பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அப்போதெல்லாம் பொழுது போக்க இருந்த ஒரே சிறந்த சாதனம் ரேடியோதான்.

அதிலும் ‘மெயின்ஸ் செட்’ என்றழைக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் ரேடியோக்கள் எங்கள் ஊர் மொத்தத்துக்கும் மூன்றோ நான்கோதான் இருந்தது. ‘மர்பி’ கம்பெனி ரொம்பவும் ஃபேமஸ். ஒரு சில வீடுகளில் மட்டும் ‘ட்ரான்சிஸ்டர்’ என்றழைக்கப்படும் சிறிய ரக ரேடியோக்கள் உண்டு. அவை பாட்டரியால் இயங்கக் கூடியவை! அதிர்ஷ்ட வசமாக எங்கள் வீட்டில் ட்ரான்சிஸ்டர் இருந்தது.

அந்தக் காலத்தில் ரேடியோ வாங்கச் செல்பவர்கள் கேட்கும் ஒரே கேள்வி ‘அந்த ரேடியோ சிலோன் எடுக்குமா?’ என்பதுதான். அதாவது ‘சிலோன் வானொலி நிலைய நிகழ்ச்சிகளைக் கேட்க முடியுமா?’என்று கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னர்தான் வாங்குவார்கள். ஏனென்றால் எங்கள் பகுதி சிலோனுக்கு அருகில் இருப்பதாலும், அந்த வானொலி நிகழ்ச்சிகள் அந்த நாட்களில் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டதாலும், எப்பொழுது ரேடியோவைத் திறந்தாலும் ஏதாவதொரு நிகழ்ச்சி சிலோன் ரேடியோவில் ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கும்.

அதிலும் ‘நீங்கள் கேட்டவை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது போன்றவர்களின் குரல் வளமும், அவர்கள் சொல்கின்ற தனிப் பாங்கும் இன்றளவும் மறக்கவே முடியாதவை. கே.எஸ்.ராஜா, பாடலை விரும்பிக் கேட்டவர்கள் பெயர்களைச் சொல்லும் விதமே அலாதியானது! பாடலை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவர் சொல்வதை விரும்பியும், ரசித்தும் கேட்கும்படிச் செய்து விடுவார்.

அவ்வளவு வேகமாக,அதே நேரத்தில் மிகத் தெளிவாக அவர் சொன்னவை, அரை நூற்றாண்டைக் கடந்தும் காதுகளில் ரீங்காரமிடுவதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

ஆனாலும் இன்று வரை ஒரு சின்ன சந்தேகமும் உண்டு. ’அவர் சொன்ன ரைமில் பெயர் கொண்டவர்களெல்லாம் உண்மையில் கடிதமெழுதிக் கேட்டார்களா அல்லது ரைமிற்காக கொஞ்சம் கப்சாவும் விட்டாரா?’ என்பதே அந்தச் சந்தேகம். எடுத்துக் காட்டாக,’ இந்தப் பாடலை விரும்பிக் கேட்டவர்கள் வைத்தியநாதன், ராமநாதன், பத்ம நாதன்,சாமி நாதன், குருநாதன், சிவநாதன் என்று, நடு நடுவே சில ஊர் பெயர்களையும் சேர்த்துச்சொல்வார். அடுத்த பாடலைக் கேட்டிருப்பவர்கள், ரெத்தினசாமி, பக்கிரிசாமி, ராமசாமி, கந்தசாமி, சிவசாமி, வேலுச்சாமி என்று முடிப்பார்.

Representational Image

எங்கள் பகுதி பட்டி தொட்டியெங்கும் சிலோன் ரேடியோ எதிரொலித்தது தான் எங்கள் இளமைக்காலம். பாடலுடன் கதையையும் இணைத்து, அவர்கள் பேசுகின்ற விதம், ஒரு சிறு சினிமாவைப் பார்ப்பது போலிருக்கும். டவுன்களில், டீக் கடைகளிலும், இதரக் கடைகளிலும் கூட சிலோன் ரேடியோதான் பெரும்பாலான நேரங்களில் ஒலிக்கும்.

எங்கள் ஊர் பஞ்சாயத்து போர்டுக்கு எதிரேயுள்ள மைதானத்தில், சிலோன் ரேடியோவில் பாடல்களைக் கேட்டபடி விளையாடிய அந்த நாட்கள், வாழ்வின் மிக இனிமையான நாட்கள்.

நியூஸ், ஒலிச் சித்திரம் மற்றும் புதன் கிழமை இரவு ‘நீங்கள் கேட்டவை’ போன்ற நிகழ்ச்சிகளும், நாடகங்களும் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் அப்போது பிரசித்தம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜான்.எப்.கென்னடி சுடப்பட்டு இறந்த போது, ஊர் மொத்தமும் ஒன்று கூடி பஞ்சாயத்து போர்டு ரேடியோவில் மாலைச் செய்தி கேட்டது இன்றைக்கும் பசுமையாய் மனதில் நிற்கிறது. அனைவர் முகத்திலும் சோகம் கப்பிக்கிடக்க, அந்த இடமே மயான அமைதி காத்ததை எப்படி மறக்க முடியும்?

புதன் கிழமை இரவு, 10 லிருந்து 11 மணி வரை ‘நீங்கள் கேட்டவை’, சென்னை வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்பாகும். விவசாயக் குடும்பங்களையே அதிகமாகக் கொண்ட எங்களூர், இரவு 9 மணிக்கே அமைதியாகி விடும். எனது தந்தையார் பாண்டி மில்லில் கணக்கராக இருந்ததால், எங்கள் வீட்டில் மட்டும் எப்பொழுதுமே இரவு படுக்கப் பதினொரு மணியாகி விடும். வீட்டில் ட்ரான்சிஸ்டரும் இருந்ததால் ‘நீங்கள் கேட்டவை’ எப்பொழுதுமே நாங்கள் கேட்டவை ஆகும். பஸ் போகும் சாலை எங்கள் ஊரிலிருந்து 3 கி.மீ., தள்ளியிருந்ததால், எந்தச் சப்தமும் இடையூறும் இல்லாமல் பாடல்களைக் கேட்க முடிந்தது.

Representational Image

அப்பொழுதெல்லாம் மழை ஆரம்பிப்பதற்கு முன்பாக, நல்ல மணலை வாசலில் சேமித்து வைப்பார்கள். மாட்டுக் கொட்டகைகளின் தரை ஈரமாகி விட்டால் அதன் மேல் தெளித்துப் பரப்புவதற்காக. அப்படித்தான் ஒரு சமயம், எங்கள் வீட்டு வாசலிலும் நிறைய மணலைக் குவித்து வைத்திருந்தார்கள்! அன்று பௌர்ணமி வேறு, புதன் கிழமை இரவு. மணலின் மீது கோரைப்பாயை விரித்து , முழு நிலவைப் பார்த்தபடி படுத்துக்கொண்டு, மார்பில் ட்ரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு, அந்தப் பாடல்களைக் கேட்ட சுகம்… வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. பிறவி முழுவதும் கூடவே வருவது!

‘எங்கே நிம்மதி?எங்கே நிம்மதி?

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

எங்கே மனிதர் யாருமில்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

புதிய பறவை சிவாஜிக்கும், டி.எம்.எஸ் ஸுக்கும் இறப்பே இல்லையோ!

‘கண்கள் ரெண்டும் என்று

உம்மைக் கண்டு பேசுமோ?

காலம் இனிமேல் நம்மை

ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?

பச்சைக் கிளியானால்

பறந்தேனும் தேடுவேன்!….

மன்னாதி மன்னனில் பத்மினி (சுசீலா)பாடியது அனைத்துக் காதலர்களின் ஆழ்மனத்தைத்தானே!

காதல் மட்டுமா உயர்ந்தது? பாசத்திற்கு இணையில்லை! என்று அடித்துச்

சொன்ன அந்த பாச மலர்ப் பாடல்…

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலையன்னமே

நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி

நடந்த இளந் தென்றலே!….

தேன் வந்து பாயுது காதினிலே என்று உணர்த்திய தருணங்கள் அவை!உடல், மனம் இரண்டையும் ஒன்று சேர அமைதிப்படுத்தும் தன்மை நம் திரைப்படப் பாடல்களுக்கு

உண்டென்றால் அதில் மிகையில்லை.

‘நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்

உனைப்பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போனதில்லை!

உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை!

ஓர் ஆயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்!

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்!’

உண்மையான காதலர்களுக்கு இவ்வுலகமே சொர்க்கந்தானே!

ரேடியோவுக்கு அடுத்த படியாக எமது பொழுது போக்கு, திரைப்படங்கள்தான்!

ஆனால் அடிக்கடி அது சாத்தியமில்லை!10 கி.மீ., தாண்டி, திருத்துறைப் பூண்டி செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது!எப்பொழுதும் நைட் இரண்டாவது ஷோதான். இரும்புக் குதிரைதான். ஆமாங்க… சைக்கிள்தான். எங்கள் வீட்டில் இரண்டு சைக்கிள்கள் எப்பொழுதும் இருக்கும். கையில் 2 ரூபாய் சேர்ந்து விட்டால் போதும். அதுவே பிரளயம். வாசன் தியேட்டரில் பேக் பெஞ்ச் 65 பைசா; டீ 15 பைசா; சைக்கிள் ஸ்டாண்ட்: 10 பைசா; சைக்கிளில் காற்று இறங்கினால் அடிக்க 5 பைசா. பெரும்பாலும் நானும் எனது சகோதரருந்தான் போவோம். இருவருக்குமாக 1.75 ரூபாய் இருந்தாலே போதுமானது. அதனால்தான்ரூ 2 பிரளயம் என்றேன். பாவம் என் சகோதரர். எப்பொழுதும் அவர்தான் வாகன ஓட்டி.

Representational Image

ஒரு முறை வாசன் தியேட்டரில்,சைக்கிள் ஸ்டாண்டில் கொடுத்த டோக்கனை (சிசர்ஸ் சிகரெட் டப்பா அட்டை) தொலைத்து விட்டோம். வாசலில் நின்ற காப்பாளர் அட்டை வேண்டுமென்று அடம் பிடிக்க, நாங்கள் சைக்கிள் அடையாளம் சொல்ல, அப்புறம் மானேஜர் வந்து ‘எல்லோரும் சைக்கிள் எடுத்து முடிக்கும் வரை தாமதிக்கும்படியும், வேறு யாரும் அந்த அட்டையுடன், சாரி! டோக்கனுடன் வரவில்லையென்றால் சைக்கிளைத் தருவதாகவும்’ கூற, அவ்வாறே தாமதித்து, டோக்கனுடன் யாரும் வந்து எங்கள் சைக்கிளுக்கு உரிமை கொண்டாடாததால், தப்பித்தோம்!

வேறு ஒரு தடவை ‘நான்’ சினிமா பார்த்த அனுபவமும் வேடிக்கையானது. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே மழை தூற ஆரம்பித்து விட்டது. காணும் பொங்கல் நாள் என்று ஞாபகம்.சைக்கிளை எடுத்து விட்டாலே,’பசங்க ப்ளான் பண்ணிட்டாங்க போல’ என்று, வீட்டார் ஒரு பொய்க் கோபம் காண்பிப்பது வழக்கம். ’திரும்பிப் போனாலும் பேச்சு விழப்போகிறது. எனவே தியேட்டருக்கே போய் விடுவோம்!’ என்ற முடிவுடன் கிளம்பி விட்டோம். 2 கி.மீ., ஐக் கடக்கும் முன்னரே இருவரும் தொப்பலாக நனைந்து விட்டோம். பிரஹநாயகி தியேட்டருக்கு வந்த போதும் மழை விடவில்லை.

அடிக்கடி கரண்ட் போய் வர, முதல் ஷோவே நைட் 2 மணிக்குத்தான் விட்டார்கள். உள்ளே முதல் ஷோ முடிந்து வெளியே எனது இன்னொரு மூத்த சகோதரர் வர, அவர் கண்ணில் படாமல் ஒளிந்து உள்ளே சென்றோம். இரண்டாவது ஷோ உடனே ஆரம்பிக்க, நாங்கள் டிக்கட் வாங்கியதும், மறுபடியும் கரண்ட் கட் ஆக,எங்களுக்கு ஒரே ஷாக்.தெய்வாதீனமாக உடனே கரண்ட் வந்து விட, விடியற் காலைதான் ஷோ முடிந்தது. நாங்கள் வீடு வரும் முன்னால் நன்றாகப் பொழுது விடிந்து விட,’ மழையிலுங்கூட இப்படி சினிமா பார்க்கணுமா?’ என்று வீட்டிலுள்ளோர் எகிற, வாய்மூடி மௌனம் காத்தோம்.

இப்படி ரேடியோ, சினிமா என்ற பொழுது போக்குகளுடன்தான் எங்கள் இளமைக் காலம் கழிந்தது.கோடை விடுமுறை வந்தால் அக்கா வீடுகளுக்குச் சென்று தங்குவதும் உண்டு.

Representational Image

ஒரு முறை பெரியக்கா வீட்டில் தலைஞாயிறில் தங்கியிருந்தபோது, மதியம் ஹரிச்சந்திரா நதிக்குக் குளிக்கச் சென்றோம். நதியென்றால் நுங்கும், நுரையுமாக இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடுமென்று நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால், நான் அதற்குப் பொறுப்பில்லை. அப்போது அந்த நதியின் ஓர் ஓரத்தில் சிறிதாக நீர் ஓடிக் கொண்டிருந்தது. திட்டுத் திட்டாகப் படிந்திருந்த மணலில், எனது காக்கி நிறக் கால் சட்டையையும், காபிக் கொட்டை கலர் மேல் சட்டையையும் கழற்றி வைத்து விட்டுக் குளித்தேன்.

திரும்பி வந்து பார்த்தால், மேல் சட்டை மட்டும் இருக்க, கால் சட்டையைக் காணவில்லை. எப்படி வீட்டுக்குப் போவது? எங்கே போனது கால்சட்டை? ஒன்றும் புரியவில்லை. சுற்று முற்றும் தேடியதில், கொஞ்ச தூரம் தள்ளி, நாய் ஒன்று மணலில் என் சட்டையைப் போட்டு இழுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நல்ல வேளையாக,நாங்கள் துரத்தியதும் சட்டையைப் போட்டு விட்டு ஓடி விட்டது. விஷயம் இதுதான். அப்பொழுதெல்லாம் பொட்டுக் கடலையும் சர்க்கரையும் அதிகம் சாப்பிடுவதுண்டு. சிறு வெல்லக் கட்டியைக் கால்சட்டைப் பையில் வைத்திருந்தேன்.மோப்பம் பிடித்த நாய், சட்டையையே இழுத்துச் சென்று விட்டது.

நீச்சல் கலை

வாடியக்காட்டு சின்னக்கா வீட்டிற்குச் செல்கையில் காலையில் பதநீரும், மதிய நேரத்தில் இளநீரும் தாராளமாகக் கிடைக்கும். தோப்பின் நடுவே, பூமி தெரியும் தண்ணீரில் குளிப்பது, ஆனந்தமோ ஆனந்தம்!

இடும்பவனம் உயர் நிலைப்பள்ளியில் படித்தபோது ஒரு முறை தஞ்சாவூருக்கு ‘எக்ஸ்கர்ஷன்’அழைத்துச் சென்றார்கள். தஞ்சையில் நடந்த ஓர் எக்ஸ்பிஷனைப் பார்த்து விட்டு,தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கும் சென்றோம்.மருத்துவக் கல்லூரியில்பிணத்தைக் காட்டப் போகிறார்கள் என்று கூட வந்த நண்பன் கொளுத்திப்போட, நானோ, ‘எதற்கு வந்தோம் இவர்களுடன்!’ என்று பயந்து வாட, அப்புறம் குடுவைகளில் திரவத்திற்குள் குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டும் சோதனைக் கூடத்தைப் பார்த்துத் திரும்பியதும்தான் எனக்கு உயிரே வந்தது.

சின்ன வயதில் பிணம் என்றால் அவ்வளவு பயம். தப்படிக்கும் சத்தம் கேட்டாலே பயம் வந்து ஒட்டிக்கொள்ளும்.ஏனெனில் அப்பொழுதெல்லாம் சாவு வீடுகளில் தப்புதான் அடிப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் மர நிழல்களிலும், சாவடிகளிலும் தூங்கி வழிந்து பொழுதைப் போக்குபவர்களைக் கண்டால், ’இப்படி நேரத்தை வீண்டிக்கிறர்களே!’ என்ற எண்ணந்தான் மனதில் ஓடுகிறது.ம்! எல்லாம் வயசுக் கோளாறு என்கிறீர்களா?

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

ரெ.ஆத்மநாதன்

மெக்லீன்,அமெரிக்கா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.