ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலை முற்றிலும் பெண்களால் மட்டுமே இயக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஓலா மின்சார ஸ்கூட்டர்கள், அண்மைக் காலத்தில் மோட்டார் வாகனத் துறையில் பேசுபொருளாகியிருக்கிறது. அறிமுகம் தொடங்கி விநியோகம் வரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பலவித புது முறைகளைக் கையாண்டு வருகிறது. இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள ஓலா நிறுவனம், தனது நிறுவனத்தில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஓலா மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை, முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் என்றும், இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கென வாகனத் தயாரிப்பு குறித்த முழுப் பயிற்சியும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு அந்தப் பொறுப்பு முழுவதும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையில் இந்த பணியமர்த்தல் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது முதல்கட்டமாக 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை உருவாக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு, ஆண்டுக்கு 1 கோடி மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக ஓலா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஓலா நிறுவனம், பெண்களின் பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் விதமாக எடுத்துள்ள இந்த முடிவு, சமூகத்தை மேம்படுத்தும் எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஓலா நிறுவனத்தின் இந்த திட்டத்துக்காக, கடந்த ஆண்டே 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ராணுவத்தில் பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பாதுகாப்புத் துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனாலும் ராணுவத்தின் எந்தப் பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற முடியும் எனும் அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தலையிடவில்லை.

image

பெரும்பாலும் ஆண்களே தலைமை வகிக்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பில் தற்போதுதான் குறிப்பிட்ட அளவில் பெண் நீதிபதிகளும் பதவி வகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்நிறுவனங்களின் தலைமை குழு உறுப்பினர்களில் பெண்களை அதிகம் ஈடுபடுத்த அந்நிறுவனங்களை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. ஆனாலும், இதற்கான வரைமுறைகள் ஏதுமில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு நிறுவனங்களில் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்தார். அது 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. பெண்களுக்கான இது போன்றதொரு இட ஒதுக்கீடு இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லை. அதேபோல 1990இல் திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற திமுகவின் முன்னெடுப்பை தனது ஆட்சிக்காலத்தில் 50 சதவிகிதமாக அறிவித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

image

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதைப் போல, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் அதுதான் பெண்களுக்கு வழங்கப்படும் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்கும். ஆனால் அதற்கான போராட்டம் இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. தனியார் வேலைவாய்ப்புத்துறை பயிற்றுனர் ஜனனி கூறுகையில், ”ஓலாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இது முதன்முறை என சொல்லமுடியாது. மற்ற நிறுவனங்களில் கூட பெண்களின் பங்கு உண்டு. ஆனால், அது 20சதவீதம், 30 சதவீதம் என்று தான் இருக்கும். ஆனால் பெண்களால் நிர்வகிக்கப்படும் என கூறியது இது தான் முதன்முறை.

எலக்ட்ரிக் வாகனங்கள் என்பது புதிய துறை. இதில் ஒட்டுமொத்தமாக பத்தாயிரம் பணியாளர்கள் கிடைப்பது சவாலாக இருக்கும். பணியமர்த்துவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். கடந்த 20 வருடங்களாக பெண்கள் கடுமையான வேலைகளில் கூட ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது சமூகத்தில் நிகழ்ந்த மாற்றம்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.