கல்லூரிக் காலத்தில் என் வகுப்புத் தோழனும் நானும் காதலித்தோம். முதல் இரண்டு வருடங்களில் சிறந்த நண்பர்களாகப் பழகிய நாங்கள், அடுத்த இரண்டு வருடங்களில் பரஸ்பரம் எங்கள் காதலைத் தெரிவித்து, காதலிக்க ஆரம்பித்தோம்.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வேலையில் சேர்வது,

இரண்டு வருடங்கள் சம்பாதித்த பின்னர் இருவரது வீட்டிலும் காதலைச் சொல்வது,

திருமணத்துகுப் பின்னர் உடனடியாக இருவரும் லோன் போட்டு வீடு வாங்குவது,

இரண்டு பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்வது வரை எங்கள் எதிர்காலத்தை ஒரு கனவு வாழ்க்கையாக பேசிப் பேசியே வாழ்ந்து பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், படிப்பை முடித்தபோது எனக்கு வேலைகிடைத்துவிட, அவர் வேலைக்கு முயன்றுகொண்டிருந்தார். அப்போது என் அம்மாவுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட, உறைந்துபோனோம் வீட்டில். அதிகபட்சம் ஆறு மாதங்கள் என்றார்கள் மருத்துவர்கள். நான் வேலையை விட்டுவிட்டு அம்மாவுடனேயே இருந்து அவரை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தேன். அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே மகள் என்பதால், உடனடியாக என் திருமணத்தை நடத்த வேண்டும் என்றார் அம்மா. அம்மாவிடம் என் காதலைப் பற்றிச் சொன்னேன். அதை என் அம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கூடவே, `இதை உங்கப்பாகிட்ட சொன்னா, அவர் தாங்கமாட்டார். ஹார்ட் பேஷன்ட்டான அவரை நினைச்சா எனக்கு பயமா இருக்கு’ என்று அழ ஆரம்பித்தார். என் கவலையால் அவரது நோய் இன்னும் தீவிரமாகியது. சாப்பாடு, மருந்துகளை மறுக்க ஆரம்பித்தார்.

Love

Also Read: ஒரே மகளின் இழப்பு; சொத்துக்காக உரசிக்கொள்ளும் சொந்தங்கள்; எங்கள் நிம்மதிக்கு என்ன வழி? #Penndiary 31

இன்னொரு பக்கம், அப்பா இன்னும் விரைவாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். `நாலு மாசமோ ரெண்டு மாசமோதான் நான் உயிரோட இருப்பேன்… உன் கல்யாணத்தைப் பார்க்குற சந்தோஷத்தை எனக்குக் கொடுக்க மாட்டியா…’ என்று மரணப்படுக்கையில் இருந்த என் அம்மா கேட்டபோது, என்னால் அதை மீற முடியவில்லை. உறவில் ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்தனர். காலத்தால் சூறையாடப்பட்ட காதல்களில் எங்கள் காதலும் ஒன்றானது. என் நிலைமையை என் காதலர் புரிந்துகொண்டார். தொடர்பை நிறுத்திக்கொண்டோம்.

எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. அம்மா மறைந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. என் காதலருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது என்று கேள்விப்பட்டேன்.

என் கணவர் மிகவும் அன்பானவர். ஆனால், அவருக்கே உரிய பிடிவாதங்களும் கோபங்களும் உண்டு. இந்நிலையில், என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தபோது, பணியாளர்களின் குடும்பத்தினரும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தபோது, என் முன்னாள் காதலரை அங்கு பார்த்தேன். இவரும் இதே அலுவலகத்தில்தான் பணிபுரிகிறாரா என்று கலவரமானேன். பதற்றத்தில் நான் மணித்துளிகளைக் கடத்திக்கொண்டிருக்க, அவருடன் ஒரு பெண் காணப்பட்டார். அவரின் மனைவியாக இருக்கலாம் என்று நினைத்தேன். என் முன்னாள் காதலரும் என்னைப் பார்த்துவிட்டாலும், அவரும் என்னிடம் வந்து பேசவில்லை. என்னைப் போன்றே அவரும் தர்மசங்கடத்தில் இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

woman (Representational image)

Also Read: என் சம்பாத்தியத்தில் என் பெற்றோருக்கு உதவக் கூடாதா? தடுக்கும் கணவர், வலுக்கும் விரிசல்! #PennDiary

என் கணவர் ஒரு பெண்ணை தன்னுடன் வேலைபார்ப்பவர் என்று அறிமுகப்படுத்த, என் மனம் இன்னும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. காரணம், என் முன்னாள் காதலரின் மனைவிதான் என் கணவருடன் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. அந்தப் பெண்ணும், `இவர் என் கணவர்’ என்று அவரை அழைத்துவந்து அறிமுகப்படுத்த, அந்த கணத்தின் கொதிப்பை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. ஒருவழியாக அன்று நிகழ்வு முடிந்து அங்கிருந்து கிளம்புவதற்குள் மிகவும் தவித்துப்போய்விட்டேன். வீடு வந்து சேர்ந்ததும்தான் பதற்றம் தளர்ந்தது.

மறுநாள் என் கணவர், “ஆபீஸ்ல இன்ட்ரடியூஸ் பண்ணினேன்ல ஒரு பொண்ணு… அவங்க உன் நம்பர் கேட்டாங்க, கொடுத்திருக்கேன். சும்மா பேசத்தானாம்…” என்றார். என் மனம் அப்படியே ஒடுங்கி நடுங்கிவிட்டது. என்ன, ஏது என்று ஒன்றும் புரியாமல் பரிதவித்தபடி இருந்தேன். அன்று மாலை அந்தப் பெண் பேசினார். “உங்களைப் பத்தி என் ஹஸ்பண்ட் திருமணம் முடிஞ்சதுமே சொல்லியிருக்கார். சொல்லப்போனா, எனக்குமே ஒரு லவ் ஃபெயிலியர் இருக்கு. அதையும் நான் அவர்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, எங்க ஆஃபீஸ் நிகழ்ச்சியில உங்களைப் பார்த்ததுல அவர் ரொம்ப சர்ப்ரைஸ் ஆகிட்டார், ஷாக் ஆகிட்டார்…” என்று ஆரம்பித்து, கடகடவெனப் பேசிக்கொண்டே போனார். நானும் என் பதற்றத்தை சமாளித்துப் பேசினாலும், இறுதியாக, “என் ஹஸ்பண்ட்க்கு இது எதுவுமே தெரியாது. அவர் ஆர்த்தோடாக்ஸ் டைப். இதையெல்லாம் சுலபமா அவருக்குக் கடக்கத் தெரியாது. அதனால அவர்கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்…” என்றேன். “ஓ.கே… சொல்லமாட்டேன்…” என்றார்.

அதற்குப் பின் அவரிடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் இல்லை.

ஆனால் அந்த உரையாடலுக்குப் பின்னர், தினமும் என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது எல்லாம், இன்று இவருக்கு என் முன்னாள் காதல் பற்றி ஏதாவது தெரியவந்திருக்குமோ என்ற பயம் என்னைப் பிடித்துக்கொள்கிறது. அவர் சகஜமாக பேச ஆரம்பித்த பிறகுதான் எனக்குப் பெருமூச்சு விடமுடிகிறது. “எனக்கும் ஒரு லவ் ஃபயிலியர் இருந்தது, அதை நான் அவர்கிட்ட சொல்லிட்டேன்” என்று அந்தப் பெண் சொன்னதுபோல, ஏன் இதை என்னால் என் கணவரிடம் சொல்ல முடியவில்லை என்பதை நினைக்கும்போது, அந்தப் பெண் மீது ஒரு சின்னப் பொறாமை எழுந்து அடங்குகிறது. என் முன்னாள் காதலர் தன் மனைவியின் காதல் காலத்தை புரிந்துகொண்டதுபோல, என் கணவரால் ஏன் என்னை புரிந்துகொள்ள முடியாது என்று கேள்வி எழுகிறது. ஆனால், இந்த ஒரு வருடத்தில் அவரை புரிந்துகொண்ட வகையில் அதற்கான வாய்ப்பே இல்லை, அவர் என் மீது பொசஸிவ் ஆகவோ, சந்தேகப்படவோ, அல்லது எனக்கு ஒரு காதல் இருந்தது என்பதில் அவர் தனது தன்னம்பிக்கையை இழக்கவோ செய்யலாம் என்பதே என் கணிப்பு.

Woman (Representational Image)

Also Read: மறைந்த கணவர்; பிறந்த வீடு, புகுந்த வீட்டினரால் பொசுங்கும் மனம்; இதற்கு தீர்வு என்ன? #PennDiary 32

இன்னொரு பக்கம், அந்தப் பெண் நேரடியாக என் கணவரிடம் என்னைப் பற்றிச் சொல்லவில்லை என்றாலும்கூட, அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் யாரிடமாவது விளையாட்டாக, “இவர் மனைவியைத்தான் என் கணவர் காலேஜ் டேஸ்ல லவ் பண்ணினாராம்” என்று சொல்லப்போக, அது இவர் காதுக்கு வந்துவிடுமோ என்றெல்லாம் என் மனம் கற்பனை செய்து நிம்மதியைத் தொலைக்கிறது. ஏதோ ஒரு வழியில் என் கணவருக்கு இது பற்றி தெரியவரும்போது, “இதை ஏன் நீ என்கிட்ட முதல்லயே சொல்லல?” என்று அவர் கேட்டால், அவர் மன நிம்மதி இழக்காதிருக்கட்டும் என்பதால்தான் நான் சொல்லவில்லை என்பதை நான் சொன்னால் அதை அவர் நம்புவாரா என்றும் கண்ணாடி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

இந்த இக்கட்டான, தர்மசங்கடமான, ஆபத்தான சூழலை நான் எப்படித்தான் எதிர்கொள்வது?!

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!

தோழிகளே… இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.