(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-10 படிக்காதவர்கள் படிக்கலாம்)

நான் வேலை செய்த நிறுவனம் ஈரானில் எண்ணெய் உற்பத்திக்காக ஒரு சீன நிறுவனத்துடன் 2009 ஆரம்பத்தில் கூட்டுறவு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்துக்கு நிதி ஆலோசகர் பொறுப்புக்கு என்னை பரிந்துரை செய்ய நானும் ஒப்புக்கொண்டேன். அதற்கு முன்பே நான் ஈரானுக்கு பல முறை சென்றுவந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை நான் ஈரானிலியே 2-3 வருடம் தங்கி வேலை பார்ப்பது என ஏற்பாடு. பிள்ளைகள் படிப்பு கருதி குடும்பம் துபாயில். நான் வாராவாரம் ஈரான்-துபாய்-ஈரான் பயணம் செய்ய நிறுவனம் ஏற்பாடு செய்தது. உலகமெல்லாம் பொதுவாக சனி ஞாயிறு விடுமுறை. துபாயில் வெள்ளி சனி. ஈரான்? அவர்கள் வியாழன் வெள்ளி விடுமுறை.

REPRESENTATIVE IMAGE OF MY APARTMENT IN ELAHIYEH

இரண்டு வருடங்களுக்கு என் வழக்கம் இதுதான். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு துபாய் விமான நிலையம் சென்று சனி அதிகாலை 01.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் பிடித்து 04.00 மணிபோல டெஹ்ரான் வருவேன். வணிக வகுப்பு மற்றும் கை பை மட்டும்தான் என்ற காரணத்தால் விமானம் நின்ற 10 நிமிடத்தில் வெளியே வந்துவிடுவேன். மேலும் இந்தியன் என்பதால் அவ்வளவு கெடுபிடி கிடையாது. வெளியே எனக்காக முஸ்தபா அல்லது ஹமீது காத்திருப்பார்கள். கிளம்பினால் நல்ல வாகனத்தில் 55 கிமீ பயணித்து (நான் தூங்கிவிடுவேன்) வீடு வரும்போது 04.45 போல ஆகிவிடும். அந்த இருட்டில் என் சாவியை எடுத்து கதவில் பொருத்தி பிரதான கதவை திறந்து உள்ளே நுழைந்து அடுக்கு மாடி கட்டிடத்தின் கதவை இன்னொரு சாவி போட்டு திறந்து கை பையை சுமந்து மூன்றாவது மாடிக்கு செல்லும்போது சற்று பயம் மாதிரி (ஆனால் பயமில்லை!!) இருக்கும். ஏனெனில், அந்த குடியிருப்பின் 12 வீடுகளில் பாதி வீடுகள் காலி. உரிமையாளர் அமெரிக்காவிலோ அண்டார்டிக்காவிலோ. சொற்ப குடும்பங்கள்தான் இங்கு. அதுவே அந்த 3 மாடி கட்டிடத்துக்கு ஒரு மாதிரி சூழலை உருவாக்கும். என் வீட்டிற்கு வந்து குன்றிய வெளிச்சத்தில் சாவியை பொருத்தி திறக்கும்போது ஒரு நாள் இல்லை ஒரு நாள் பேயோ திருடனோ உள்ளிருந்து என்னை தாக்கப்போவது நிச்சயம் என்று நினைப்பேன்.

இருந்தும் நான் இந்த குடியிருப்பை தேர்ந்தெடுத்ததுக்கு முக்கிய காரணம், இது டெஹ்ரானின் நல்ல வசிப்பிடங்களில் ஒன்று. (இலாஹியே). என் கட்டிடமும் நல்ல அழகான தோட்டத்துடன் மிக நேர்த்தியான வசதிகளை உள்ளடக்கியது. கூடவே பணியாள் அந்த குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே வசித்து வந்தார். சாவி அவரிடமும் இருக்கும். தினமும் பெருக்கி குளியலறையை சுத்தம் செய்து வைப்பார். சக முகவர்களும் அருகிலியே இருந்தார்கள். மேலாக வலி-ஏ-அஸ்ர் என்ற பிரதான சாலை வீட்டிலிருந்து 10 நிமிடம்.

VALI-E-ASR AVENUE

இந்த மாதிரி வீடு, மனைவி பிள்ளைகள் வரும்போது வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அந்த இடத்தை தேர்வு செய்தேன். ஒவ்வொரு வாரமும் இருட்டில் நுழைவது தவிர வேறு பெரிய பிரச்சனை இல்லை. சிறிய பிரச்சனை ஒன்று உண்டு. வீட்டில் மூன்று அறைகள். ஒரு அறை மிகவும் பெரியது. விட்டம் சுமார் 15 அடிக்கு. ஒரு மூலையில் ஒரு சேமிப்பிடம் (loft) 5X5 அடி இருக்கும், 10 அடி உயரத்தில். அவ்வப்போது அங்கிருந்து சத்தம் வருவதுபோல எனக்கு கேட்கும். அங்கே வேறு யாரோ குடும்பம் நடத்துகிறார்களோ என்று தோன்றும். ஆனால் ஏறி பார்த்ததே இல்லை.

அப்புறம் சொன்னேன் இல்லையா கை பையை தூக்கிக்கொண்டு என்று. என் பையில் ஒன்றுமே இருக்காது, சாப்பாட்டை தவிர. துணி, மணி, சோப்பு. சீப்பு எல்லாமே ஈரானில் ஒன்று துபாயில் ஒன்று. வெறும் கை வீசி போய் வரலாம். ஆனால் அங்க தான் ஒரு விஷயம் கவனிக்கணும். நான் ஈரான் போகிறேன் என்றவுடன் முக்கிய கேள்வி (மாமனார்) தம்பி சோத்துக்கு என்ன பண்ணுவார் என்று. அவருக்கு தெரியும் தம்பி 5 வருடம் மும்பையில் தனியாக குப்பை கொட்டும்போது நன்கு சமைக்க கற்றுக்கொண்டார் என்று. இருந்தும் கவலை அவருக்கு. மனைவி சொன்னபடி வெள்ளி அன்று ஏதாவது ஒரு சாதம் (தக்காளி, எலுமிச்சை, பட்டாணி என) நான்கு டப்பாக்களில் எடுத்து செல்வேன். சனி – செவ்வாய் இரவு உணவுக்கு அது சரியாகிவிடும், புதன் அலுவலகத்திலிருந்து விமான நிலையம் (சாப்பாட்டு பை மறக்கக்கூடாது) வந்து 09.30 மணி வண்டி பிடித்து இரவு வீடு வரும்போது 12.00 போல ஆகிவிடும். வியாழன் வெள்ளி ஓய்வு. வெள்ளி நள்ளிரவு திரும்ப சாப்பாட்டு மூட்டையுடன் டெஹெரான்.

மதிய உணவு அலுவலகத்தில். ஈரானியர்கள் இறைச்சியில்லாமல் உண்ண மாட்டார்கள். சீனர்கள் சொல்லவே வேண்டாம். நிறுவனத்திலோ 80% சீனர்கள். 20% ஈரானியர்கள். ஒரே இந்தியன், அடியேன். நான் முடிந்தவரை சைவம். நானோ அந்த உணவு சப்ளை நிறுவனத்திடம் எனக்கு சைவ உண்வு வேண்டும் எனக்கேட்க ஒருவாறு புரிந்து கொண்டு மசால் வடை மாதிரி ஒன்று கொடுத்தார்கள். நான் நன்றாக இருக்கிறது என்று சொல்ல தினமும் அதையே கொடுத்து என்னை கொடுமைப் படுத்தினார்கள். சரி சைவம் இங்கே ஒத்து வராது என்று இறைச்சி உண்ண ஆரம்பித்தேன். சும்மா சொல்லக்கூடாது.

DARBAND

ஈரானியர்கள் உணவு மிகவும் நன்றாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது “கோர்ம சப்சி” (கீரையும் ஆட்டு இறைச்சியும்), “அஷ் ரெஷ்ட்டெ” (கடலை சூப்) மற்றும் “டஹ்டீக்”, ஒரு விதமான தீயவிட்ட சாதம் . நாம் எப்படி உப்புமா அடி பிடிக்க செய்வோமோ (எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு?). அதுமாதிரி அவர்கள் சாதத்தை எண்ணையில் அடி பிடிக்க வைத்து பரிமாறுவார்கள். மிகவும் சுவை.

இப்போது ஒரு மாதிரி உங்களுக்கு புரிந்திருக்கும் என் ஈரான் வீட்டை பற்றியும் உணவை பற்றியும். ஊரை பார்க்கவேண்டாமா?

ஈரான் மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு. மேற்கே ஈராக். கிழக்கே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான். நிலப்பரப்பளவு இந்தியாவில்பாதி. மக்கள்தொகையோஏறக்குறைய 15இல் ஒரு பங்குதான். 8.5 கோடி. இதில் பெர்ஷிய இனத்து மக்கள் 60-65%. மீதம் அஸ்ஸேரி, குர்திஷ், துர்கிஷ், பலுச்சி, அரபி, அர்மீனியன் என பல இனங்கள். ஈரானியர்கள் மிக பெரும்பாலும் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். 1979 லிருந்து நாட்டின் அதிபர்ஷியா மதகுருதான்.

என் வேண்டுகோளுக்கிணங்க சில வாசகர்கள் சொன்னார்கள், ஈரான் என்றால் எண்ணெய், மத குருமார், ஈரான் – இராக் 10 வருட போர் என்று. நன்றி. சில பல காரணங்களால் ஈரான் என்றால் பலருக்கு, குறிப்பாக மேற்கத்திய நாட்டு மக்களுக்கு, நினைவுக்கு வருவது “தீவிரவாதம்தான்”. என் தம்பி, பல வருட அமெரிக்க பிரஜை, நான் ஈரான் செல்கிறேன் என்றதும் எதற்கும் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க சொல்லி, , எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் உண்மை நிலவரம் மிகவும் வித்தியாசமானது.

TAHDIG

ஈரான் கடந்த 1400 வருடங்களாக ஒரு இஸ்லாமிய நாடு. ஒரு காலத்தில் ஈரான் பரந்து விரிந்த பெர்ஷியன் பேரரசின் தலைமையிடம். அப்போது பெர்ஷியர்களின் மதம் ஸோரோஷ்ட்ரியன் (Zoroastrianism). ஆகவே அந்த சமுதாயத்தில் ஸோரோஷ்ட்ரியன் கலாச்சாரம் இன்றளவும் மிகவும் பிணைந்துள்ளது. ஈரானின் மிகப்பெரிய பண்டிகை “நௌ ரூஸ்” (புதிய தினம்) தான். ஸோரோஷ்ட்ரியன் புதிய வருடத்தின் முதல் நாள் இது. பெரும்பான்மை இரானியர்கள் பேசும் மொழி பெர்ஷியன். (சிறுபான்மை துர்கிஷ், குர்திஷ், அஸ்ஸேரி, அர்மீனியன்). பெர்ஷியனுக்கும் ஹிந்திக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஷாதி, ப்யார், இஷ்க், மொஹப்பத் என பல வார்த்தைகள். நான் இருந்த 2 வருடங்களில் சுமாராக பேச கற்றுக்கொண்டேன். கெய்லி மம்னூன், குதா ஹாபிஸ் என.

ஈரானின் இதய துடிப்பு என்றால் வலி-ஏ-அஸ்ர் தான். அதுவும் இந்த நௌ ரூஸ் (மார் 21) ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே களை கட்டிவிடும். குடும்பம் குடும்பமாக வந்துவிடுவார்கள். இது அது என்றில்லை. எல்லாம் கிடைக்கும். அந்த சாலையே மிக அழகு. 18 கிமீ நீளம். இரு மருங்கிலும் உயர்ந்த பச்சை பசேல் மரங்கள். நிறைய கடைகள், வணிக வளாகங்கள், சிறு பூங்காக்கள் என மக்கள் அனுபவிக்க பல உண்டு. எனக்கு மிகவும் பிடித்த இடம் “தவஸ்ஸோ” என்ற கடை. மிக சிறந்த அல்மோண்ட், வால்நட், முந்திரி, பிஸ்டேசியோ, உலர் பழங்கள் என மிக பிரபலமான கடை. வாராவாரம் விமான நிலையம் செல்லும் முன் வாங்கி செல்வேன்.

GHORMEH SABZI

அடுத்த முக்கிய அம்சம் ஈரானிய பெண்கள். மிகவும் அழகானவர்கள். உடை கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள் முகம் தவிர்த்து மொத்த உடம்பையும் மூடும்படியான “சாதோர்” (Chador) அணிய வேண்டும். நான் ஈரானுக்கு 2000 இல் பயணிக்க ஆரம்பித்தேன். 2010 வரை 100+ முறை துபாய்-டெஹ்ரான் ரூட்டில் சென்றிருப்பேன். இந்த 10 வருடத்தில் அந்த பெண்களின் உடை மிகவும் மாறிவிட்டது. சாதோர் ஓரளவுக்கு கட்டுப்பட்டு அதே சமயத்தில் கவர்ச்சிகரமாக மாறியது. சட்டப்படி பெண்கள் முகம் மட்டுமே உலகுக்கு காட்ட முடியும். எனவே அதை எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக ஆக்கமுடியுமோ அந்த அளவுக்கு செய்வார்கள். ஸ்பாவுக்கு செல்லாத பெண்கள் மிக குறைவு. பன்னாட்டு நிறுவன அலுவலங்களில் உள்ளே நுழைந்தவுடன் சாதோர் சுவரில் மாட்டப்படும். அதே மாதிரி விமானம் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய 10 நிமிடங்களில் சாதோர் பைக்குள் போய்விடும். நவீன உடை அணிவதில் இரானிய பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அடிப்படையில் ஈரானிய மக்கள் மிக முற்போக்கானவர்கள். அலுவலக பார்ட்டிகளில் அதிகம் அனுபவிப்பவர்கள் அவர்கள்தான். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சற்றே பின் தங்கியுள்ளார்கள். இதிலே இன்னும் வருத்தப்படவேண்டிய விஷயம் ஈரானின் மக்கள் தொகையில் இளைஞர்/இளைஞிகளே மிக அதிகம். ஆனால் அவர்கள் முனைப்பெல்லாம் எப்படி அமரிக்காவிற்கோ கனடாவிற்கோ குடியேறலாம் என்பதே. சமயத்தில் நினைப்பேன் ஏன் இந்த நாட்டு எண்ணெய் வளத்தை அவர்களே முற்றிலுமாக வசப்படுத்தமுடியவில்லை? நிதி ஆலோசனைக்கு கூட மற்றவரை நாட வேண்டியுள்ளது. ஆனால் அது சர்வதேச அரசியல். நான் முன்பே சொன்னதுபோல் நமக்கு சிலபஸில் இல்லை.

ஈரானிய மக்கள் ஏறக்குறைய நம் இந்திய மக்கள் போலவே குடும்பத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள். அதாவது சொத்து தகராறு, மாமன் மச்சான் சண்டை, குடும்ப அரசியல், எல்லாம் சகஜம். எனக்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களிடமிருந்து நிறைய அறிந்து கொண்டேன்.

நான் கவனித்த இன்னொரு விஷயம் ஒருவரை ஒருவர் செய்யும் பரஸ்பர விசாரிப்புகள். நம்மூரில் 2-3 வாக்கியங்களில் அடங்கிவிடும். அதிகபட்சம் எப்பிடி இருக்கீங்க. புள்ளைங்க சௌக்கியமா என்று. இளைஞர்களோ “ஹாய் மச்சானோடு” சரி. இந்த இரானியர்களோ பரஸ்பர விசாரிப்பை ஒரு கட்டுரை போல வாசிப்பார்கள். அந்த வாசிப்பின்போது வலது கை இதயத்தின் மீது இருக்கும். ஸலாம், கூபி, கூபான் என போகும் போகும். என்ன கேட்பார்கள்? வீட்டுல மாடு கன்னு போட்டதா என்றா? மாமியார் என்ன வரிசை வைத்தார்கள் என்றா? நான் கேட்டேவிட்டேன். என் நண்பர் சொன்னார் அது ஒன்றுமில்லை நீங்கள் எப்படியுள்ளீர்கள், குடும்பம் எப்படி இது போலத்தான் என்று. அதுக்கு ஏனப்பா ஒரு மேடை பேச்சு போல இவ்வளவு இழுக்கிறீர்கள் என்றதுக்கு பதில் ஒரு புன்னகைதான்.

ASH RESHTEH

அப்புறம் இந்த “பேபார்மீ”. (After You Please). நம்மூரில் ஒரு மின்சார தூக்கி (Lift) அல்லது பேருந்துவந்தால் அடித்து பிடித்து முன்னே சென்று ஏறுவது நம் உரிமை. மற்றவர் பற்றி நமக்கு என்ன கவலை. இந்த இரானியர்களோ அடித்துக்கொள்ளாத குறையாக “பேபார்மீ” “பேபார்மீ” என்று நிற்பார்கள். இதன் அர்த்தம், நான் உங்களுக்கு அப்புறம் என்று. மின்சார தூக்கி மட்டுமல்ல. மாடிப்படி, அலுவலக கதவு, உணவு விடுதி கதவு, எங்கும் “பேபார்மீ” சண்டைதான். என்ன சொல்லவருகிறேன் என்றால் பெர்சியன் மக்கள் நல்ல கலாச்சாரமானவர்கள்.

ஆனால் ஒரு மிக மோசமான விஷயம் ஈரானின் போக்குவரத்து நெரிசல். அலுவலகம் துவங்கும் முடியும் நேரங்கள் சாலை ஒரு இன்ச் விடாமல் ஆக்கிரமிக்கபட்டிருக்கும். அவர்களுக்கு பெர்ஷியனில் பிடிக்காத இரண்டு வார்த்தைகள் “பாதை ஒழுங்கு” (Lane Discipline) என்பது. எல்லோரும் எப்படியும் எங்கேயும் ஓட்டலாம். ஆனால் ஒலிப்பானை (horn) தொடவேமாட்டார்கள். நல்ல பழக்கம். (கெய்ரோ, எகிப்தில் நேர் எதிர். ஒலிப்பானிலிருந்து கையை எடுக்கவே மாட்டார்கள்). சொட்டை இல்லாத வாகனங்களை பார்ப்பது என்பது அரிது.

ஒரு பக்கம் ஈரானின் முக்கிய சாலைகளில் அமெரிக்காவிற்கு எதிரான சுவர்-ஓவியங்கள் (Grafitti) நிறைய காணலாம். அமெரிக்க தேசிய கொடியை அவமதித்து நிறைய ஓவியங்கள் உண்டு. அதே சமயம் அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் இரானியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். உள்ளூர்மயமாக்கப்பட்ட (local versions) ஜீன்ஸ், பர்கர், கோலா, ஹாட் டாக் போன்ற அமெரிக்காவின் அடையாளங்கள் ஈரானில் நிறைய பார்க்கலாம். ஏறக்குறைய 5 லட்சம் இரானியர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். பாதிக்குமேல் கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும். சிலர் இரு நாட்டின் பிரஜைகளாகவும் இருப்பார்கள். (ஈரான் அதை அனுமதிக்கிறது).

ISFAHAN MOSQUE

சில வார இறுதி நாட்கள் நான் துபாய் செல்லாமல் ஈரானில் இருப்பேன். அப்போது தவறாமல் “தாஜ் மஹால்” சென்றுவிடுவேன். இந்திய உணவை மிக உண்மைத்தன்மை மாறாமல் கொடுப்பவர்கள்.

இப்படி நல்ல மக்கள், நல்ல இடங்கள், நல்ல உணவு, மட்டமான போக்குவரத்து நெரிசல், இன்னும் ஷிராஸ் மற்றும் இஸ்பஹான் போன்ற புகழ்பெற்ற இடங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக விசாலமான வீடு எல்லாம் என் மனைவியும் மக்களும் பார்க்க வேண்டாமா. ஜூலை 2010 இல் எல்லோரும் வந்தார்கள். பார்த்தார்கள்.

முஸ்தபா தான் டிரைவர். கொஞ்சம் அதிகமாக பேசுவார். ஹமீதும் நல்ல டிரைவர். இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசுவார். பேச்சு எல்லாம் அவருடைய பெண் நண்பர்களை பற்றியே இருக்கும். என் வோட்டு முஸ்தபாவுக்குத்தான். (எனக்கா? பொறாமையா?) டெஹ்ரான் – இஸ்பஹான் – பெர்சிபோலிஸ்- ஷிராஸ் – டெஹ்ரான். ஏறக்குறைய 2000 கிமீ. சாலைகள் நன்றாகவே இருக்கும். நிசான் மாக்ஸிமா நல்ல வசதியான வண்டிதான். முஸ்தபா நல்ல ஆங்கிலம் பேசுவார். ஒவ்வொரு ஊரை பற்றியும் விவரங்களை சொல்லுவார். ஆதலால் 7 நாட்களில் 2000 கிமீ பெரிய சிரமமாக படவில்லை.

இஸ்பஹான்: டெஹ்ரானிலிருந்து 400 கிமீல் உள்ள முக்கிய நகரம். மிகவும் பெயர் பெற்ற பெர்ஷியன்-இஸ்லாமிய கட்டட கலை கொண்டு கட்டப்பட்ட நக்ஷ்-ஏ-ஜஹான் என்ற சதுக்கம் இங்குதான் உள்ளது. ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இடம் இது. இங்கு உள்ள மசூதிகள் ஒரு தனித்தன்மையுடன் வண்ண மையமாக துல்லிய வேலைப்பாடுகளுடன் இருக்கும். இதே போன்ற கட்டிட கலை அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உண்டு. காரணம் இந்த நாடுகளும் ஏதோ ஒரு காலகட்டத்தில் பெர்ஷியன் பேரரசின் அங்கமாக இருந்தவை. அந்த காரணத்தால்தான் இந்த நாடுகளிலும் இன்றும் “நௌரூஸ்” விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

NAQSH E JAHAN

எனக்கும் மனைவிக்கும் இந்த விஷயங்களில் ஆர்வம் உண்டு. பெண்கள் வேறு வழியில்லாமல் வந்தார்கள். “சாதோர்” பழக்கம் இல்லாததால் பெண்களுக்கு சற்றே அசௌகரியம். ஈரானில் பெண்கள் உல்லாச பயணிகளாக இருந்தாலும் . “சாதோர்” மாதிரி ஏதோ ஒன்று அணியவேண்டும். வழக்கமான சுடிதார், ஜீன்ஸ் டாப் போட்டால் நிச்சயம் தண்டிக்கப்படுவீர்கள். குறைந்தபட்சம் சாலைகளில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

பெர்சிபோலிஸ்: இஸ்பஹானிலிருந்து 400 கிமீ. 2500 வருடங்களுக்கு முன் பெர்ஷியன் பேரரசின் தலை நகரம். சற்றே மேலெழுப்பட்ட தளத்தில் மிக பரந்து விரிந்த நகரம். தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இருந்தும் அந்த இடத்தை சுற்றி வரும்போது நம்மால் கற்பனை செய்ய முடியும் எந்த அளவுக்கு பெர்ஷியன் பேரரசுக்கு மதிப்பும் மரியாதையும் செல்வ செழிப்பும் இருந்தது என்று. உலக சரித்திரத்தில் என்றுமே அழியா சாம்ராஜ்யம் இல்லை. பெர்ஷியன் சாம்ராஜ்யமும் அவ்வாறே ஒரு நாள் அழிந்தது. சில காரணங்களால் இந்த இடத்திற்கு தற்போதைய அரசாங்கம் முக்கியத்துவம் தருவதில்லை போல தோன்றியது.

ஷிராஸ்: அடுத்த நிறுத்தம் ஷிராஸ். நிறைய பூங்காக்கள் மற்றும் அழகிய தோட்டங்கள் உள்ள ஊர். நன்கு இளைப்பாறினோம். நல்ல இரேனியன் கபாப் சாப்பிட்டோம். ஒரு நாள் ஒன்றும் செய்யாமல் அறையில் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் 900 கிமீ பயணித்து இரவு வீடு வந்து சேர்ந்தோம்.

டெஹ்ரானின் டர்பான்ட் என்ற இடத்தை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். அழகிய மலையடிவாரத்தில் நிறைய உணவு விடுதிகள். அருமையான சூழல். இரவில் வண்ண வண்ண விளக்குகளை ஒளியேற்றி பார்க்கவே ஒரு திருவிழா கோலத்தை உருவாக்கி மக்களை கவருவார்கள். மக்களும் அந்த இடத்தை படையெடுப்பார்கள். ஈரானின் உணவுக்கு பெயர் போன இடம் இது. நாங்களும் ஒரு முறை சென்று வந்தோம். பின்னர் வலி-ஏ-அஸ்ர், கிராண்ட் பஜார், ஷாஹ் மாளிகை, தாஜ் மஹால் உணவு விடுதி என மற்ற இடங்களை சுற்றி பார்த்து மனைவியும் மகள்களும் துபாய் திரும்பினார்கள்.

PERSIPOLIS

வேறொருமுறை மனைவி மட்டும் வந்து வீட்டில் இரு வாரம் தங்கி காஸ்பியன் கடல் வரை சென்று வந்தோம். எந்த ஒரு இரானியனுக்கும் காஸ்ப்பியனில் ஒரு வீடு வாங்கவேண்டும் என்பது கனவு. அழகான கடற்கரை. சுத்தமான சாலைகள். மக்கள் தொகை குறைவு. நீண்ட விடுமுறை நாட்களில் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி அங்குதான் செல்வார்கள். அவ்வளவு பிரபலம். நங்கள் யாருக்கும் சொல்லாமல் வார நாட்களில் போய் வந்துவிட்டோம்.

உங்களுக்கு ஒன்று தெரிந்திருக்கலாம். இந்தியாவின் புகழ் பெற்ற டாடா, பாபா (Automic scientist), சாம் மானெக்க்ஷா (Ex Field Marshal), கோட்ரேஜ் எல்லோரும் பெர்ஷியர்கள். அவர்கள் முன்னோர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு இரானிலிருந்து தப்பி வந்தவர்கள். ஈரானில் இஸ்லாமிய ஆதிக்கம் வந்தவுடன் Zoroshtrians மதம் மாற நிர்பந்திக்கப்பட்டார்கள். மறுத்த சில பேர் கப்பல் மூலம் தப்பி குஜராத் மாநிலத்தில் அந்த மன்னனின் கருணையால் குடியமர்ந்தார்கள். நாம் பொதுவாக அவர்களை பார்சி என்று அழைப்போம். பார்சி, பெர்ஷியன் எல்லாவற்றிற்கும் மூலம் “பார்ஸ்” என்ற நிலப்பரப்பு. பார்சிகள் மிக புத்திசாலிகள். கடின உழைப்பாளிகள். நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்கள். இன்று பார்சிகள் மிக குறைந்த அளவே உள்ளனர். அநேகமாக சில நூற்றாண்டுகளில். இந்த மதமே இல்லாமல் போனாலும் ஆச்சரியமில்லை. நிறைய பார்ஸிகளுக்கே அவர்களுடைய பூர்வீகமும் ஈரானின் தொடர்பும் ஏதோ விட்ட குறை தொட்ட குறையாகத்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.

Iran

ஆனால் அந்த பார்சிகள் விட்டு சென்ற கலாச்சாரம் நௌரூஸ் போல பல விஷயங்களில் இன்றும் தழைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு முறை என்னிடம் யாசகம் கேட்ட ஒருவர், நான் பணம் கொடுத்தவுடன் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஆழ பதிந்துவிட்டது. அது என்னவெனில் “இந்த உதவி செய்த கைகள் என்றைக்கும் வலிக்காவண்ணம் ஆண்டவன் உன்னை பாதுகாக்கட்டும்”. அந்த கலாச்சாரத்தை பற்றி இதற்குமேல் சொல்லவேண்டுமா என்ன?

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கையில் சர்வதேச அரசியல் (நமக்கு சிலபஸில் இல்லைதான்) சதி செய்து எங்கள் நிறுவனம் ஈரானில் தொடர்ந்து ஈடுபடுவது இயலாமல் போயிற்று. எதிர்பார்த்த 3 வருடங்களுக்கு பதிலாக இரண்டு வருட முடிவில் மூட்டை கட்டி துபாய் அனுப்பிவிட்டார்கள். 2010 க்கு பிறகு நான் ஈரான் செல்லவேயில்லை. மனைவிக்கும் எனக்கும் ஆசை. மீண்டும் சென்று, இலாஹியே வீட்டை பார்த்து தாஜ் மஹாலில் உண்டு நண்பர்களை பார்த்து “கோர்ம சப்சி” சாப்பிட்டு வலி-ஏ-அஸ்ரில் நடந்து “தவஸ்ஸோ” பிஸ்டேசியோ வாங்கி வரவேண்டும் என்று. ஹ்ம்ம்ம்.

என் கடவு சீட்டில் நிறைய ஈரான் விசாக்கள் மற்றும் குடியுரிமை (Immigration) ஸ்டாம்புகள். அதுவே எனக்கு சவூதி பஹ்ரைன் எல்லைக்கோட்டை தொல்லைக்கோடாக்கியது. சவூதி பயணமும் ஈரானின் பக்கத்துக்கு நாடான ஈராக்கிற்கு AK 47 சூழ சென்று உயிருடன் திரும்பி வந்ததையும் அடுத்த வாரம் சொல்கிறேன்.

சங்கர் வெங்கடேசன் ( shankarven@gmail.com )

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.