2016 ரியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா நான்கு பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இப்போது டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறது. சாதாரணமாக விடிந்த ஞாயிறுக்கிழமை (29-08-2021) சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது.

நேற்று காலையில் பவினா படேல் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். மாலையில் தடகள போட்டிகள் நடைபெற்றது. உயரம் தாண்டுதல் T47 பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் நிஷாத் குமாரும் ராம் பாலும் பங்கேற்றிருந்தனர்.

20 வயதே ஆகும் நிஷாத் குமார் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். சிறுவயதில் நடைபெற்ற விபத்தில் வலக்கையை இழந்தவர். இந்த பாராலிம்பிக்ஸிற்கு முன்பாகவே ஒரு தொடரில் 2.06 மீட்டருக்கு உயரம் தாண்டி ஆசிய ரெக்கார்ட் வைத்திருந்தார். அப்போதே இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கையாக நிஷாத் உயர்ந்துவிட்டார்.

நிஷாத் குமார்

நேற்றைய போட்டியிலுமே தொடக்கத்திலிருந்தே மிகச்சிறப்பாக பர்ஃபார்ம் செய்திருந்தார். 2.02 மீட்டருக்கு உயரம் தாண்டிய போதே நிஷாத்துக்கு பதக்கம் உறுதியாகிவிட்டது. அடுத்த வாய்ப்பில் அவருடைய தற்போதைய ஆசிய ரெக்கார்டான 2.06 மீட்டரையும் வெற்றிகரமாக தாண்டினார். தொடக்கத்தில் சிறப்பாக ஆடியிருந்த ராம்பால் வாய்ப்புகள் செல்ல செல்ல சொதப்பி பதக்க வாய்ப்பை இழந்திருந்தார்.

இந்த போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் வட்டு எறிதல் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அதில், இந்தியா சார்பில் 41 வயதாகும் வினோத் குமார் பங்கேற்றிருந்தார். வட்டு எறிதலில் மொத்தம் 6 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் சிறப்பாக வீசும் ஒரு வாய்ப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். வினோத்துக்கு வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளையுமே Foul வாங்காமல் முறையாக வீசியிருந்தார். ஐந்தாவது வாய்ப்பில் 19.91 மீட்டருக்கு வட்டை வீசியிருந்தார். இது ஆசிய ரெக்கார்டாக பதிவானது. இந்த பெர்ஃபார்மென்ஸ் மூலம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். கடைசியாக 3 வீரர்கள் வட்டை வீச வேண்டியிருந்தது. வினோத்துக்கு பதக்கம் கிடைக்குமா என்பது இவர்களின் பெர்ஃபார்மென்ஸை பொறுத்தே அமையும் என்ற பரபரப்பான சூழல் உருவானது. மூன்று பேரில் குரோஷியா வீரர் மட்டுமே வினோத்தை விட சிறப்பாக வீசினார். இதனால் இறுதியில் வினோத்துக்கு வெண்கல பதக்கம் கிடைத்திருந்தது.

வினோத் குமார்

ஒரே நாளில் இப்படி 3 வீரர்/வீராங்கனைகள் உலக அரங்கில் பதக்கம் வென்று கொடுத்திருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக பார்க்கப்படுகிறது. டோக்கியோ பாராலிம்பிக்ஸிற்கு முன்பு வரை பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் மட்டும் இந்தியா 12 பதக்கங்களை வெல்லும் என கணிப்புகள் வெளியாகியிருந்தது. இது கொஞ்சம் அதீத எதிர்பார்ப்பாகவே கருதப்பட்டது. யாருக்கும் அந்த இரட்டை இலக்க பதக்க லட்சியத்தில் பெரிதாக நம்பிக்கை இருந்திருக்கவில்லை. ஆனால், நேற்றைய ஒரு நாள் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது. இந்தியா இரட்டை இலக்கத்தில் நிச்சயம் பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றிகள் ஆழமாக ஊன்றியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.