Press "Enter" to skip to content

கிறிஸ் கெய்ல் இல்லாமல் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் இல்லை!

வரலாற்றை மதிக்காமல் அரசியல் செய்பவர்கள் அதிகாரத்தில் அமரும்போது அவர்களின் அடையாளம் அழியத் தொடங்குகிறது. இன்று இலங்கை கிரிக்கெட்டுக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கும் அதுதான் நடந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் புதியதோர் அடையாளம் பெற்று, இன்னும் கிரிக்கெட் அரங்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் எதற்கும் அசராத ஒற்றை அசுரன் – கிறிஸ்டோஃபர் ஹென்றி கெய்ல்!

ஒரு விளையாட்டு வீரரின் தாக்கத்தை எண்களால், கோப்பைகளால், வெற்றிகளால் மட்டும் அளந்துவிட முடியாது. ஒரு மகத்தான வீரனின் முழுமையான தாக்கத்தை அதற்கடுத்த தலைமுறைகளிலும்கூட உணர முடியும். கெய்லின் தாக்கத்தை உணர, முந்தைய தலைமுறை பற்றியும் அலசவேண்டும், இன்றைய ஜென் z தலைமுறை பற்றியும் அலசவேண்டும்.

ஒரு மாபெரும் ஹீரோவைப் பார்க்கும்போது அடுத்த தலைமுறை அவர்களைப் போலவே உருவாக நினைக்கும். வாசிம் அக்ரமைப் பார்த்து பாகிஸ்தானில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் உருவெடுத்தது, சுனில் கவாஸ்கரைப் பார்த்து, மும்பையிலிருந்து பேட்டிங் படை உருவாகிக்கொண்டிருப்பது, ராபர்டோ கார்லோஸின் தாக்கத்தின் மூலம் பிரேசில் கால்பந்து அணியில் எண்ணற்ற லெஃப்ட் பேக்குகள் கலக்கிக்கொண்டிருப்பது என நிறைய உதாரணங்கள் சொல்லலாம். வெஸ்ட் இண்டீஸிலிருந்து தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்கள் வந்ததற்குக் காரணமும் அதுதான். ஆனால், எல்லாம் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.

Chris Gayle

தொண்ணூறுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பட்டறையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வருவது குறைந்துவிட்டது. பிரையன் லாரா, சந்தர்பால் என டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்கள் கோலோச்சினாலும், கிரிக்கெட் வெள்ளை உடையை புறக்கணித்து, வெள்ளைப் பந்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. சினிமாவைப் போலத்தானே கிரிக்கெட்டும் அணுகப்படத் தொடங்கியது. விமர்சகர்கள் கொண்டாடுவதை ரசிகர்கள் ஏற்பதில்லையே. பிரையன் லாரா, கரீபியத் தீவுகளில் லாராக்களை உருவாக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு ஹீரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. ஹீரோ இல்லாத ஊர், அரசியலில் இருந்து மீண்டுவிடுமா என்ன!

ஹீரோ தேவைப்பட்டவர்களுக்கு, அவர்களைப் போலவே ஒருவன் கிடைத்தான். கிறிஸ் கெய்ல்! ஃபூட் வொர்க், bat – eye coordination, டைமிங், ரிஸ்ட் மூவ்மென்ட் என்று இலக்கணம் பேசுபவர்களுக்கு மத்தியில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர், ‘அனைத்தையும் கொண்டாடுவோம்’ என்ற கரீபியர்களின் மனநிலையை களத்தில் பிரதிபலிக்கும் ஒருவர். கிரிக்கெட்டில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கிவைத்தவர்!

Gayle scored a 100 in the very first match of T20 World Cup

2005-ம் ஆண்டிலிருந்து சர்வதேச டி-20 போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், உலகம் அதை உற்றுநோக்கத் தொடங்கியது 2007 டி-20 உலகக் கோப்பைதான். அப்போதுதான் அந்த ஃபார்மட் உலகின் ஒவ்வொரு வீதியிலும் ஊடுறுவ தொடங்கியது. அது எப்படி இருக்கப்போகிறது? முதல் போட்டியிலேயே சதமடித்து ‘இதுதான் டி-20’ என்று உலகுக்கு உணர்த்தியது கெய்ல் சூறாவளி. கரீபிய ரசிகர்களுக்கு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார்!

இன்று வெஸ்ட் இண்டீஸ் என்பது டி-20 அணியாக அடையாளப்படுத்திருக்கிறது. கெய்ல், ஈவின் லூயிஸ், சிம்மன்ஸ், ஹிட்மெயர், பூரன், டுவைன் ஸ்மித், ரஸல் போன்ற முரட்டு ஹிட்டர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் எங்கிருந்து தொடங்கியது? இன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் IPL, CPL, பிக்பேஷ் போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறோம். ஆனால், IPL தொடரின் தொடக்க கட்டத்தில் எந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்கு ஆடினார், எப்படி ஆடினார் என்று நினைவிருக்கிறதா?

He’s always the Boss!

சூப்பர் கிங்ஸுக்கு வருவதற்கு முன் டுவைன் பிராவோ, டுவைன் ஸ்மித் செய்தது என்ன? தொடக்க ஆண்டுகளில் ஆண்ட்ரே ரஸல் செய்தது என்ன? பஞ்சாபில் சர்வான், RCB-யில் சந்தர்பால் ஃபெயிலியர்கள்தான். சொல்லப்போனால் கெய்ல் கூட ஃபெயிலியர்தானே!

2011 – அனைத்தையும் மாற்றியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடையணிந்து தன் உண்மை முகத்தை கெய்ல் காட்ட, IPL வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் இரண்டாவது ஹோமாக மாறத் தொடங்கியது. 2010-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் ஒரேயொரு போட்டியில் மட்டும் 160 ரன்களைக் கடந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் (அதுவும் கெய்லின் தயவால்), 2012-ல் சாம்பியன். காரணம், ஒவ்வொருவரும் கெய்ல் போட்ட பாதையில் பயணித்தது!

வெஸ்ட் இண்டீஸ் புதியதோர் அடையாளம் பெற்றது. டி-20 உலகக் கோப்பை புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியது. அது அவர்களின் ஃபார்மட் ஆனது. அடுத்த தலைமுறை அதைக் கவனிக்கத் தொடங்கியது. நினைத்துப் பாருங்கள், புனே வாரியர்ஸுக்கு எதிராக இவர் 175 ரன்கள் விளாசுவதைப் பார்த்த 15 வயது ஹிட்மேயரும், 16 வயது நிகோலஸ் பூரணும், இன்று இப்படி ஆடுவதில் ஆச்சர்யம் இருக்கிறதா? அவர்கள் கெய்லின் பாதையில் பயணிப்பதில் அதிசயம் இருக்கிறதா!

After destroying Pune Warriors India

இன்று டி-20 கிரிக்கெட்டை அழித்துக்கொண்டிருக்கிறது என்று விமர்சிக்கிறோம். மாற்றுக் கருத்து இல்லை. அப்படியிருக்கும்போது டி-20 ஃபார்மட்டில் மட்டும் கவனம் செலுத்தும் கரீபியர்களை, அதற்குக் காரணமான கெய்லையும் கொண்டாடுவது சரியா என்ற கேள்வி எழலாம். இலங்கையை யோசித்துப் பாருங்கள். அந்த அணியைப் போல் மொத்தமாகப் பள்ளத்தில் விழாமல் ஓரளவேனும் கிரிக்கெட்டோடு தொடர்பில் இருப்பதற்காகவாவது வெஸ்ட் இண்டீஸைக் கொண்டாடியாகவேண்டும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் என்று எல்லா அணிகளும் பாதாளம் போனபின், இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடித்தான் என்ன பிரயோஜனம்! இப்போது நினைத்துப் பாருங்கள், கெய்ல் என்றொருவர் இல்லாமல் இருந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் இப்போது என்னவாகியிருக்கும்.

ஒரு முக்கியமான விஷயத்தையும் விவாதிக்கவேண்டும். கெய்லின் அணுகுமுறைதான் வெஸ்ட் இண்டீஸில் இந்தப் புரட்சிக்கு வித்திட்டதே தவிர, கெய்லை டி-20 வீரர் என்று அடையாளப்படுத்திவிட முடியாது. அவர் அதிரடி வீரர். எந்த நிற பேதமும் இல்லாதவர். ஜெர்ஸியின் வண்ணம் அவருக்குப் பெரிதில்லை. பந்தின் வண்ணம் பற்றிக் கவலையில்லை. அவர் நிற்கும் மைதானத்தில் பறக்கும் தேசியக் கொடியின் வண்ணம் பற்றியும் பிரச்னையில்லை. கெய்லை நோக்கிப் போகும் பந்துகள் பௌண்டரிகள் நோக்கிப் பறக்கும். அது சிவப்பு நிற கூக்கபரா பந்தாக இருந்தாலும், வெள்ளை நிற SG பந்தாக இருந்தாலும் எல்லைகள் நோக்கிப் பறக்கும்.

Pooran is Just looking upto him!

இப்போது எல்லா டி-20 தொடர்களிலும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார். ’42 வயதிலும் டி-20 ஆடுகிறார். அப்படி என்ன சம்பாதிக்கவேண்டும்’ என்றுகூடக் கேட்கலாம். அவரிடம் இப்போது போய் மைக்கை நீட்டினாலும், தன்னை டெஸ்ட் அணியில் சேர்க்காத தேர்வாளர்களைக் கடித்துக் குதறுவார். ‘நாளை தேர்வு செய்தாலும் வந்து விளையாடுவேன்’ என்பார். அவருக்கு ஃபார்மட்களோ, பணமோ தேவையில்லை. மூப்பின் தாக்கம் அந்த நரம்புகளைச் சோடை போகச் செய்யும்வரை பந்துகளைப் பறக்கவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்!

More from cricketMore posts in cricket »