திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக, பல்வேறு பகுதிகளில் கஞ்சா, குட்கா, பான்மசலா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் ரகசிய தேடுதலில் ஈடுபட்டபோது… நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போதைப்பொருள்கள் கடத்தி வரப்பட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த டெம்போ டிராவலர் வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 21 சாக்கு மூட்டைகளில் சுமார் 912 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப் பொருள்களையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் அதில் இருந்த மற்றொரு நபரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, இவர்கள் இருவரும் ஸ்ரீவாஞ்சியம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், பரணிதரன் என்பதும், இவர்கள் இருவரும் நீடாமங்கலத்தில் வாடகை சரக்கு வாகன ஓட்டுநர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

“கரூரிலிருந்து ஒருவர் செல்போனில் தங்களை தொடர்புக் கொண்டார். நீடாமங்கலத்தில் உள்ள குடோனில் இருந்து கொல்லுமாங்குடி பகுதியில் முகமது என்பவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு இந்த பொருள்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என தகவல் தெரிவித்தார். இதற்கு உரிய வாடகை தொகையை மட்டுமே நாங்கள் பெற்றுக் கொண்டோம், இதற்கும் தங்களுக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை” என கைது செய்யப்பட்ட ஸ்ரீராம், பரணிதரன் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவரையும் நீடாமங்கலம் பகுதியில் குட்கா பொருட்கள் கை மாற்றிய இடத்தை கண்டறிய காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். போதைப்பொருள்கள் எங்கிருந்து எடுத்த வரப்பட்டதோ, அந்த இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து சோதனையிட்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 321 கிலோ போதைப்பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள்களை வாகனத்தில் எடுத்து வந்த ஸ்ரீராம், பரணிதரன், மளிகை கடை உரிமையாளர் முகமது உள்ளிட்ட மூன்று பேரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Also Read: குட்கா விற்பனை: `பறவைகளுக்கு உணவு; காவல் நிலையத்தில் தூய்மைப் பணி! – நூதன தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் கள்ள சந்தை மதிப்பு 9 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.