நிறுவனத்தில் முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொண்டது. ஆனால், இன்று வெளியாகும் ஐ.பி.ஓ-க்கள் அப்படியான ஃபார்முலாவை ஃபாலோ செய்வதில்லை. ஏற்கெனவே பல பார்ட்னர்களை இணைத்து, பிஸினஸ் ஆரம்பித்து, சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குப் போது கடனை அடைக்க, பிஸினஸ் விரிவாக்கம் செய்ய போன்ற தேவைகளுக்காக ஐ.பி.ஓ வெளியிடுகிறது.

IPO

Also Read: ₹1,448 கோடி மதிப்புள்ள 43 ஆண்டு பழைய ஷேர்கள்; மறந்தே போன நபர்; பணம் திரும்ப கிடைக்குமா?

புதிய பங்குகளை வெளியிடுவது மட்டும் அல்லாமல், ஏற்கெனவே அந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பங்குகளையும் ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்து நிதி திரட்டுகிறது. இன்னும் சில நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிடாமல், பங்குதாரர்களின் பங்குகளை மட்டும் ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்து நிதி திரட்டுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் முதலீட்டாளர்கள் கவனிப்பது முக்கியம். ஏனெனில், நன்றாக செயல்படும் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள், புரமோட்டார்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு முன்வர மாட்டார்கள். அப்படியே முன்வந்தாலும் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அந்தக் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார் தெளிவாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.