“குடியிருப்பு பகுதிக்குள் எரிவாயு குழாயை பதிக்கும் திட்டத்தை நிறுத்துங்கள், இல்லையென்றால் எங்களை சுட்டுக் கொல்லுங்கள்” என்று 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சு வார்த்தை

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து 20 வருடங்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கினார்கள். இங்கிருக்கும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டது.

அப்போதே தங்கள் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஊர் வளர்ச்சியடையும், வேலை வாய்ப்பு கிடைக்கும் எனப் பல வாக்குறுதிகளைத் தொடர்ந்தே அவை அனுமதிக்கப்பட்டன. ஆனாலும் அவையெல்லாம் நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது புதிதாக தூத்துக்குடிக்கு எரிவாயுவை இங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருவதை அறிந்து, அந்த முயற்சிக்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டப்பட்டது. அப்போது அதை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினர் இப்பகுதி மக்கள். தற்போது ஆட்சி மாறிய நிலையிலும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 8 கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவரத்தையை அதிகாரிகள் நடத்தினார்கள். இதில் ஊர்காரர்களுடன் இப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு கடுமையாகப் பேசினார்கள்.

அதிகாரிகளிடம் முறையிடல்

கூட்டத்தில் கலந்துகொண்ட மண்டபம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் சேர்மனுமான வி.சி.கனகராஜிடம் பேசினோம்.

“இங்கு எரிவாயு திட்டங்கள் தொடங்கிய காலத்திலிருந்து எங்கள் விவசாயத்தை இழந்தோம். ஊரைச் சுற்றி எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டதால் எப்போதும் ஒரு அச்சத்துடனயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமீபகாலமாக புதிய நிறுவனம் ஒன்று, ஏற்கனவே ஓ.என் ஜி.சி குழாய்கள் செல்லும் பாதையில் செல்லாமல் ஊருக்குள் குடியிருப்புக்குள் குழாய் பதிக்க அரசிடம் அனுமதி வாங்கியுள்ளது.

இதை ஏற்கனவே நாங்கள் எதிர்த்தபோது மாவட்ட நிர்வாகம் நிறுத்தியது. மாவட்ட அதிகாரிகள் மாறியதும் மீண்டும் அதே வேலையை செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

விளைநிலம் வழியாக எரிவாயு குழாய் (மாதிரி படம்)

Also Read: குழந்தைகளுக்கும் சிறுநீரகத்தில் கல், மக்களுக்கு உடல்நல பாதிப்புகள்; ஆபத்தில் எண்ணூர் மக்கள்!

சில வருடங்களுக்கு முன் இங்கே பதித்த ஒரு எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட அதை சரி செய்யவே 3 நாட்கள் ஆனது. அதே மாதிரி குடியிருப்புப் பகுதிக்குள் குழாயில் கசிவு ஏற்பட்டால் என்னாகும்?

இந்தக் குழாய் வழியாக வீட்டுக்கு விநியோகம் செய்யும் எரிவாயு கொண்டு செல்லப்போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல; தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடிய கூடுதல் சக்தி உள்ள எரிவாயுவை கொண்டு செல்லத்தான் இந்த வேலைகளை செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த இன்று கோட்டாட்சியர் அழைத்திருந்தார். அங்கு 8 கிராம மக்கள் சார்பாக 3 கோரிக்கைகளை மட்டும் பேசினோம். அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான குடும்பங்கள் இங்கு உள்ளன. ஒன்று, வேறு வழியில் இந்தக் குழாய் பதிப்பைச் செய்யவேண்டும். இல்லை, அந்த தனியார் நிறுவனத்தின் எரிவாய் குழாய் பதிப்பதுதான் முக்கியம் என்றால் எங்களை அகதிகளாக வெளியேற அரசு ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது, சுட்டுக் கொல்லவேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

அதிகாரிகளிடம் முறையிடல்

Also Read: `அதானி துறைமுக திட்டத்தை ரத்து செய்யுங்கள்!’- ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்

கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் எதிர்ப்பால் இத்திட்டத்தை நிறுத்தி வைத்தார்கள். தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிகாரிகள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆர்வமாக இருக்கிறார்கள். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.