டெல்டா மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்வதற்காக கார் மூலம் கஞ்சா கடத்திவந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர், பிரபல கஞ்சா வியாபாரியான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த குஷ்பு என்கிற அன்பு செல்வன் உள்ளிட்ட ஒன்பது பேரை கும்பகோணத்தில் கைதுசெய்தது தனிப்படை போலீஸ். அவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா, இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிரபல கஞ்சா வியாபாரியான குஷ்பு என்கிற அன்புசெல்வன்

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்டவற்றில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், கடல்வழியாகத் தொடர்ச்சியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாகவும் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதக் கும்பலைப் பிடித்து கஞ்சா விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கையை டி.ஐ.ஜி மேற்கொண்டார்.

இதற்காக தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யின் தனிப்படை பிரிவு ஆய்வாளர் மணிவேல், உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், கந்தசாமி உள்ளிட்ட போலீஸார் தலைமையில் தனிப்படை அமைத்து டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீஸ் கஞ்சா விற்பனை நடைபெறும் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்

இதில் நாகப்பட்டினம் வ.உசி தெருவைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான குஷ்பு என்கிற அன்புசெல்வன் (39) என்பவனை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அன்புசெல்வனின் கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி சரவணன் (42), சென்னை, ஈஞ்சம்பாக்கம் கவுதம் (31), அன்புசெல்வன் ஆகியோர் கஞ்சாவை ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள பாடகிரி மலைப்பகுதியிலிருந்து வாங்கி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதும், படகு மூலம் இலங்கைக்குக் கடத்திவருவதும் தெரியவந்தது.

இந்தநிலையில், ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் ஒன்று அன்புச்செல்வன் கூட்டாளிகளுக்கு கஞ்சாவைக் கொடுப்பதற்காக விசாகப்பட்டனத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நோக்கி காரில் கஞ்சாவைக் கடத்திவருவதாக, தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கார்களில் வந்த கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்துடன் அவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சாவையும், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் கைதுசெய்த கஞ்சா கடத்தல் கும்பல்

இது குறித்து தனிப்படை போலீஸ் தரப்பில் பேசினோம், “கார் மூலம் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சா கடத்திவந்த கும்பலைக் கைதுசெய்து 120 கிலோ கஞ்சாவையும், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இதில் ஆந்திராவைச் சேர்ந்த குடபிரதாப்சந்த், பத்ரி, மகேஸ்வரராவ், ரவி, சந்திரா, அப்பாராவ் ஆகியோரையும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரபல கஞ்சா வியாபாரியான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த குஷ்பு என்கிற அன்புசெல்வன், சரவணன்,கவுதம் ஆகியோரையும் கைதுசெய்தோம்.

Also Read: `கஞ்சா விற்பனை; தகவல் சொன்னதால் விபரீதம்!’ – முன்னாள் கவுன்சிலர் கொலையில் கேங்ஸ்டருக்குத் தொடர்பு?!

கஞ்சா விற்பனை தொடர்பாக மொத்தம் ஒன்பது பேரைக் கைதுசெய்திருப்பதுடன் அவர்களிடம் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினம் மலைப்பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பொட்டலத்தை ரூ 4,000 ரூபாய்க்கு வாங்கி வந்து டெல்டா மாவட்டங்களில் ரூ.22,000-க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.